அரசியலில் நுழைய ஆயத்தமான விஜய்!

சினிமா மேடைகளில் நடிகர் விஜய் ‘பொடி’ வைத்து அரசியல் பேசுவதே வழக்கம்.
ஆனால், தமிழகம் முழுவதும் இருந்தும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களை சென்னைக்கு அழைத்து தன் கையால் பரிசு வழங்கி கவுரவப்படுத்திய விஜய், பகிரங்கமாகவே அரசியல் பேசி உள்ளார்.

“நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய தலைவர்களை தேர்வு செய்யப் போகிறீர்கள்.

ஒவ்வொரு மாணவரும், மாணவியும் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடக்கூடாது என்று சொல்லுங்கள். நீங்கள் கூறினால் நடக்கும்’’ எனச்சொல்லி, அரசியலுக்கு நெருக்கத்தில், தான் வந்து விட்டேன் என பறை சாற்றியுள்ளார்.

இது, போகிற போக்கில் அவர் சொல்லி விட்டுப்போனதல்ல.

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அவர் குதிப்பது உறுதியாகி விட்டது.

தனது பயணத்தில் பங்கேற்குமாறு, மாணவர்களுக்கு அவர் விடுத்த அழைப்பே, இந்த உரை.

மாணவர்கள் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் போர், 1967 ஆம் ஆண்டு தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

அது போன்றதொரு மாணவர் படை, தனக்கு இருந்தால் தேர்தலில் எளிதாக வெல்லலாம் என கணித்தே, இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து.

அதனால்தான், மாவட்ட அளவில் மாணவர்களை தேர்வு செய்யாமல் தொகுதி வாரியாக தேர்வு செய்துள்ளார்.

விழாவில் பங்கேற்ற மாணவ – மாணவிகள் பலரும், “அடுத்த ஆண்டு என் ஓட்டை மதிப்புமிக்கதாக மாற்றணும்.

எங்கள மாதிரி ஏழைகளுக்கு உங்கள் கருணை கையை கொடுத்தது போல், அனைவருக்கும் தனி ஒருவனாக இல்லாமல், எங்களது தலைவனாக வரவேண்டும்’’ என விஜயை அரசியலுக்கு அழைத்துள்ளனர்.

விஜய், இதைத்தான் எதிர்பார்த்தார். அவர் நினைத்தது நடந்து விட்டது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்றைக்கு அவரால் பயன்பெற்ற மாணவ – மாணவிகள் உள்ளனர்.

ஊருக்கு சென்றுள்ள அவர்கள், தங்கள் கிராமங்களில் விஜய் புகழ் பாடுவார்கள். கல்வி கூடங்களில் விஜய் குறித்து சிலாகிப்பார்கள்.

“இது வெறும் துளிதான். அடுத்தடுத்து விஜய் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பல தரப்பினரையும் அவரை நோக்கி இழுக்கும் வகையில் இருக்கும்’’ என்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

22 ஆம் தேதி தனது பிறந்தநாளின் போது வெளிப்படையாக, அரசியல் அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆதரவு எப்படி இருக்கும்?

இளையத் தளபதி விஜயின் 30 ஆண்டுகால சினிமா பயணத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்.

கதாநாயகனாக அறிமுகமான அரும்பு மீசை பருவத்தில் அவர் – அப்பா செல்லம். இயக்குநர்கள் சொல்லும் கதை கேட்டு அப்பா, கை காட்டும் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுப்பார்.

தயாரிப்பாளர்கள் அனுப்பி வைக்கும் இயக்குநர்களிடம் அவரே கதை கேட்டு, அந்த தயாரிப்பாளர்களுக்கு தேதி அளிப்பது அடுத்த கட்டமானது.

தனது படங்களுக்கான வணிக சந்தை விரிந்து, ஊதிய விஷயத்திலும், ரசிகர்கள் எண்ணிக்கையிலும் ரஜினிகாந்தை தொட்டுவிட்டு பிறகு, மூன்றாம் கட்டத்துக்கு முன்னேறினார்.

வரிசையாக வெற்றிப் படங்கள் கொடுக்கும் இயக்குநர்களிடம் மட்டுமே கதை கேட்கிறார்.

கதை பிடித்திருந்தால், ஆண்டுக் கணக்கில் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு படம் செய்து கொடுக்கிறார்.

6 மாதங்கள் மட்டுமே தனது உழைப்பை அளிக்கும் சினிமாவை முடிவு செய்வதற்கே இரவு – பகலாக சிந்தனை செய்யும் மனிதர், அரசியலில் குதிப்பதற்கு எத்தனை மாதங்கள் செலவிட்டிருப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

ஆக, வெகுகாலம் திட்டமிட்டே அரசியலில் நுழையும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தோன்றிய அரசியல் கட்சிகளை இரு வகைப்படுத்தலாம்.

சினிமா புகழை மூலதனமாக்கி, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்ற வேட்கையில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் ஒரு ரகம்.

அடுத்தது – தங்கள் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற தனி மனிதர்கள், ‘இன முன்னேற்றம்’ எனும் கொள்கையை முன்னெடுத்து, கோட்டையைப் பிடிப்பதற்காக, பல்வேறு கால கட்டங்களில் தொடங்கிய கட்சிகள்.

இரு தரப்புமே, தங்கள் லட்சியம் நிறைவேறாமல் தோற்றுப்போய், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து சில எம்.எல்.ஏ.க்கள் அல்லது எம்.பி.க்களை பெற்று தங்கள் இருப்பைப் பதிவு செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர் என்பதே யதார்த்தம்.

(’தனியே நிற்பேன், தனியே தோற்பேன்’ என முழக்கமிடும் சீமானை இங்கே தவிர்த்து விடுவோம்)

தமிழ் சினிமாவில் இன்றைக்கு மக்களிடம் அபரிமிதமான ஆதரவை பெற்றுள்ளோர் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் மட்டுமே.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, அரசியல் வேண்டாம் என ஒதுங்கிகொண்டார்.
“எனக்கு ரசிகர் மன்றமே தேவை இல்லை’’ என அரசியல் ஆசை ஏதும் இல்லாமல் பதுங்கி விட்டார் அஜித்.

எஞ்சி இருப்பவர் விஜய் மட்டுமே.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு விஜய் ரசிகர்கள் கணிசமான வெற்றியை ருசித்துள்ளனர்.

ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக கட்சி ஆரம்பித்து நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் போது, பெருமளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள விஜய்யால், நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பல கட்சிகள் ஓட்டையும் அவர் பிரிப்பார்.

அந்த மாற்றம் அவரை பிறர் ஆதரவு இல்லாமல் ஆட்சி கட்டிலில் கொண்டுபோய் அமர வைக்குமா? அல்லது கோட்டையில் அமர கூட்டணி வைப்பாரா? என்பதை காலமே தீர்மானிக்கும்.

– பி.எம்.எம்.

You might also like