ஒரே நாடு,  ஒரே மதம், ஒரே மொழி முழக்கங்களுக்கு முன்னோடி யார்?

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் பிறந்தநாள், நூல்கள் வெளியீட்டு விழா:

வியப்பு தான்.

94 வயதைத் தொட்டிருக்கிற தமிழ் எழுத்தாளரின் பிறந்த நாளில் அவருடைய இரு நூல்களின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது.

“இ.பா’’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘இராமானுஜர்’, ‘ஔரங்கசீப்’ நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, அதன் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் –  ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இயக்குநர் கே.சுப்பிரமணியம் அரங்கில் நடந்தது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான மா.ராஜேந்திரன் ராமானுஜர் நூலை வெளியிட, கவிஞரும், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவுரங்கசீப் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர் டி.எஸ்.சரவணன் வெளியிட விழா நாயகன் இந்திரா பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, வெளியிடப்பட்ட நூல்கள் குறித்து மா.ராஜேந்திரன் விரிவாகப் பேசினார்.

“இந்திரா பார்த்தசாரதி எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாடகங்கள் நூற்றாண்டு, ஆயிரமாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களைப் பற்றி எழுதப்பட்டவையாக இருந்தாலும், அவற்றைச் சமகாலப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் சமகாலத்திய பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார்.

ஔரங்கசீப் நாடகத்தில் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’’ என்று ஔரங்கசீப் சொல்வதாக ஒரு காட்சி வரும்.

இது அப்போதைய காலத்திற்கு மட்டுமல்ல, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற சமகாலத்திற்கும் பொருந்தும்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட முழக்கங்கள் இவ்வளவு காலங்கடந்தும் ஒலிக்கின்றன’’

அதே நாடகத்தின் அந்தக் காட்சியைப் பற்றிப் பேசினார் எம்.பி.யும், எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன்.

ஔரங்கசீப் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மத‍ம்” என்று பேசுவதைப் பற்றி இந்த நாடகத்தில் இருவர் இப்படிப் பேசிக் கொள்வார்கள்..

“ஔரங்கசீப் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’’னு பேசிக்கிட்டிருக்கிறாரே! இது எப்படிச் சாத்தியம்?’’

“ஆட்டுவிக்கப்படுகிற மக்கள் ஆட்டு மந்தைகளைப் போலவும், ஆளுகிறவர்கள் மகா முரடர்களாகவும் இருந்தால் தான் அது சாத்தியம்.’’

இன்றைக்குச் சமத்துவத்திற்கு எதிராகச் சொல்லப்படுகிறவை அப்போதே சொல்லப்பட்டதாக‍க் கூர்மையாக எழுதியிருப்பார் இ.பா.

அவருடைய இரு நாடகங்களையும் அதன் இயல்பை உணர்ந்த நிலையில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பு என்பது சவால் நிறைந்த ஒன்று. பிரபஞ்சன் எழுதிய ’மரி என்ற ஆட்டுக்குட்டி’ என்ற ஒரு சிறுகதையை நானும், இன்னொரு நண்பருமாக இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்ட காலம் – இரண்டரை மாதங்கள்.

அந்த அளவுக்குச் சவால் நிறைந்தது மொழிபெயர்ப்பு.’’

எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழாசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் பேசும்போது, சாதி, மத, இன உணர்வுகளைக் கடந்த மனதநேயமே இன்றைய உலகுக்குத் தேவை என்றும், அவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளில் பார்க்கலாம் என்றும், அவரது நாடகங்களை ஆய்வு செய்துதான், தான் முனைவர் பட்டம் பெற்றதாகவும் கூறினார்.

நிறைவாகப் பேசினார் இந்திரா பார்த்தசாரதி.

நிகழ்ச்சியில், டாக்டர் எம்.ஜி.ஆர் –  ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர் மணிமேகலை, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், படைப்பாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஸ்ரீராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like