தனது திரை உலக வாழ்க்கையில் கமல்ஹாசன், இப்போதுதான் புதிய உயரங்களை தொட்டுள்ளார் என சத்தியம் செய்து சொல்லலாம்.
விக்ரம்-2 வில் ஆரம்பித்தது இந்த மாயாஜாலம். பல ஆண்டுகளாக தோல்வி படங்கள் அல்லது சுமாரான படங்களையே தந்த கமலுக்கு விக்ரம், பெரிய திருப்பத்தை அளித்தது.
தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களுக்கு கணிசமான பணம் அள்ளிக்கொடுத்த விக்ரம், கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை கமலுக்கு லாபமாக வழங்கியது.
அன்று ஆரம்பித்த அதிர்ஷ்டம், இந்த நிமிடம் வரை தொடர்கிறது. இந்தியாவே உற்று நோக்கம் இந்தியன் -2 படத்தை முடித்து விட்டார்.
இதற்கு அவர் சம்பளமாக 100 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல்.
இதனை முடித்து விட்டு எச்.வினோத் டைரக்ஷனில் கமல் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பான் இந்தியா படமாக உருவாகும் ’ப்ராஜெக்ட்-கே’ படம், கமல் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டியதால், அதனை ஒப்புக்கொண்டார்.
நடிகையர் திலகம் படத்தை கொடுத்த நாக் அஸ்வின், புதிதாக இயக்கும் சயின்ஸ் பிக்ஷனான ப்ராஜெக்ட் – கே படத்துக்காக ஏற்கனவே பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.இப்போது அதில் வில்லனாக நடிக்க கமல் கையெழுத்து போட்டுள்ளார்.
30 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம். தனது கேரியரில் கமல், இந்த படத்துக்குத்தான் அதிக ஊதியம் பெற்றுள்ளார். இதனால் அந்த படத்துக்கு உடனடியாக தேதிகளை ஒதுக்கிவிட்டார்.
இதன் பின் மணிரத்னம் மற்றும் பா.ரஞ்சித் படங்கள் வரிசை கட்டி நிற்பதோடு, ‘காமதேனு’வாக கொட்டிக் கொடுக்கும் பிக்பாஸ், அடுத்த சீசனும் கமலுக்காக காத்திருக்கிறது.
6 வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது.
படத்தின் சில காட்சிகளை நேற்று கமலஹாசனுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார், டைரக்டர் ஷங்கர்.
படத்தின் தரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளார்.
‘இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள், ஷங்கர்.
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக்கூடாது என்பது என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை.
இதையே உச்சமாக கொள்ளாமல் திமிறி எழுங்கள், பல புதிய உயரங்களை தேடி .. அன்பன் கமல்ஹாசன்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மகத்தான படம் தந்ததன் நன்றியாக, ஷங்கருக்கு பெனராய் லூமினார் கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார், கமல். இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.
தனது தயாரிப்பில், தன்னை வைத்து விக்ரம் படம் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த ஆடம்பர காரை பரிசாக அளித்த கமல், அதில் கவுரவ வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் அளித்து அசர வைத்தார் .
எம்.ஜி.ஆருக்கு பிறகு புதிய வள்ளலாக உருவெடுத்துள்ளார் உலகநாயகன் என்கிறார்கள், கோடம்பாக்கத்தில்.
– பி.எம்.எம்.