காவிரி மேலாண்மை ஆணையம் கேள்வி
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கண்டிப்பாக அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லியில் காவிரி ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘காவிரியில் கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகதாது அணைக்கட்ட எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கம் கொண்டது எனவும் எனவே ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி நதி உள்ளிட்ட அணைகளின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதனை தடுத்து நிறுத்த ஆணையம் முன்வர வேண்டும் என தெரிவித்ததாகக் கூறினார்.
பின்னர் அந்த மனுவை பரிசீலித்த ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘கர்நாடக அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரங்கள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க ஆணையம் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையத்தின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது என அவர் உறுதியளித்ததாகவும் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.