ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.

இதுபோன்ற விவகாரங்கள் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது என்பதற்கு 1947 ஆம் ஆண்டு வெளியான ‘சுலோசனா’ படமும் உதாரணம்.
பிரச்சனை இல்லாமல் சினிமா எடுத்தால், அதுவே பெரிய சாதனைதான் போலிருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரத்துக்கு அறிமுகம் தேவையில்லை. திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் என்ற முழுப்பெயரை கொண்ட டி.ஆர்.சுந்தரம், தயாரிப்பாளர், தொழிலதிபர், இயக்குநர், நடிகர் என பல அவதாரம் எடுத்தவர்.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ள இவர், லண்டனில் படித்தவர்.

எஸ்.எஸ்.வேலாயுதம் என்பவருடன் ‘ஏஞ்சல் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை சேலத்தில் தொடங்கி, திரைப்படங்களை தயாரித்த இவர், பின்னர் தனியாக பிரிந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் என்பது வரலாறு.

சில படங்களைத் தயாரித்து இயக்கியுள்ள டி.ஆர்.சுந்தரம், ஜப்பானை எதிர்த்து பிரிட்டீஷ் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை மையமாக வைத்து எடுத்த ‘பர்மா ராணி’ படத்தில் ஜப்பானிய ராணுவ அதிகாரியாக நடித்தார்.

ஹிட்லர் மீசையுடன் வில்லனாக நடித்த டி.ஆர்.சுந்தரம், அடுத்து ‘சுலோசனா’ என்ற படத்தை எடுத்தார்.

இதில் ஹீரோவாக நடிக்க இருந்தது பி.யு.சின்னப்பா. அந்தக் காலகட்டத்தின் டாப் ஹீரோ. நாயகியாக நடிக்க இருந்தது, கே.எல்.வி.வசந்தா.

ஷூட்டிங் தொடங்க இருந்த நாளில் எல்லோரும் தயாராக இருக்க, ஹீரோ பி.யு.சின்னப்பா வரவில்லை.
பொறுத்துப் பார்த்தார் டி.ஆர்.சுந்தரம். ஒரு கட்டத்தில் சின்னப்பா வரமாட்டார் என்ற நிலையில், அருகில் இருந்த அறைக்குள் சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் மேக்கப்புடன் திரும்பிய டி.ஆர்.சுந்தரம், ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்றார். மொத்த யூனிட்டும் கப்சிப் ஆனது.

அந்தப் படத்தில் கதாநாயகன் ஆனார் டிஆர்.சுந்தரம். 1947 ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சின்னப்பா படப்பிடிப்புக்கு வராததற்கு, டி.ஆர்.சுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

– அலாவுதீன்

You might also like