கழகங்களை நம்பியுள்ள முஸ்லிம் கட்சிகள்!

விடுதலைக்குப் பிறகு இந்தியா பிளவுபட்டது போன்று, முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளும் துண்டுத் துண்டாக உடைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும் இதில் அடங்கும். அதனை விளக்கும் முன்பாக, முஸ்லிம்களுக்கான கட்சி உதயமான விதத்தை பார்க்கலாம்.

இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக 1903 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கட்சி ‘அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’.

பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அந்த கட்சியின் பெயரில் இருந்த  ‘அகில’ என்பதை நீக்கிவிட்டு 1949-ல் “இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” என்று மாற்றினார் காயிதே மில்லத்.

அவரே தேசியத் தலைவராக விளங்கினார். அவருக்குப் பிறகு தேசிய அளவிலும், தமிழகத்திலும் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் தோன்றலாயின.

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கியத் தலைவர் அப்துல் சமது எம்.ஜி.ஆரை ஆதரித்தார். மற்றொரு தலைவர் அப்துல் லத்தீப் கருணாநிதியை ஆதரித்தார். அதனால் கட்சி பிளவுபட்டது.

தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கங்களிடையே ஏற்பட்ட முதல் பிளவு இதுவே. இதன் பின்னர் முஸ்லிம்களுக்காக பல்வேறு கட்சிகள் உதயமாயின. தலைவர்களிடையேயான முரண்பாட்டால் உடைந்தும் போயின.

ஐயுஎம்எல் பெயருடன் அப்துல் சமதுவின் மகள் பாத்திமா முஷாபர், காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஆகியோர் தனித்தனியே இயக்கம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பு 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இருந்து வெளியேறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை ஆரம்பித்தார் பி.ஜெய்னுலாபுதீன்.

பின்னர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தில் இருந்து வெளியேறி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை தொடங்கினார் எஸ்.எம்.பாக்கர். இப்படி, பல பிரிவுகளாக சிதறியது முஸ்லிம் இயக்கங்கள்.

அண்மைக்கால பிளவுகள்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக மனித நேய மக்கள் கட்சி 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பேராசிரியர் எச்.ஜவாஹிருல்லா தலைவரானார்.

அந்த ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மமக தனித்து நான்கு இடங்களில் நின்றது. ஆனால் அனைத்திலும் தோற்றது.

2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளை வாங்கியது. இரண்டில் வென்றது.

2016 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் சேர்ந்தது. நான்கு தொகுதிகள் கொடுத்தார்  கருணாநிதி. ஆனால் எதிலும் வெற்றிபெற முடியவில்லை.

2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி.

பாபநாசம், மணிப்பாறை ஆகிய இரண்டு இடங்களை ஸ்டாலின் அளித்தார். இரண்டிலும் வென்றது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைக் காட்டிலும் இந்த கட்சி வேகமாக வளர்ந்த நிலையில், அதிலும் பிளவு உருவானது.

மமகவின் பொதுச் செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரி, ஜவாஹிருல்லாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி, மனிதநேய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. நாகையில் போட்டியிட்ட அன்சாரி ஜெயித்தார்.

(அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று நான்கு இடம் பெற்று ஒரு இடத்திலும் மமக வெல்லவில்லை என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்)

இங்குள்ள பிரதான முஸ்லிம் கட்சிகள் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன.

தமிழக முஸ்லிம் இயக்கங்களில் பிளவுகள் ஏற்பட்டாலும், அவற்றுக்கான முக்கியத்துவத்தை, திமுகவும், அதிமுகவும் குறைத்துக் கொண்டதில்லை.

எங்கெங்கே செல்வாக்கு?

தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ள முஸ்லிம் சமுதாய மக்கள், ராமநாதபுரம், சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு, ஆம்பூர், வாணியம்பாடி, பூம்புகார், தொண்டாமுத்தூர், நாகப்பட்டினம், வேப்பனப் பள்ளி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட  30-க்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.

இன்னும் 9 மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் வருகிறது. அகில இந்திய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளில் இடம்பெறும் கட்சிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

அகில இந்திய அளவில், முஸ்லிம் லீக்கும், மனிதநேய மக்கள் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டன.

தமிழகத்தில் இந்த இரு கட்சிகளும் திமுக தலைமையின் கீழ்தான் இயங்கும்.

முஸ்லிம் லீக் கட்சி, கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த முறை முஸ்லிம் லீக் கட்சிக்கு அந்த தொகுதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. மமகவுக்கு தொகுதி உண்டா? என்பதும் தெரியவில்லை.

இவை தவிர தமிழகத்தில் உள்ள பிற முஸ்லிம் கட்சிகள், எந்தக் கூட்டணியில் இடம் பெறும்? அந்த கட்சிகளுக்கு சீட் கிடைக்குமா? என்பன போன்ற கேள்விகளுக்கு, பதில் கிடைக்க சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

– பி.எம்.எம்.

You might also like