புலியை விடவா சிறுத்தை சிறந்தது என்கிற கேள்வி எழலாம். திறமைசாலிக்கும், புத்திசாலிக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. புலி பலசாலி, சிறுத்தை திறமைசாலி.
முன் இரு கால்கள் பின்னோக்கி வர, பின் இரு கால்கள் முன் நோக்கிப் பாய்கிற சாதாரண செயல்தான். ஆனால் அந்தச் செயல்தான் சிறுத்தையை மற்ற விலங்குகளிலிருந்து தனித்துக் காட்டுகிறது.
சீட்டாக்களுக்கும், லெப்பர்டுகளுக்கும், உருவ ரீதியில் மட்டுமல்ல, இரையைத் தேர்வு செய்யும் விதத்திலும் கூட வித்தியாசங்கள் இருக்கின்றன.
தமிழில் சீட்டா, லெப்பர்டு, ஜாகுவார் போன்றவற்றை பொதுவாக சிறுத்தை, சிறுத்தைப்புலி, வேங்கைப்புலி என சொன்னாலும், சிறுத்தை என்கிற பெயருக்குக் கீழயே இந்த மிருகங்கள் அனைத்தையும் குறிப்பிடுவது சகஜமாகிவிட்டது.
வேட்டை என்று வந்துவிட்டால் எதிரிக்குச் சிறுத்தை வருகிற தடமே தெரியாமல் தட்டித் தூக்குகிற வித்தை தெரிந்த உயிரினம்.
விலங்குகள் உலகில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை. சிங்கம், புலி என இருக்கிற விலங்குகள் பட்டியலில் சிறுத்தைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பில்டப் கொடுக்கலாம்.
ஏனெனில் அது சிறுத்தை. கால்கள் சிறியதாகவும், மண்டையோடு பெரியதாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். அதன் மெலிதான கால்கள் மரம் ஏறுவதற்கு ஏதுவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஜாகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியதாகவும் மிகவும் நெருக்கமானதாகவும் இருக்கும்.
ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது.
சூழலுக்குத் தக்க வேட்டையாடும் தன்மை கொண்டது சிறுத்தை.
தன் எடைக்கு நிகரான எடையுள்ள விலங்குகளை வேட்டையாடி மரத்துக்கு மேல் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
சீட்டாக்கள் அளவுக்கு லெப்பர்டுகளால் வேகமாக ஓட முடியாது. ஆனால், லெப்பர்டுகளால் மரம் ஏறிக்கூட தன் இரையை வீழ்த்த முடியும். லெப்பர்டு உருவத்தில் சீட்டாக்களைவிடவும் சிறியவை.
சிறுத்தைக்கு ஆக்ஷன் மட்டுமல்ல; எப்போதாவது சென்டிமென்ட் சம்பவங்களும் நிகழும்.
நேஷனல் கியோகிராபி தொலைக்காட்சி Eye of the Leopard எனும் பெயரில் சிறுத்தைகள் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்தது.
சிறுத்தை குறித்த காணொலிகளில் மிக முக்கியமான காணொலி அது.
‘கொல’ பசியில் இருக்கும் சிறுத்தை ஒன்று, தனியாக இருக்கிற பபூன் ஒன்றை குறி வைத்தது. பார்க்க குரங்கு போல இருக்கிற பபூன் இயல்பிலேயே சாதுவானது. கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தை பபூனின் கழுத்தைக் கடித்துப் பிடித்துவிட்டது.
பொதுவாகச் சிறுத்தை வேட்டையாடிய உணவை மரத்தில் வைத்து உண்ணும் பழக்கம் கொண்டது. அன்றும் அப்படியே வேட்டையாடிய பபூனை கழுத்தைப் பிடித்து மரத்துக்கு இழுத்துச் சென்றது.
மரத்தில் ஏறும் போதுதான் தெரியும், பபூனின் அடிவயிற்றைப் பிடித்தவாறு புதிதாகப் பிறந்த அதன் குட்டி இருக்கும்.
தாயின் கால்களைப் பிடித்தவாறு குட்டி பபூன் இருக்கச் சிறுத்தை மரம் ஏறிக்கொண்டிருக்கும். தாய் பபூன் ஏறக்குறைய இறந்துவிட்டது. அடுத்த 10 நிமிடங்களில் சிறுத்தைக்கு அது உணவாகவும் மாறி விடும்.
ஆனால், குட்டியின் நிலை? விலங்குகள் வேட்டையாடுவதில் தாய்க் குட்டி எனத் தொழில் தர்மங்களைப் பின்பற்றுவதில்லை.
பபூனுக்குத்தான் அது குட்டி, சிறுத்தைக்கு அது உணவு. அவ்வளவுதான். தாயோடு சேர்த்து குட்டியையும் சிறுத்தை தூக்கிக் கொண்டு மரம் ஏறும். குட்டிக்கு நடப்பது என்னவென்றே உணர முடியாத சூழல்.
மரத்தின் கிளையில் பபூனைப் போடும்போதுதான் சிறுத்தை அதனுடைய குட்டியைக் கவனிக்கும்.
பிறந்த சுவடுகள் கூட மாறாத குட்டி தன்னுடைய தாயை விடாமல் கெட்டியாகப் பிடித்திருக்கும்.
சிறுத்தை தாய் பபூனைப் போட்ட வேகத்தில் குட்டி மரத்திலிருந்து கீழே விழுந்து விடும்.
சிறுத்தையும் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலையைக் கையாண்டதில்லை.
கீழே விழுந்த குட்டியை வாயில் கவ்வியபடி மரத்திற்குக் கொண்டு வரும்.
குட்டி பபூன் தாய் பபூனை தேடிக் கொண்டேயிருக்கும். சிறுத்தை எப்போதும் வேட்டையாடி மிச்சம் வைத்திருக்கிற உணவைத் திருடி கொண்டு போவதுதான் கழுதை புலிகளுக்கு வேலை.
குட்டி பபூன் அதன் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதால் இரவெல்லாம் அதனைப் பாதுகாத்து சிறுத்தை வைத்திருக்கிற காட்சியோடு அந்தக் காணொளி முடிகிறது.
ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல்.
ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் ஏறக்கூடிய திறன் படைத்தது.
நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது. சிறுத்தையின் உடல் நீளத்துக்கு ஏற்றவாறு, அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும்.
வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்றச் சமநிலையை வால் தருகிறது.
வளர்ந்த சிறுத்தைகள் தனியாக வாழக்கூடியவை. பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும்.
சிறுத்தைக் குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்குத் தடுப்பு வேலிகளைத் தாய் சிறுத்தை அமைக்குமாம்.
18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடமிருந்து தனியாகச் செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற சிறுத்தைக் குட்டிகளுடன் சேர்ந்து திரியும்.
தாய்ப் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம்.
ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும்.
ஆனாலும் சிறுத்தை அசந்த நேரங்களில் அதன் குட்டிகளை கழுதைப்புலிகள் தூக்கி சென்று உணவாக்கிக் கொள்கிற சம்பவங்களும் அடிக்கடி நிகழும்.
-நன்றி: விகடன்