– மதிவாணன் மாறன்
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனை முன்வைத்து பல்வேறு கொண்டாட்டங்களைப் பார்க்க முடிகிறது.
நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடம் – தமிழ்நாடு மாணவர் என சொல்லப்படும் கவுஸ்தவ் பவுரி மற்றும் சூர்யா சித்தார்த், ஆகியோரும் 3, 6,9-வது இடங்களைப் பிடித்துவிட்டனர் – நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழ்நாட்டு மாணவர்கள்.
தமிழ்நாட்டில் 1,47,583 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்; இதில் தேர்வு எழுதியவர்கள் 1,44,516 பேர்; தேர்ச்சி பெற்றவர்கள் 78,693 பேர். தமிழ்நாட்டு மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதம் 54.5%.
நீட் தேர்வில் தமிழ்நாடு 21-வது இடம். இதனை முன்வைத்து நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களும் சாதிக்க தொடங்கிவிட்டனர்; நீட் தேர்வை தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றிகரமாக சாத்தியமாக்கிவிட்டனர்; இனி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தமிழ்நாட்டில் தேவை இல்லை என்றெல்லாம் மகிழ்வுரையும் முடிவுரையும் ஒருசேர எழுதுகின்றனர்.
சரி.. நீட் தேர்வில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவர் பிரபஞ்சன் சொல்வதை ஒரு நிமிடம் உன்னிப்பாக காது கொடுத்து கேட்க வேண்டும்.
“எனது பெற்றோர் அரசு பள்ளி ஆசிரியர்கள். தனியார் கோச்சிங் சென்டரில் ரூ13 லட்சம் செலவு செய்து நீட் தேர்வுக்கு தயாரானேன். அதனால் இந்த வெற்றி சாத்தியம்” என்பதுதான்.
இந்த அடிப்படை உண்மையை மறைத்து ஏதோ குப்பன் சுப்பன் வீட்டு பிள்ளையும் சுள்ளி கள்ளி பொறுக்கிறவர் பிள்ளையும் மூட்டை தூக்குகிறவர் பிள்ளையும் இலகுவாக நீட் தேர்வில் மதிப்பெண் பெற்று சாதித்துவிட்டதாக கொண்டாடித் தீர்க்கின்றனர்! இது ஆகப் பெரும் அநியாயம் அல்லவா?
முதலில் நீட் தேர்வு என்பதே எதற்கு என்பது கேள்வி. மாநில பாடத் திட்டத்தின் கீழ் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றதில் என்ன அநீதி இழைக்கப்பட்டது?
அரசு பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, தனியார் பள்ளியோ.. மாநில பாடத் திட்டத்தை முறையாக பயின்று உயரிய மதிப்பெண்களை அரியலூர் அனிதாக்களைப் போல பெற்றிருந்தாலே மருத்துவ படிப்புக்கான வாசற்கதவு திறந்து இருந்தது என்ற நிலையை அக்கிரமமாக மூடியது எதற்காக?.
பல்வேறு பாடத் திட்டங்களைக் கொண்ட இந்தியா நாடு முழுமைக்கும் ஒரே ஒரு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழான பாடங்கள் அடிப்படையில் நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது அநீதியானது இல்லையா?
சிபிஎஸ்இ பாடங்களைப் படிக்காமல் தாய்மொழியில் சொந்த மாநிலம் தயாரிக்கும் பாடம் படிக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சாகடிப்பது இல்லையா? என்பதைத்தான் அனிதா தொடங்கி பலரது தற்கொலை சாவுகள் இன்னமும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்த சமூக அநீதிக்கு, இந்த இழவு வீட்டு ஒப்பாரிக்கு இன்னமும் முடிவு தெரியாமல் தமிழ்நாட்டு குக்கிராமத்து / ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வீட்டு பிள்ளைகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக மாதம் ரூ2 லட்சம் ஊதியம் வாங்குகிற பெற்றோர், ஆண்டுக்கு ரூ13 லட்சம் செலவழித்து தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு மாணவரை சேர்த்து முதலிடம் பெறுவதை எப்படிக் கொண்டாட மனது வருகிறது?
இப்படியான வசதி படைத்த ஒரு பிரபஞ்சனின் வெற்றியை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர் சமூகத்துக்கும் பொதுமைப்படுத்துவதை எப்படி சகிக்கத்தான் முடியும்?
இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில் நடுத்தர வர்க்கமோ, பணக்காரர்களோ மட்டுமே எண்ணிப் பார்க்கக் கூடிய படிப்பாக மருத்துவம் உருமாற்றப்பட்டுவிட்டது.
இதற்காக பிளஸ் டூ தேர்வுக்கு முன்னரே, நீட் கோச்சிங்குக்கு சரியான பள்ளி எது என தேடத் தொடங்கி, குடும்பம் குட்டியோடு இடம்பெயர்ந்து அகதிகளைப் போய் ஊர் ஊராக தங்கி பிள்ளைகளை மருத்துவராக்க முடியாதா? என போராடுகிற சக்தியும் சாத்தியமும் எத்தனை லட்சம் பெற்றோருக்கு இருக்கிறது? இத்தனை கோடிப் பேரில் சில ஆயிரம் பெற்றொருக்குத்தான் இருக்கக் கூடும். இது ஆகப் பெரும் சமூக அநீதிதானே!
இத்தகைய கொண்டாட்ட மனநிலைகள் என்பது ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட ஏழை வீட்டு பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அடித்துக் கொண்டே இருக்கும் சாவு மணி என்பதை பொதுஜனங்களும் சரி, அவர்களை திசைதிருப்புகிற அரசியல்வாதிகளும் சரி ஒருநிமிடமாவது சிந்தித்து பார்க்கட்டும் என்பதுதான் கல்வியாளர்கள், சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.