‘நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா ஓடிக்கொண்டே இரு’ என்பது வேக யுகத்தில் சாதிப்பதற்கான வார்த்தைகள்.
இன்று வெகுபிரபலமாக இருப்பவர்களில் பலர் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தங்களது வாழ்வில் ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தான்.
இடைவிடாத வேகத்தோடும் தீரத்தோடும் செயல்படுவது வெற்றியின் ரகசியம். அதனை மறுப்பதற்கில்லை.
அதனை கைக்கொள்ளாதவர்கள் நின்ற இடத்தில் ஓடிக்கொண்டிருப்பார்கள் அல்லது காலவோட்டத்தில் காணாமல் போயிருப்பார்கள். இதுதான் வெற்றியாளர்கள் சொல்லும் கதைகளின் சாராம்சம்.
அதேநேரத்தில், வேகவேகமாகச் சென்று சிகரத்தைத் தொட்டபிறகு ‘என்னத்த கண்டோம் லைஃப்ல’ என்று அலுத்துச் சலிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசம் என்பதை மறுக்க முடியாது.
‘கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் பண்ணுங்க’ என்று கல்லா கட்டும் கும்பல்கள் அவர்களை வைத்துத்தான் பிழைப்பை ஓட்டுகின்றன.
இவ்விரண்டுக்கும் நடுவே, வெற்றியையும் நிதானத்தையும் இரு கைகளில் ஏந்திக்கொண்டு வாழ முடியாதா என்று சவால்விடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவர்களுக்கு ‘உலக சாண்டரிங் தினம்’ பற்றி எதுவும் தெரியாது. ஆனால், தினம் தினம் தங்கள் வாழ்வை அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதென்ன ‘சாண்டரிங்’?
சுற்றியிருப்பவற்றை ரசிப்போம்!
ஒரு வீடியோ பார்க்கிறீர்கள். அதில் என்ன இருக்கிறதென்றே புலப்படவில்லை. என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு பிரேம் ஆக நிறுத்தி நிதானித்து ‘ஸ்லோமோஷனில்’ பார்ப்பீர்கள் அல்லவா? இங்கேயும் அதே கதைதான். ‘சாண்டரிங்’ (SAUNTERING) என்றால் ரொம்பவும் கஷ்டப்படாமல், அவசரப்படாமல் மெதுவாகவும் நிதானமாகவும் ஓடுவது அல்லது நடப்பது என்று பொருள் கொள்ளலாம்.
கிட்டத்தட்ட ‘ஜாக்கிங்’ என்ற பெயரில் சுற்றுமுற்றும் பார்த்து ரசித்தவாறே செல்வதுதான். இந்த இடத்தில் இயற்கையை ரசிப்பதா அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களை ரசிப்பதா என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது.
சரி, இதனால் என்ன கிடைத்துவிடப் போகிறது? எதிலும் வேகம் எங்கும் வேகம் என்று வாழ்வதால் மட்டும் எதை அடைந்துவிடப் போகிறோம்? நிச்சயம் இது பதில்தான்.
இப்படியொரு எண்ணம் அமெரிக்காவின் மாகினாக் தீவின் கிராண்ட் ஹோட்டலில் பணியாற்றிய டபிள்யூ.டி.ராபே என்பவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
விளைவு, ‘நிதானமாக அனைத்தையும் ரசித்தவாறே வாழ்வோம்’ என்ற நோக்கோடு ‘உலக சாண்டரிங் தினம்’ கொண்டாடப்படுவதற்கு அவர் விதை ஊன்றியிருக்கிறார். 1970ஆம் ஆண்டு விளையாட்டாக ஆரம்பித்தது இன்று உலகம் முழுக்கப் பரவலாகியிருக்கிறது.
வாழ்க்கையில் வேகத்தைக் குறைத்து, எதையும் ரசித்து ருசித்து அனுபவிக்க வேண்டும் என்பதே இக்கொண்டாட்டத்தின் அடிப்படை.
குறைந்தபட்சமாக நம் ஆரோக்கியம் பேணும் பயிற்சிகளை முழுமையாகச் செய்தல், குளித்தல் முதலான பணிகளை அவசரமின்றி பின்பற்றுதல், பதற்றமின்றி உணவு உண்ணுதல், திருப்தியாக உறங்குதல்,
நாம் சார்ந்த உறவுகளோடும் நட்புகளோடும் சீர்மையைப் பேணுதல், இருக்குமிடத்தில் இயற்கையின் அழகை ரசித்தல் என்று ஒவ்வொரு நொடியையும் நமக்கானதாக மாற்றும்போது,
அன்றாட வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொண்ட பணி சலிப்பைத் தராது. இது நீண்ட நாட்கள் தொடரும்போது தானாகவே ஒருவித அமைதி நம்முள் பிறக்கும்.
அப்போது, வாழ்வின் ஓட்டத்தில் எதையும் தவறவிட்ட தவிப்பு தொற்றிக் கொள்ளாது. ஆயுளில் பாதியைத் தாண்டும்போது பெரிதாக அவநம்பிக்கைகளோ, எரிச்சலோ, பெருங்கவலைகளோ இருக்காது. அதுவே அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை கைமாற்றும்.
கற்பனை ஊற்றெடுக்கும்!
இன்று நம்மில் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சொல் ‘டெட்லைன்’. கால வரையறைக்குள் ஒரு வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம் மரணித்திற்கு ஒப்பானதா என்று தெரியவில்லை.
ஆனால், அப்படியொரு வார்த்தையைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். பலரது ஆரோக்கியக் கேடுகளுக்குக் காரணம் இதுவே.
ஒருவேளை இந்த கால அவகாசத்தைக் கட்டாயம் பின்பற்றும் நெருக்கடி இல்லையென்றால் என்னவாகும்?
வேலை இன்னும் தாமதமாகலாம்; சோம்பேறிகளுக்கு அது வசதியாக இருக்கும் என்பது உட்பட எத்தனையோ பதில்களைச் சொல்லலாம்.
நேரக் கட்டுப்பாடு மனிதருக்கான ஒழுக்க நடைமுறைகளில் ஒன்று என்பதை மறுக்கக் கூடாது. அதேநேரத்தில், படைப்பாக்கம் சார்ந்து இயங்குபவர்களில் சிலருக்கு அதுவே பெருந்தடையாக இருப்பதையும் மறுக்க முடியாது.
தொடர்ந்து சிலையைச் செப்பனிட்டு வரும் ஒரு சிற்பிக்கு ‘டெட்லைன்’ கட்டுப்பாடு நிச்சயம் பொருந்தாது. அது இல்லாதபோதுதான் மிகச்சிறப்பான ஒன்றை உருவாக்க முடியும் என்பவர்களுக்கு, அக்கட்டுப்பாடு தண்ணீருக்குள் அமிழ்த்தும் கொடுமையாகத்தான் தோன்றும்.
நம்மில் பெரும்பாலானோர் ரசித்த, ரசிக்கும் எழுத்துகள், ஓவியங்கள், காட்சிப்பதிவுகள் அனைத்தும் கால அவகாசங்களுக்கு உட்படாத கலைஞர்களின் படைப்புகள் தாம்.
அவர்களின் கற்பனைகள் ஊற்றெடுக்க அப்படியொரு கட்டற்ற சுதந்திரம் அவசியம். அது படைப்புத்திறனைப் பன்மடங்காகப் பெருக்கும். சிலநேரங்களில் அதுவே தன்னைத்தானே செதுக்கொண்ட சிற்பமாய் ஒரு படைப்பை நமக்குத் தரும்.
அதேநேரத்தில், காலக் கட்டுப்பாடு அவசியம் என்று கருதுபவர்களை இந்த வரிசைக்குள் கொண்டுவரக் கூடாது.
வாழ்வில் நிதானம்!
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பது செரிமானத்திற்கான வார்த்தைகள் மட்டுமல்ல. விழுங்கும் ஒவ்வொரு கவளத்தையும் அணுஅணுவாக ரசித்துச் சுவைக்க வேண்டுமென்பதுதான் அதன் பின்னிருக்கும் அர்த்தம்.
சாப்பிடுவது என்றில்லை, நம் வாழ்வில் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்க வேண்டும். உடனே ‘ஸ்லோமோஷன்ல வாழ்றது நல்லாவா இருக்கும்’ என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
இன்றும் கிராமப்புறங்களில் இருக்கும் மனிதர்களிடம், நகரங்களில் வாழும் சில பெரியோர்களிடம் இதனைப் பார்க்க முடியும். அவர்கள் அதிகாலையில் எழுவார்கள்; வெகுசீக்கிரம் குளிப்பது உள்ளிட்ட கடமைகளை முடிப்பார்கள்.
காலை உணவை எவ்விதப் பதற்றமும் இன்றி உண்பார்கள். வேலைக்குச் செல்வதாக இருந்தால் கூட, அதிலொரு நிதானம் இருக்கும்.
தம்மைச் சுற்றியிருப்பவற்றில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால் கூட உடனே அவர்கள் கண்டுகொள்வார்கள். ‘வானம் ஏன் இன்னிக்கு மந்தமா இருக்கு’ என்று மேலே நோக்கிக் கவலை கொள்வார்கள். வீடு திரும்பும்போது களைப்பிருந்தாலும் சலிப்பு சற்றுமின்றித் தென்படுவார்கள்.
‘காலையில் சீக்கிரம் எந்திருக்க வேண்டுமே’ என்ற பயம் இல்லாமல் படுக்கைக்குச் செல்வார்கள். குறிப்பாக, படுத்ததும் உறங்கிவிடுவார்கள். அடுத்தநாள் திரும்பவும் இதே கதைதான்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது செக்கு மாட்டின் சுழற்சியாகத் தெரியலாம். ஆனால், ஒவ்வொரு நாளையும் பகிர்வதற்கு அவர்களிடம் ஆயிரம் கதைகள் இருக்கும்.
ஒவ்வொரு நொடியிலும் ஏதாவதொரு லாபம் பெற்றாக வேண்டும் என்ற கணக்குடன் திரியும் நம்மிடம் என்ன மீதமிருக்கிறது?
ஆண்டு முழுவதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுபவர்கள், ஒருநாளாவது நிதானிக்கட்டுமே என்று தான் ‘உலக சாண்டரிங் தினம்’ கொண்டாடப்படுகிறது.
என்னைக் கேட்டால், ஒவ்வொரு நாளும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பேன்.
வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஸ்லோமோஷனுக்கும் சுவாரஸ்யத்திற்கும் எந்த விரோதமும் இல்லை. வாருங்கள், நம் வீட்டுக் கடிகாரத்தின் நொடி முற்களை நிதானம் சுமக்க வைப்போம்!
– உதய் பாடகலிங்கம்