அமைச்சர் பொன்முடியிடம் தொடரும் விசாரணை!

மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி அவரது மகனான கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. கௌதம சிகாமணி ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில், மத்தியப்படை வீரர்களுடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடி வீட்டில் சோதனையைத் தொடங்கினர். அதே நேரத்தில் அவருக்குச் சொந்தமான 9 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் 10 லட்ச ரூபாய் மதிப்புடைய பிரிட்டிஷ் பவுண்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்களையும் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதுதவிர பொன்முடி தொடர்புடைய 48 கோடி ரூபாய் வைப்புத்தொகையும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னை சாஸ்திரி பவன் 3-வது தளத்தில் உள்ள தங்கள் அலுவலகததிற்கு பொன்முடியை அழைத்துச் சென்று விசாரணையைத் தொடர்ந்தனர்.

அதிகாலை 3 மணி வரை விசாரணை நீடித்த நிலையில், அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், பொன்முடி மீது கைது நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பொன்முடியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தமது வீட்டிற்குச் சென்றார்.

பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் சரவணன், அமலாக்கத்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் குவாரி ஏலத்தில் அமைச்சர் பொன்முடி தனது உறவினருக்கு உரிமம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like