வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒன்று தான் என்றாலும், சமீபத்தில் சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆட்டோமேடிக்’காக அதற்கான அபராத செலான்கள் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தது தமிழ்நாடு காவல்துறை.
இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடு சென்னை நகரில் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டதை அடுத்து, வாகன ஓட்டிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்புகள் வலுத்தன.
ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் போவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் போவது, சிக்னலில் ஸ்டாப் லைனைக் கடப்பது போன்றவற்றிற்கு அபராதம் விதிப்பதைக் கடுமையாக்கிய நிலையில் ஒரு மாதத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், கடந்த பதினைந்து ஆண்டுகளாக வசூலிக்கப்படாத சாலை வரியை ஐந்து சதவிகிதம் அளவுக்கு உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு பலரை அதிருப்திப்பட வைத்திருக்கிறது.
அதோடு தமிழ்நாடு காவல்துறையின் சமீபத்திய அறிவிப்புக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, காவல்துறை அதிக வேகத்தில் போனால் கண்காணிக்கப்படும் என்றும் தற்போதைக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது.