ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளரான கதை!

-விஜய் மகேந்திரன்

எழுத்தாளர் விஜய் மகேந்திரன், பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதிய ஏ.ஆர். ரஹ்மான் புத்தகத்தில் இருந்து சிறு பகுதியை பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் மியூசிக் கண்டக்டராக ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் வேலை பார்த்தபோது, இளையராஜா அவரிடம் கிடார், காம்போ ஆர்கன் வாசித்துள்ளார்.

பின்பு, ரஹ்மானும் ராஜாவுக்கு நிறைய படங்களில் கீ போர்டு வாசித்துள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது, ரஹ்மான் வாழ்க்கையில் பலமுறை நிரூபணமாகியுள்ளது.

ஆர்.கே.சேகர் மலையாளத்தில் சில படங்கள் இசையமைப்பாளராக வேலை செய்துகொண்டிருந்த நிலையில், வயிற்று வலிப் பிரச்சினை அதிகமாகி குணமாகாமல் இறக்கிறார்.

ரஹ்மான் குடும்பத்துக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை?

வீட்டில் சேகர் வாங்கிவைத்திருந்த நவீன கீபோர்டுகள், சிந்தசைசர், ஆர்கன் ஆகிய இசைக் கருவிகள் இருந்தன.

பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அந்தக் கருவிகள், அப்போது சென்னையில் இருந்த பாதி இசையமைப்பாளர்களிடம் இல்லை. அதை வாடகைக்கு விட்டுப் பணம் வாங்கி வருவார் ரஹ்மான்.

ஒருகட்டத்தில் ரஹ்மானின் அம்மா அந்த இசைக்கருவிகளை முறையாக அவரைக் கற்றுக்கொள்ளச் சொன்னார். அப்படித்தான் இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் ரஹ்மான்.

இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசிப்பவராகப் பணியாற்றுகிறார். ஒரு நாள், இளையராஜா குழுவில் இருந்து அழைப்பு வருகிறது. ‘மூடுபனி’ படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது.

தன் குழுவிலுள்ள கீ போர்டு வாசிப்பவர், மது அருந்திவிட்டு ரிக்கார்டிங்குக்கு வரவே அவரை வெளியேற்றிவிடுகிறார் ராஜா.

வேறு ஒரு கீபோர்டு பிளேயரை அழைக்கச் சொல்கிறார். அப்போது, அவர் குழுவிலுள்ள ஒருவர், ‘நம்ம சேகர் மாஸ்டர் பையன் திலீப்பைக் கூப்பிடலாம்’ என்கிறார்.

12 வயதுப் பையனாக ரஹ்மான் உள்ளே நுழைகிறார். அவரிடம் நோட்ஸ் தரப்படுகிறது.

சிறு பையனாக இருக்கிறார் வாசித்துவிடுவாரா? என்ற சந்தேகம் ராஜாவுக்கு எழ, நோட்ஸை வாசித்துக்காட்டச் சொல்கிறார். சிறு இடங்களில் பிசிறு தட்டியதே தவிர வாசித்துவிடுகிறார்.

இளையராஜா, ரஹ்மானின் கையின் மீது கைவைத்து அந்த நோட்ஸை வாசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்.

அதன்பிறகு, முழு ரிக்கார்டிங்குக்கான வாசிப்பையும் சரியாகவே வாசிக்கிறார். ‘மூன்றாம் பிறை’ படத்தின் பாடல்களில் கீபோர்டு வாசிக்கவும் ரஹ்மானுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார் ராஜா.

ரஹ்மான் திரையிசைத் துறையில் நுழைந்து மாபெரும் வெற்றிபெற்ற பிறகு அவர், அதிகமாக எதிர்கொண்ட கேள்வி ஒன்று உண்டு.

அது, ‘இளையராஜாவிடம் பணிபுரிந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?’ என்பதுதான். அதற்கு, ரஹ்மான் ஒரே பதிலைத்தான் இதற்குக் கூறிவந்திருக்கிறார்.

“நான் இசைக் கருவிகளை வாசிப்பவனாகப் பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியிருக்கிறேன்.

இத்துறையில் இருப்போரிடம் ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் இருக்கும். மது, கஞ்சா, பாக்கு இதுமாதிரி ஏதாவது ஒரு பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பார்கள்.

நான்கூட இப்படி ஏதாவது கெட்ட பழக்கம் இருந்தால்தான் பெரிய ஆளாக முடியும்னு நினைத்திருந்தேன்.

ஆனால் ராஜா சார்தான், எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லாமல், ஒருதுறவிபோல இருந்துகொண்டு, அருமையான இசையைக் கொடுக்க முடியும்னு நிரூபிச்சார்.

நான் ஆன்மிகத்தில இவ்வளவு ஈடுபாட்டோடு இருப்பதற்கும் அவர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாம்” என்று பல இடங்களில் பெருமையுடன் சொல்லியிருக்கிறார்.

தென்னிந்தியாவில் இருந்து பல இசையமைப்பாளர்கள் இந்திக்குப் போய் ஒன்றிரண்டு படங்கள் செய்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்கள்.

இளையராஜா சத்மா, காமாக்னி, மகாதேவ் போன்ற இந்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாலு மகேந்திராவின் ‘சத்மா’ மூன்றாம் பிறை படத்தின் இந்தி ரீமேக்.

இந்தியில் இந்தப் படத்தைத் தயாரித்தவர் ராஜ் சிப்பி. அதற்காக ராஜா அமைத்த பாடல்கள் இன்னும் வட இந்தியாவில் பிரபலமாக உள்ளன.

அதில் சுரேஷ் வட்கர் பாடிய ‘ஏ ஜிந்தகி’ பாடல் இன்றும் கிளாஸிக் அந்தஸ்தில் இருக்கிறது.

இளையராஜா ரஹ்மானுக்கு முன்பே இந்தியில் கொடி நாட்டியிருக்கவேண்டியவர்.

இசைஞானியின் அருமை நம்மைவிட பப்பி லஹரி, ஆனந்த் – மிலிந்த், நதீம் – சர்வன், அனுமாலிக் ஆகிய இந்தி இசையமைப்பாளர்களுக்கு நன்கு தெரியும்.

இவர்கள் அனைவரும் ராஜாவின் டியூன்களை ஏதோ ஒரு விதத்தில் அப்படியே அல்லது கொஞ்சம் மாற்றியோ பாடல்கள்போட்டிருக்கிறார்கள்.

ஆனந்த் – மிலிந்த் இசையமைத்த தில் படத்தில் ‘ஓ ப்ரியா ப்ரியா’ படத்தின் மெட்டும் இசையும் அப்படியே உள்ளது.

கேட்டால் ராஜா சார் எங்களது மதிப்பிற்குரிய கம்போசர் அதனால் இன்ஸ்பையர் ஆகி அவரது டியூனை அடிப்படையாகக் கொண்டு போட்டோம் என்று விடுவார்கள்.

அதற்கு மேலும் யாரும் கேள்விக்கேட்க முடியுமா? என்ன? இப்படிப் பல பலவீனமான இந்தி கம்போசர்களுக்குத் தனது பல பாடல்கள் மூலம் மறைமுகமாக உதவி இருக்கிறார் இளையராஜா.

இளையராஜாவுக்கு இந்தியில் நேரடியாக இசையமைப்பது ஒத்துவரவில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் முடிசூடா மன்னனாக அதிகமான படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருந்தார்.

அவரைப் பல படங்களுக்குக் கூப்பிட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ராஜ் சிப்பியின் ‘மகாதேவ்’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

என்ன காரணத்தினாலோ பின்னணி இசைக்கு சிப்பி படத்தின் ஸ்டாக் மியூசிக்கைப் பயன்படுத்திவிட்டார். ராஜா இசையமைத்த படங்களுக்கு அவரேதான் பின்னணி இசையமைப்பார்.

எனவே, இந்த விஷயம் தனது பெயரைக் கெடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டார்.

அதன்பிறகு, உடன்படிக்கைக்கு வந்த ராஜ் சிப்பியும், இளையராஜாவுடன் மீண்டும் நண்பரானார். இளையராஜாவே அந்தப் படத்துக்கான பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்தார்.

இந்தி படங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவு இந்த படத்தோடு சில ஆண்டுகள் நின்றுவிட்டது. அதன் பிறகு சில இந்திப் படங்களுக்குப் பெரிய இயக்குநர்கள் இளையராஜாவை இசையமைக்க விரும்பி அழைத்தும் மறுத்துவிட்டார்.

தமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பதையே பெரிதும் விரும்பினார்.

விரும்பிக்கேட்ட சில இயக்குநர்களுக்கு மட்டும் தெலுங்கு, மலையாளப் படங்களுக்கு இசையமைத்தார். பின்னாட்களில் ஆர்.பால்கி இயக்கிய இந்திப் படங்களுக்கு வரிசையாக இசையமைத்தது தனிக்கதை.

You might also like