நூல் அறிமுகம்:
தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கக் கூடிய சேலத்தைச் சேர்ந்த பொன் குமார் எழுதியுள்ள நூல்தான் ‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’. இந்த நூல் பற்றி அவரே முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள குறிப்பு இதோ.
கவிதை எழுதுவது ஒரு கலை. கவிதை வாசிப்பது ஒரு கலை. கவிதை குறித்து விமர்சிப்பதும் ஒரு கலை. முதல் கவிதை எழுதியபோதே முதல் விமர்சனமும் எழுந்திருக்கும்.
தமிழில் முதல் விமர்சகர் என்று அறியப்பட்டவர் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். விமர்சனங்கள் மட்டுமே எழுதி பெயர் பெற்றவர் வெங்கட் சாமிநாதன். அவர் வழியிலேயே விமர்சனப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
விமர்சனங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. விமர்சனங்களும் வந்தன. எழுதப்பட்ட விமர்சனங்களுக்குக் கிடைத்ததை விட எழுதப்படாத விமர்சனங்களுக்கு ஏன் எழுதப்படவில்லை என்னும் விமர்சனங்களும் வந்தன.
விமர்சனங்களை வித்தியாசமின்றி, பாகுபாடின்றி, வேண்டா விருப்பின்றி அனைத்துத் தரப்பினருக்கும் எழுதினேன்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் என விமர்சனங்கள் எழுதாத வகையில்லை. தேடி வந்த தொகுப்புகளுக்கும் எழுதினேன். தேடி வாங்கி வாசித்தும் எழுதினேன். இவ்வாறு ஓர் ஆயிரம் விமர்சனங்கள் எழுதியிருப்பேன்.
எழுதியதற்காக நண்பர்களிடம் நான் அதிக பட்சமாக எதிர்பார்த்தது நன்றியும் விமர்சனம் குறித்த ஒரு மதிப்பீடும். கிடைத்தன என்றுதான் சொல்லவேண்டும்.
விமர்சனங்களை அவ்வவ்போது தொகுத்து தொகுப்புகளாகவும் வெளியிட்டேன். இதுவரை பத்து விமர்சனத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள் அடங்கிய பெண் கவிக்குரல்கள் என்னும் தொகுப்பு எல்லா பணிகளும் முடிந்து ஒரு நண்பரின் உதவியால் வெளிவராமலே போயிற்று.
விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரே தொகுப்பாகக் கொண்டு வருவது சாத்தியமில்லாதது.
‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’ என்னும் இத்தொகுப்பிலும் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய இருபது விமர்சனங்களின் தொகுப்பாகும்.
விமர்சனங்கள் குறித்த தங்கள் விமர்சனங்கள் அவசியம் எதிர்பார்க்கிறேன். ‘ கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல் ‘ என்னும் இத்தொகுப்பை வெளியிட உதவிய நண்பர்களுக்கும் pustaka நிறுவனத்திற்கும் வழக்கம் போல் நன்றிகள்.
கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்:
ஆசிரியர் – பொன். குமார்
புஸ்தகா வெளியீடு
21 / 15, புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு,
லைன்மேடு, சேலம் – 636 006.
விலை ரூ. 200/-
தொடர்புக்கு: 9003344742