விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய
‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
–