அருமை நிழல்:
சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். படிக்கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார்.
அதனால், அவரது இயற்பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட்டது.
பின்னர் 1951-ல் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்.
எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாடகத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட்களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம்.
மனோகரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாடகங்களுக்கு தேவையான பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னுடைய செலவு’’ என்றார்.
மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய்விட்டாராம் மனோகர். அதோடு எம்.ஜி.ஆரின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க, தனது நாடகங்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.இராமசாமி, அசோகன் ஆகியோருடன் ஆர்.எஸ்.மனோகர் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படம்.
– நன்றி: முகநூல் பதிவு