மாணவிக்கு கல்லூரியில் சேர கருணை காட்டிய அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகள் நந்தினி.

அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நந்தினிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. பெற்றோருக்கும் கல்வி விழிப்புணர்வு இல்லாததால் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது தாமதமானது.

இறுதிக் கட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்ததால் மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

ஆனால், கல்லூரிக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தும்போது, இணையதளக் கோளாறால் கட்டணம் செலுத்த முடியாமல் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

இதனால், அரசு கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்காமல் மாணவி நந்தினி வேதனை அடைந்தார்.

இந்நிலையில், இதுகுறித்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது. அதைத் தொடர்ந்து  அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் தற்போது மாணவி நந்தினி கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

You might also like