வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!

மகாத்மா காந்தியின் சரிதத்தை வெளிநாட்டுக்காரர்தான் அச்சு அசலாக தத்ரூபமாக சினிமாவாக எடுத்தார் என இன்றைக்கும் பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அதேபோல், கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்து, தமிழகத்துக்கு வந்த பி.ஆர்.பந்துலு, தமிழகத்தில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதில் ஆர்வமாக இருந்தார்.

இந்திய அளவில் உள்ள முக்கியமான இயக்குநர்களில் பி.ஆர். பந்துலுவுக்குத் தனியிடம் உண்டு.

கர்நாடக மாநிலம், கோலார் எனும் ஊரில், 1910 ஜூலை 26-ம் தேதி பிறந்தார் பந்துலு. பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பதுதான் முழுப்பெயர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வமும் நாட்டமும் கொண்டிருந்தார்.

பணத்துக்குக் குறைவில்லை. வேலைக்குப் போக வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. எனவே சினிமாவில் தன் தேடுதலைத் தீவிரப்படுத்தினார்.

1937-ல் ‘ராஜபக்தி’ எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய கதாபாத்திரம்தான் என்றபோதும், படத்தைப் பார்த்த பலரும் இவரின் நடிப்பை மெச்சினார்கள்.

‘தானசூர கர்ணா’, ‘திலோத்தமா’ என்றெல்லாம் படங்கள் வந்தன. தொழில்நுட்பம் பெரிதாக வளராத அந்தக் காலகட்டத்தில், இவருக்கு நடிப்பதற்கான ரோல் என்பது சிறியதுதான்.

ஆனால் படம் முழுக்க அங்கேயே இருப்பார். எல்லா வேலைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தார். ஒரு படம் ஆரம்பமாகி தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீஸ் செய்கிற ஏ டூ இஸட் முழுவதையும் கற்றறிந்தார்.

இந்தச் சமயத்தில், கன்னடத்திலும் பந்துலுவுக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தபடி இருந்தன. 1952-ல், கலைவாணரின் ‘பணம்’ படத்தில் சிவாஜி நடித்தார்.

அதே படத்தில் பி.ஆர். பந்துலுவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அதே ஆண்டில் ‘பராசக்தி’ வெளியாகி, தமிழகம் முழுவதும் சிவாஜி பற்றிய பேச்சுகள், பட்டாசாய் சரவெடியென வெடித்துக் கொண்டிருந்த நேரம்.

அதன் பிறகு சிவாஜிக்கு மளமளவென படங்கள். 1954-ல் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ எனும் சிவாஜி படத்திலும் பி.ஆர். பந்துலு நடித்தார். இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது.

1957-ல், சிவாஜியை அணுகினார். படம் இயக்குவது குறித்தும் தயாரிப்பதும் குறிப்பதும் தெரிவித்தார். “நான் என்ன செய்யணும் பந்துலுண்ணே?’’ என்றார் சிவாஜி. ’உங்களோட தேதி வேணும். நீங்கதான் நடிக்கணும்’’ என்றார்.

“அதுக்கு ஏன் தயங்கறீங்கண்ணே. நடிச்சிருவோம்’’ என்று சிவாஜி சொல்ல, இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ‘பத்மினி பிக்சர்ஸ்’ எனும் பேனரில் சொந்தமாகப் படங்களை எடுக்கத் தொடங்கினார் பந்துலு.

‘தங்கமலை ரகசியம்’ உருவானது. 1957-ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த வருடம் மீண்டும் இருவரும் இணைந்து ‘சபாஷ் மீனா’ தந்தனர். படம் சக்கைப்போடு போட்டது. இதில் சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். வயிலு வலிக்கச் சிரிக்கச் செய்திருப்பார் பந்துலு.

இதற்கு அடுத்த வருடமும் சிவாஜி கால்ஷீட் கொடுத்தார். தமிழின் முதல் கேவா கலர்ப் படமாக மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க, எம்ஜிஆர் நடிப்பில் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ வெளியாகியிருந்தது.

தமிழின் முதல் டெக்னிக் கலர்ப் படமாக சிவாஜியை வைத்து பந்துலு உருவாக்கினார். அதுதான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

இன்றைக்கும் நம் கண்முன்னே கட்டபொம்மன் என்றால் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம்தான். சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கினார் பந்துலு.

1960-ல் ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ என்ற படத்தை இயக்கினார். இதிலும் சிவாஜி நடித்தார். ஆக, வருடத்துக்குப் பல படங்களில் சிவாஜி நடித்தார்.

வருடம் தவறாமல், பந்துலுவுடன் கைகோக்கவும் செய்தார். 1961-ம் ஆண்டிலும் சிவாஜியும் பந்துலுவும் இணைந்தார்கள்.

“என்னை கட்டபொம்மனாக்கினீங்க. இப்போ என்னை என்ன செய்றதா உத்தேசம்?’’ என்று சிவாஜி உற்சாகத்துடன் கேட்டார். ”உங்களை வ.உ.சி.யாக்கப் போறேன்’’ என்றார் பந்துலு. பதறிப்போனார் சிவாஜி.

“என்ன பந்துலுண்ணே விளையாடுறீங்க? கட்டபொம்மனைப் பாத்தவங்க யாருமே இல்லை இப்போ. நாம எப்படி வேணாலும் நடிக்கலாம். வ.உ.சிதம்பரனாரைப் பாத்தவங்க, அவரோட குடும்பத்தார்னு இருக்காங்களே.

 “தப்பாயிடப்போவுது’’ என்றார் சிவாஜி. “உங்களால முடியும். சும்மா குழந்தை மாதிரி அடம்பண்ணாதீங்க’’ என்று பந்துலு சொல்லி ஒப்புக்கொள்ளவைத்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளிநாடு வரை சிவாஜியின் நடிப்பாற்றலைக் கொண்டு சேர்த்தது. கெய்ரோ விழாவில் சிவாஜிக்கு மரியாதைகள் செய்யப்பட்டு பாராட்டப்பட்டன.

‘கப்பலோட்டிய தமிழன்’ வேறொரு விதமாக சிவாஜிக்குப் புகழ் சேர்த்தது. அதில் சிங்கம் போல் கர்ஜித்தவர், இங்கே சாந்த சொரூபியாக, அமைதியே உருவானவராக, தன் உடல்மொழியையே மாற்றினார்.

பல இடங்களில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, கண்ணீர் விட்டு, ஓடிவந்து சிவாஜியைத் தழுவிக் கொண்டாராம் பந்துலு.

டத்தில் சிவாஜியைப் பார்த்த வ.உ.சி.யின் குடும்பத்தார், ‘அப்படியே அப்பாவைப் பாக்கற மாதிரியே இருந்துச்சு’ என்று காலில் விழுந்து வணங்கினார்களாம் சிவாஜியை!

1961-ல் ‘கப்பலோட்டிய தமிழன்’. அடுத்த வருடத்தில், பந்துலுவின் புதிய முயற்சி. அப்போது சிவாஜியும் பயங்கர பிஸி.

மிகக்குறுகிய நாட்களில், தரமான நகைச்சுவைப்படத்தை எடுத்தார் பந்துலு. அதில் ஒரு சிவாஜி, இரண்டு சிவாஜியெல்லாம் இல்லை. மூன்று சிவாஜி.

அந்தப் படம் ‘பலே பாண்டியா’. சிவாஜி, முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த படம் இதுதான். குறுகிய நாட்களுக்குள் எப்படி இந்தப் படத்தை எடுத்தார் பந்துலு என்று இன்றுவரைக்கும் வியந்துகொண்டிருக்கிறது திரையுலகம்.

அந்தத் திட்டமிடலும் நேர்த்தியும்தான் பந்துலு எனும் அசாத்தியக் கலைஞனின் வெற்றிக்கான அஸ்திவாரம்!

1964-ல், சிவாஜியை வைத்து ‘கர்ணன்’ உருவாக்கினார் பந்துலு. அப்போதே அத்தனை செட்டுகள் போட்டு, அவ்வளவு கலைநயத்துடன் அப்பேர்ப்பட்ட பிரம்மாண்டம் காட்டியிருப்பார் பந்துலு.

பத்து வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தை டிஜிட்டலில் கொண்டுவந்து ரீ ரிலீஸ் செய்தபோது, எழுபது நாட்களைக் கடந்து சத்யம் முதலான பல தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.

‘ஒரு படத்தை எப்படிக் கொடுக்க வேண்டும், சிவாஜியை எப்படியெல்லாம் காட்டினால் ரசிகர்களுக்குப் பிடிக்கும், படத்தில் இருந்து லாபம் கிடைக்க என்ன வழிகளெல்லாம் இருக்கின்றன’ என்பதையெல்லாம் முழுவதுமாக அறிந்தவர் பந்துலு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவரிடம் ஆலோசனைக் கேட்டுச் சென்றதெல்லாம் நடந்திருக்கிறது.

1964-ம் ஆண்டிலேயே பந்துலு இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘முரடன் முத்து’ வந்தது. இந்த சமயத்தில்தான் இருவரும் முட்டிக்கொண்டார்கள்.

இப்படி முட்டிக்கொள்வதும் பிறகு படப்பிடிப்புக்கு வந்தாலும் பேசாமல் செல்வதும் என்றெல்லாம் இருந்தாலும் இந்த முறை விஷயம் பெரிதாகிவிட்டது.

அந்தச் சமயத்தில், சிவாஜியின் 100-வது படம் நெருங்கிக் கொண்டிருந்தது.

‘சிவாஜியின் 100-வது படத்தை நாம் தயாரித்து இயக்க வேண்டும்’ என்பது பந்துலுவின் ஆசை.

ஆனால், ஏ.பி.நாகராஜன் சொன்ன ‘நவராத்திரி’ கதை சிவாஜிக்குப் பிடித்துவிடவே அப்படத்தில் நடிக்கவே தீர்மானித்தார்.

ஆனால் பந்துலு இதை ஏற்கவில்லை. ஆசை, கோபமானது. கோபம், வாக்குவாதமானது. வாக்குவாதம், பெரிய விரிசலைக் கொடுத்தது. இருவரும் பிரிந்தார்கள்.

சிவாஜியைப் பிரிந்த சேதி கேட்டதும் பந்துலுவை எம்ஜிஆர் அழைத்தார். வாரியணைத்துக் கொண்டார். பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்ஜிஆரை வைத்து கலர்ப் படமாக, ‘ஆயிரத்தில் ஒருவன்’ கொடுத்தார்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமாகவும் அமைந்தது. மிகப்பெரிய வெற்றியையும் எம்ஜிஆருக்குக் கொடுத்தது.

‘நாடோடி’, ‘ரகசிய போலீஸ் 115’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’ என்று வரிசையாக எம்ஜிஆரை வைத்து இயக்கிக்கொண்டிருந்தார் பந்துலு.

நடுவே, ‘நம்ம வீட்டு மகாலட்சுமி’, ‘எங்க பாப்பா’ என்றெல்லாம் மற்றவர்களை வைத்து படங்களை இயக்கினார். ‘கங்கா கெளரி’, ‘ஸ்கூல் மாஸ்டர்’ என படங்களை இயக்கினார். எம்ஜிஆரின் கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

இதுவே பந்துலுவின் கடைசிப் படமாகவும் அமைந்தது. படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே பாதியிலேயே உடல்நலமின்றி காலமானார் பந்துலு. மீதிப் படத்தை எம்.ஜி.ஆரே இயக்கினார்!

தமிழிலும் கன்னடத்திலும் பல படங்களில் நடித்து, தயாரித்து, இயக்கிய பி.ஆர். பந்துலு, படங்களை காவியமாக்கியவர் என்று கன்னடத் திரையுலகம் கொண்டாடியது.

இவரின் நூற்றாண்டை மிகப்பெரிய அளவில் அந்த அரசு கொண்டாடி மரியாதை செய்தது.

இவரின் மகள் பி.ஆர். விஜயலட்சுமி, தமிழின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் எனும் பெருமைக்கு உரியவர் என்பது கொசுறுத் தகவல்.

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பந்துலு உலவவிட்ட கட்டபொம்மன், வ.உ.சி, கிட்டுரு சென்னம்மா, கிருஷ்ணதேவராயர் போன்ற வரலாற்று ஆளுமைகளும், கர்ணன் போன்ற புராணக் கதாபாத்திரங்களும் அத்தனை உயிர்ப்புடன் உருவாக்கப்பட்டதாக இன்றும் சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள். அதுதான் பந்துலுவின் தனித்தன்மை!

  • நன்றி: இந்து தமிழ் திசை
You might also like