27 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்த இந்தியா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட வீரர்களில், தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளில் நடைபெற்றப் போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்றனர். நான்காவது நாளில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் இரண்டு தங்கம் வென்றனர்.

இதில், ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பரூல் சவுதாரி தங்கம் வென்றார்.

5-ம் நாளான நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. அதன்படி, உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் 2.26 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், பல்வேறு போட்டிகளிலும் இந்தியா சார்பில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்தனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

You might also like