சசிகுமாரை ‘ஸ்டார்’ ஆக்கிய நாடோடிகள்!

ஒரு இயக்குனர் ஒரே படத்தில் ஓஹோவென்று புகழ் உச்சியில் ஏறுவது எப்படி? இந்தக் கேள்விக்குப் பாரதிராஜா தொடங்கிப் பல பேர் உதாரணமாகத் திகழ்கின்றனர்.

அந்த வரிசையில் தனித்துவமாகத் தெரிபவர் எம்.சசிகுமார். அவர் அறிமுகமான ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு இயக்குனராக இன்றுவரை அவர் மீதான எதிர்பார்ப்பைத் தக்க வைத்திருக்கிறது.

இரண்டாவது படமான ‘ஈசன்’ தோல்வியைத் தழுவியபோதும், ‘அடுத்து எப்போ படம் டைரக்ட் பண்ணுவீங்க’ என்ற கேள்வி தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்டு வருகிறது. அப்படிக் கேட்கும் அளவுக்கு, தொடர்ந்து நாயகனாகவும் நடித்து வருகிறார் சசிகுமார்.

அதற்கு விதை போட்டது, நடிப்பில் அவரது இரண்டாவது படமாக அமைந்த ‘நாடோடிகள்’. இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சமுத்திரக்கனி நட்பு!

இயக்குனர் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் சசிகுமார்.

‘பருத்திவீரன்’ படத்தின் இயக்குனர் குழுவில் சமுத்திரக்கனியும் இடம்பெற்றிருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் இருவருக்குமான நண்பராக இருந்தார்.

இம்மூவரின் நட்பு எந்தப் புள்ளியில் தொடங்கியதென்று தெரியாது. ஆனால், அதன் தொடர்ச்சியாக ‘சுப்பிரமணியபுரம்’ உருவாக்கத்தில் பங்கேற்றார் சமுத்திரக்கனி.

அது அவரை மிகச்சிறந்த குணசித்திர நடிகராக அடையாளம் காட்டியது.

ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு, இந்தியா முழுக்கவிருந்த இயக்குனர்களின் பார்வையை சசிகுமார் மீது விழ வைத்தது.

அப்படியொரு புகழுக்குப் பிறகு, ஒரு இயக்குனராகத்தான் சசிகுமார் தனது பயணத்தை முடுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் ‘சுப்பிரமணியபுரம்’ வெற்றியின் எதிரொலியாக, தனது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘பசங்க’, ‘நாடோடிகள்’ என்று இரு படங்களைத் தயாரித்தார் சசிகுமார்.

பாண்டிராஜின் இன்றைய திரையுலக இருப்புக்கு வித்திட்டது ‘பசங்க’ என்றால் அது மிகையல்ல.

போலவே ‘உன்னைச் சரணடைந்தேன்’, ‘நெறஞ்ச மனசு’ படங்களை இயக்கிவிட்டு சீரியலில் இயக்குனர், சினிமாவில் இணை இயக்குனர் என்று பணியாற்றிக் கொண்டிருந்த சமுத்திரக்கனிக்கு மீண்டும் இயக்குனர் எனும் இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘நாடோடிகள்’.

தன் மீது புகழ் வெளிச்சத்தை விழ வைத்த சசிகுமாருக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் விதமாகவும் ‘நாடோடிகள்’ படத்தின் உள்ளடக்கத்தை வடித்தார் சமுத்திரக்கனி.

அதன் பலனாக, கதை நாயகனாக இருந்த சசிகுமார் ஒரே இரவில் நட்சத்திர நடிகர் ஆனார்.

நாடோடிகள் தாக்கம்!

ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக அமைந்தது ‘நாடோடிகள்’.

ஆனால், அதன் திரைக்கதை நகர்வு வழக்கமான மசாலா படங்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டிருந்தது.

‘ரொம்ப ராவா இருந்தது’ என்றொரு பதம் இன்று திரையுலகில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு உயிர் கொடுத்த படங்களில் ஒன்று ‘நாடோடிகள்’.

அதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட் அப்படித்தான் இருந்தது. ரத்தமும் சதையுமாக ஒரு நிகழ்வை நேரில் பார்க்கிறோம் என்ற எண்ணத்தை ஆக்‌ஷன் காட்சிகளில் விதைத்தது.

‘நண்பனின் நண்பன் எனது நண்பனே’ என்ற சொற் பிரயோகம் இளைய தலைமுறையை எளிதாகப் படத்துடன் ஒன்ற வைத்தது.

சகோதரியின் தோழியை நாயகன் காதலிப்பதாகக் காட்டினால் ஒப்புக்கொண்ட ரசிக உலகத்தை, நாயகனின் சகோதரியை அவரது நண்பன் காதலித்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தலையில் குட்டியது இப்படம்.

அத்தனைக்கும் மேலாக சசிகுமார் உடன் நடித்த பரணி, விஜய் வசந்த் ஆகியோரை மூன்று நாயகர்களாக முன்னிறுத்தியது திரைக்கதை.

அவர்களது பெற்றோர்களாக நடித்தவர்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களாகத் திரையில் காட்டியது.

கஞ்சா கருப்புவோடு சேர்த்து நமோ நாராயணாவுக்கும் இதில் நகைச்சுவைக் காட்சிகள் உண்டு. அவரைக் காண்பிக்கும்போதும், நட்பை ஒரு இழையாகப் பயன்படுத்தியிருந்தார் சமுத்திரக்கனி.

அனைத்துக்கும் மேலே, காதல் திருமணம் செய்தவர்கள் பிரிந்துபோனால் எத்தனை பேர் வலியும் வேதனையும் அடைவார்கள் என்பதைப் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார் சமுத்திரக்கனி.

பதிவு அலுவலகங்களில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் கும்பல்களிடம் இன்றுவரை அப்படத்தின் தாக்கத்தைக் காண முடியும்.

இன்னொரு டி.ஆர்.!

தமிழ் சினிமாவில் தாடியை ஒரு ட்ரெண்ட் ஆக்கிய பெருமை இயக்குனர் டி.ராஜேந்தரையே சாரும்.

அது மட்டுமல்லாமல் ஒரு இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குனராகவும், இன்ன பிற தொழில்நுட்பக் கலைஞனாகவும் இருப்பதோடு நாயகனாகவும் மிளிர முடியும் என்று நிரூபித்தவர்களில் முதன்மையானவர்.

அதற்கு முன்பு கே.பாக்யராஜ் அதனைச் சாதித்தார் என்றபோதும், ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக தனக்கென்று ரசிகர்களைத் திரட்டிய பெருமைக்குரியவர் டி.ஆர்.

கிட்டத்தட்ட டி.ராஜேந்தரின் பிரதிபலிப்பாகத் திரையில் தெரிந்தார் சசிகுமார்.

இயக்குனர் – நடிகர் என்ற அடையாளம் அதனை மேலும் வலுப்படுத்தியது.

‘நாடோடிகள்’ படத்தில் கருணாகரன் நடராஜ் எனும் வேடத்தில் நடித்த சசிகுமார், தனது பாட்டன், முப்பாட்டன்களைப் பற்றி பாட்டியிடமும் அம்மாவிடமும் விளக்கம் தருவார்.

அதனைப் பார்த்தவுடனே, நமக்கு தலையைச் சிலுப்பி வசனம் பேசும் டி.ஆர்.தான் நினைவுக்கு வந்தார்.

‘நாடோடிகள்’ தந்த ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்து, அடுத்தடுத்து பல கதைகளைக் கேட்டு கால்ஷீட்டை வாரி வழங்கிவிடாமல் சசிகுமாரைத் தடுத்தது. அதைவிட ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்கியது.

அதனை ஈடு செய்யும் வகையில், ‘போராளி’யில் மீண்டும் சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி இணைந்தது.

அப்படம் வெளியாக ஓராண்டுக்கும் மேலான நிலையில், வேறு எந்தப் படத்திலும் நடிக்க சசிகுமார் ஆர்வம் காட்டவில்லை.

அதுவே, ஒரு நட்சத்திரமாக மிளிர்வதைவிட நல்ல கமர்ஷியல் படம் கொடுக்க வேண்டுமென்ற அவரது வேட்கையைத் தெரிய வைத்தது.

அவர் நடித்த சுந்தரபாண்டியன், கிடாரி, வெற்றிவேல் உட்படப் பல படங்களில் அது தெரிந்தபோதும், நாடோடிகள் வெற்றியை அவர் மீண்டும் சுவைக்கவில்லை.

இதோ, இப்போது ‘அயோத்தி’க்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் நாயக அவதாரம் எடுக்கத் தயாராகியிருக்கிறார் சசிகுமார்.

கூடவே, ஒரு வெப்சீரிஸ் வழியே மீண்டும் இயக்குனர் நாற்காலியிலும் அமரப் போகிறார்.

அதாவது, ‘சுப்பிரமணியபுரம்’ தொடங்கியபோதிருந்த உத்வேகத்துடன் பணியாற்றுவார் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறார்.

அதே வேகத்துடன் ‘நாடோடிகள்’ போன்ற ஒரு அபாரமான கமர்ஷியல் பட அனுபவத்தையும் தர வேண்டும். சசிகுமாரின் ரசிகர்கள் அவரிடம் வேறென்ன எதிர்பார்க்கப் போகிறார்கள்?

– உதய் பாடகலிங்கம்

You might also like