உறுதுணையாய் இருக்கும் உறவுகள்!

– எழுத்தாளர் சோ.தர்மன்

செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு.

என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் “அப்பா நான் இவர்களை என்ன உறவு முறை சொல்லி கூப்பிட வேண்டும்” என்று என் பிள்ளைகள் கேட்கும் அவலம்.

ஆசையாக வந்து என்னிடம் நலம் விசாரிக்கும் இளவட்டப் பையன்களிடம் அவனுடைய தாத்தா பெயரைக் கேட்டுத்தான் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

முந்தியெல்லாம் ஊருக்குப் போனால் ஒவ்வொருவரும் உறவு முறை சொல்லி உரிமையுடன் கேலியும் கிண்டலும் பேசும்போது ரொம்ப சந்தோஷப்படுவேன்.

என் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போனால், என்னுடன் சம்பந்தம் பேச எத்தனை அக்காள், தங்கச்சிகள் என்னை கேலி கிண்டல் பண்ண எத்தனை மதினியார்கள், கொளுந்தியாள்கள், மருமகள்கள் அத்தனையும் இப்போது இல்லை.

என் பையனைப் பார்த்தவுடன் என் தங்கச்சி உறவு முறைக்காரி சொல்வாள் “மருமகனே பொண்ணு உங்களுக்குத்தான். வேண்டாம்னாலும் கூட்டிக் கொண்டாந்து வீட்ல விட்டுட்டு வந்திருவேன்”

இந்த மாதிரியான உரிமையுடன் கூடிய ஆத்மார்த்தமான உரையாடல்கள் இல்லை.
ஆனாலும் எனக்கான உறவுகள் ஏராளம் உண்டு. அன்றாடம் இரு வேளையும் பால் கொண்டுவந்து கொடுக்கும் பால்க்காரர். வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடைக்காரர்.

கீரைகள் கொண்டுவரும் கீரைக்காரப் பாட்டி. மல்லீப்பூ, மருக்கொளுந்து கொண்டு வரும் பூக்காரம்மா, என் பேரப் பிள்ளைகளைக் குதூகலப்படுத்தும் ஐஸ் வியாபாரி.

என் அழுக்குகளை நீக்கும் சலவைத் தொழிலாளி. தினம் நான் தூண்டில் போடப் போகும்போது என்னுடன் தூண்டில் போட்டு மீன் பிடிக்க வரும் யார் யாரோ.

என் எழுத்துக்களைப் படித்து விட்டு போனில் பேசுகின்ற கடிதம் எழுதுகின்ற நூற்றுக்கணக்கானவர்கள் இவர்கள்தான் என் உறவுக்காரர்கள்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like