அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகின்றன. இதற்கு யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது தான் காரணம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு பலருக்கு மனமில்லை.
யானைகள் தங்கள் வாழ்விடத்தைத் தேடி அலையும்போது தான் அதிகளவில் உயிரிழப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். யானைகளின் இடம்பெயர்வால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுவதும் மறுப்பதற்கில்லை.
யானைகள் இடம்பெயர்வின் போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழப்பதே அதிகளவில் இருக்கின்றன. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 85 முதல் 120 யானைகள் வரை உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேருயிர்கள் பலியாவதைத் தடுக்க அரசு முயற்சி எடுத்தாலும் அரசை மட்டுமே நம்பியிராமல் பொதுமக்களும் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். யானைகளை விரட்ட ஏற்கனவே உள்ள எளிய, பாதிப்பில்லாத நடைமுறைகளைக் கையாள வேண்டும்.
யானைகள் தேனீக்களைப் பார்த்து பயப்படும் சுபாவம் உடையவை. அதனால் ஆப்ரிக்க நாடுகளில் மின்சார வேலிகளுக்கு பதிலாக தேன்கூடு வேலிகளை விவசாயிகள் அமைக்கிறார்கள்.
இதனால் யானைகள் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தேனீக்கள் உதவியால் மகரந்த சேர்க்கை அதிகமாக இருப்பதால் விளைச்சலும் அதிகமாக இருக்கிறதாம்.
இதுபோன்ற யுக்திகள் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் காட்டுயிர்கள் பலியாவதைத் தடுக்க முடியும் பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் முடியும். இயற்கைச் சூழலையும் பாதுகாக்க முடியும். அதை நாமும் செய்வோம்.
– யாழினி ராஜ்