அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்!

இன்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் முழுவதும் பாசிசம் என்ற அதிகார வர்க்கம் ஆட்சி பீடங்களைப் பீடித்த பிறகு உலகம் முழுவதுமே ஒருவித நோய் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறது!

பாசிசம் என்பதைக் கண்களை மூடி ஆதரிப்பவர்கள் கூட அதன் காலடிகளில் சிக்கிக் கிடக்கிறவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பாசிசம் என்பதே தேய்ந்து போன முதலாளித்துவமும் மதம் மற்றும் இனத்தால் தங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்ட ஒரு சோம்பேறி வர்க்கமும் இணைந்த கூட்டாட்சி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது! எளியவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை!

சாணக்கியம் என்ற சொல்லாடலுக்குள் தங்களை அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்வார்கள். உண்மையில் சாணக்கியம் என்பதே ஏமாற்றுதல் என்றுதான் பொருள்.

இலக்கிய உலகில் பன் மொழி இலக்கியங்கள் தமிழில் ஆக்கம்பெற்று வந்திருந்த போதும் ஆப்ரிக்க இலக்கியங்களுக்கு மட்டுமே பஞ்சமாகவே இருந்தது! காரணம் பாசிசம் மட்டுமே!

அதற்கான சன்னலை முதலில் திறந்துவைத்தப் பெருமை நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளுமை இந்திரன் ராஜேந்திரன் அவர்களையே சாரும். இன்றும் கூட நான் அவரது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூலை அண்ணாந்துதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

இந்த நூல் எழுதியதற்கான காரணத்தை அவரே தனது முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்!

“அயல் இலக்கியம் என்றவுடனேயே மேலை நாட்டு இலக்கியங்கள் மட்டுமே முன் வந்து நிற்கிற நமது புத்தகக் கடைகளில் ஆப்பிரிக்க இலக்கியத்தைத் தேடி ஏமாந்தேன்.

ஆயினும் என் தேடல் தீவிரமடைந்தபோது, நண்பர்களின் அந்தரங்கமான புத்தக அலமாரிகளில் மட்டுமின்றி பம்பாயின் ஃப்ளோரா ஃப்வுண்ட்டன் நடை பாதை ஓரங்களிலும் கூட ஆப்பிரிக்க இலக்கியக் கர்த்தாக்கள் எனக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள்.

செனிகால் நாட்டு செங்கோர், நைஜீரியாவின் கேபிரியல் ஒகாரா, வோல்லே சொயின்கா, மதகஸ்கரின் ஃப்ளேவியன் ரெனெய்வோ என்று உன்னதமான இலக்கியக் கர்த்தாக்களைச் சந்தித்தேன்.

அவர்கள் தங்கள் பாசங்கற்ற, உண்மை மனம் கமழும் சொற்களால் என்னை ஆளத் தொடங்கினார்கள். அவர்களின் எழுத்துகள் என்னிடம் வெட்கப்படாமல் அழுதன. குற்ற உணர்வின்றிச் சிரித்தன. கர்வமின்றிக் கோபப்பட்டன. சுய நலமின்றி நட்பாராட்டின!”

இந்த நூலின் எந்தவொரு பகுதியையும் நாம் ஒதுக்கிவிட்டு நகரமுடியாது. காரணம், நம் வாழ்வியலில் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இடர்பாடுகளுடன் தொடர்புடையவைகளாக இருக்கின்றன.

நம் கண்ணீரை அவர்கள் வேறொரு பரிமாணத்தில் நம்மிடம் பகிர்கிறார்கள்! சில இடங்களில் அவர்களின் தோள்களில் நாமும் , நம்மையறியாமல் தோள் சாய்ந்து கொள்கிறோம்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நீக்ரோ கலைஞன் லாங்ஸ்டன் ஹ்யூக்ஸின்

‘நான் நதிகளை அறிவேன்
தொன்மையான, இருள் படிந்த நதிகளை…
எனது உயிர்
இந்த நதிகளைப் போலவே ஆழமானது’ என்பதாகட்டும்
நைஜீரியாவை சேர்ந்த கேபிரியல் ஒகாராவின்
‘முன்னொரு காலத்தில்
மகனே, அவர்கள் இதயத்தோடு சிரிப்பார்கள்,
கண்களால் சிரிப்பார்கள்,
ஆனால் இப்போது
பற்களால் மட்டுமே சிரிக்கிறார்கள்…
….
சிரிப்பது எப்படி என்று
மீண்டும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்..
ஏனெனில்
நான் கண்ணாடியில் சிரிக்கிறபோது
என் பற்கள்
பாம்பின் நச்சுப் பற்கள் போல்
தெரிகின்றன…
மகனே, குழந்தாய்
எப்படிச் சிரிப்பது என்று எனக்குக் காட்டு
ஒரு காலத்தில்
நான் உன்னைப் போல் இருந்தபோது
எப்படிச் சிரித்தேன் என்று
எனக்குக் காட்டு மகனே! – கவிதையாகட்டும்
வடக்குக் கராலினா கார்ல் வெண்டல் ஹைன்ஸ் உடைய
‘ இப்போது அவர்
பத்திரமாக இறந்துவிட்டார்,
நாம் அவருக்குத் துதிப் பாடுவோம்,
அவர் புகழ் பாட
நினைவாலயம் அமைப்போம்….
…….
அவர் எந்தக் கனவுக்காக
உயிர் துறந்தாரோ
அது இன்னமும் ஒரு கனவாகவே
ஒரு செத்துப் போனவரின் கனவாகவே
இருக்கிறதென்று
அறிந்திருந்தாலும் கூட…
கவிதைகள் எல்லாமே பட்டவர்த்தனமாக நம்மோடு பேசி அழுகின்றன..

இந்த நூலில் கவிதைகள்: மட்டுமின்றி, போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் நீக்ரோவிடம் ஏசு பேசுவது போன்ற அதி அற்புதமான சிறுகதையும், செனிகால் லியோபோல்டு சிடார் செங்கோர் எழுதிய ‘நீக்ரோவியம் இருபதாம் நூற்றாண்டின் மனித நேயம்’ என்ற சிறப்பான கட்டுரையும் இந்திரன் சார் கைவண்ணத்தில் சிறப்பான மொழியாக்கமாக மிளிர்கின்றன!

இதில் லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய ‘கறுப்பு இயேசு நாதர்’ கவிதை என்னை அடிக்கடி மீள் வாசிப்பிற்கு ஆளாக்கியது. இதோ அந்தக் கவிதை

‘இயேசுவானவர்
ஒரு கருப்பனாகத் திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத
தேவாலயங்கள்
இங்கு ஏராளமாய் உள்ளன…
எவ்வளவு புனிதப் படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கே வாயில்கள் மறுக்கப்படும்…
அங்கே இனம்தான் பெரிதே தவிரச் சமயம் அல்ல
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்…
இயேசுவே
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்.’

1982 ல் வெளிவந்த இந்த நூல் ஏன் அவ்வளவாக மற்றவர்களால் பேசப்படவில்லை? அதற்கான அரசியலும் பெரும் நூலொன்றிற்கு வித்திடுபவைதான்.
– முகமது பாட்சா

நூல்: அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்

ஆசிரியர்: இந்திரன்

வெளியீடு: யாளி பதிவு வெளியீடு

8/17, கார்ப்பரேசன் காலனி,

ஆற்காடு சாலை,

சென்னை – 600 024

போன்: 98407 38277

You might also like