இசையால் ஆற்றுப்படுத்தும் இளையராஜா!

நண்பர் ஒருவரிடம் யாராவது ‘நான் இளையராஜாவின் பரம ரசிகன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் போதும்.

உடனே உற்சாகமாகி, “இந்த உலகத்திலேயே இளையராஜாவுக்கு நம்பர் 1 ரசிகர் ஒருவர் இருக்கிறார். அவருக்குக் கீழேதான் மற்றவர்கள். ராஜாவின் பாடல்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி” என்று நிறுத்துவார்.

புதியவர் ஆர்வத்தோடு, “யாருங்க அவர்?” என்பார்.
நண்பர் பெருமிதத்தோடு, “நான்தான்” என்பார்.

இளையராஜாவின் அத்தியந்த ரசிகன் தான் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டியது என்பது நண்பருக்குத் தெரியாது.

இளையராஜாவின் விசேஷம் அதுதான். அவரை எல்லோருக்கும் பொதுவானவர் என்று யாரும் நினைப்பதில்லை. அவர் தனக்காகவே, தன் பொருட்டே இந்தப் பாடல்களை உருவாக்கியிருக்கிறார் என்று உண்மையாகவே நம்புகிறவர்கள்தான் அதிகம்.

எப்படி இந்தக் கலைஞனால் எல்லோருக்கும் அந்தரங்கத் தோழனாக மாறியிருக்க முடிந்திருக்கிறது?

உண்மையில் அவர் உருவாக்கும் சங்கீதத்தைக் கேட்டு அவரை உருவகித்துக் கொண்டவர்களுக்கு, அவரை நேரில் சந்தித்தால், அவரோடு உரையாடிப் பார்த்தால் கிடைக்கும் சித்திரம் வேறாகத்தான் இருக்கும்.

ஒரு நிஜமான மேதையைச் சாதாரணவர்களால் அவ்வளவு எளிதில் அளந்துவிட முடிவதில்லை. மேதைகளின் அகக் கதவுகள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகத் திறந்துவிடுவதில்லை.

எழுதித் தீராத பெருமைகள். ஆனாலும் என்ன, இன்று அவரைவிட தமக்கு நெருக்கமான கலைஞனாக வேறு எவரையும் தமிழர்கள் தமது மனங்களில் வைத்திருக்கவில்லை.

வேறு எந்தத் திரைக் கலைஞரைப் பற்றியும் இந்த அளவுக்கு எழுதப்பட்டதுமில்லை.
அவருடைய நாட்டார் இசைப் பின்னணி, திரையுலகிற்கு வந்த பிறகு தன் இசையறிவை மேம்படுத்திக் கொள்ள செவ்வியல் இசை மரபுகளைக் கற்றது,
பீத்தோவனையும் தியாகராஜரையும் தனது பாடல்களில் ஒன்றிணைத்தது எனப் பல்லாயிரம் பக்கங்கள் அச்சிலும் இணையத்திலும் இன்றுவரை எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இவ்வளவு எழுதியும் அவருடைய இசையைப் பற்றிப் புதிதாகச் சொல்வதற்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

ராஜாவின் மீதான மயக்கத்துக்கான அடிப்படைக் காரணம் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த தென்னிந்தியர்களின் அந்தரங்க உலகை இந்தக் கலைஞனின் சங்கீதம் வியாபித்திருப்பதுதான்.

இவர்கள் எல்லோரிடமும் ஒரு கதை இருக்கிறது. அது வேறு எவரோடும் பகிர்ந்துகொள்ள முடியாத கதையாக இருந்தாலும், ஒரே ஒருவருக்கு மட்டும் அது தெரிந்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

தன்னுடைய ரகசிய உணர்வுகளை எப்படியோ கண்டுபிடித்து, தன்னை ஆற்றுப்படுத்துவதற்காகவே இந்தப் பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார் என்று சத்தியம் செய்கிறார்கள்.

மொட்டை மாடிகளில், இரவு வானத்துக்குக் கீழே அவர்கள் தனியாக அமர்ந்திருக்கவில்லை. அந்த இசைக் கலைஞன் அருவமாக அவர்களுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்.

அவர்களுடைய தலைகளை தன் மடியில் கிடத்திக்கொள்கிறார். அவருடைய கூட்டு வயலின்களும் புல்லாங்குழலும் அவர்களுடைய கண்ணீரை ஒற்றியெடுக்கின்றன.

“இளையராஜா என்று ஒருத்தர் இல்லையென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பே செத்துப்போயிருப்பேன்” என்று எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருப்போம்.

இந்த மனிதனின் அளவுக்கு ரசிகனின் உயிர் தொட்ட இசைஞன் வேறு யாராவது இருக்கிறார்களா என்று வியப்புடன் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இவருக்கு முன்பு எண்ணற்ற மேதைகள் பங்களித்த பூமி இது. அக்கலைஞர்கள் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். கடவுள்களின் அவதாரங்களாக நினைக்க வைத்திருக்கிறார்கள். விழுந்து பணிய வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இவர்தான் நம்மை ஆதரவாக அணைத்து, தன் மடியில் கிடத்தி கண்ணீர் துடைப்பவராக இருந்து வருகிறார். இவரது இசையைத்தான் நாமும் நமக்கென்று சொந்தம் கொண்டாட முடிகிறது.

“இது என்னோட பாட்டு” என தைரியமாக அறிவித்துக்கொள்ள முடிகிறது.

இதனை விளக்கப் புகுந்தால் அது தர்க்க முரண்பாடுகளைக் கொண்டு வருவதாக அமையும். பகுத்தறிவு கொண்டு விளக்க முடியாத விநோதங்களை இளையராஜாவின் இசை நம்மிடம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

தம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை ஒருவர் சொல்லத் தொடங்கினால், சுற்றியுள்ள மற்றவர்களும் தயக்கங்களைத் துறந்து தனக்கு நேர்ந்த அதிசய அனுபவங்களை விவரிக்கத் தொடங்கி விடுவார்கள்.

எல்லோருடைய கதைகளிலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் காண்கிறோம். விளிம்புகளில் தொற்றிக் கொண்டிருப்பவர்களை இவரது சங்கீதம் கைப்பற்றி மேலே இழுத்து வந்திருக்கிறது.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டிருப்பவர்களுக்கு ஆறுதலை மட்டுமல்ல நம்பிக்கையையும் தந்து உயிர்ப்பித்திருக்கிறது.

இவருடைய பாடல்களின் வரிகளால் அல்ல, அந்த நாதத்தால் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் இவர்கள்.

கவிஞர்களின் வரிகள் புத்துணர்வைக் கொண்டுவந்த கதைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்திருக்கின்றன. இளையராஜாவின் வருகைக்குப் பிறகு வரிகள் கரைந்துவிட்டன.

குரலற்ற, சொற்களற்ற இசை ஒவ்வொருவரின் மன அமைப்புக்கேற்பத் தகவமைத்துக் கொண்டு வியாபித்திருக்கத் தொடங்கிவிட்டது.

அன்று நான் அமர்ந்திருந்த பேருந்தின் ஓட்டுநருக்கும் இன்னொரு பேருந்தின் ஓட்டுநருக்கும் பெரிய தகராறு. பேருந்து நிலையத்தில் இருப்பவர்கள் எல்லோரும் கூடிவிட்டார்கள். எந்த நேரத்திலும் கைகலப்பாக மாறும் சூழல். யாரோ வந்து எப்படியோ சமாதானப்படுத்தி எங்கள் ஓட்டுநரைப் பேருந்தில் ஏற்றிவிட்டார்கள்.

அவரும் உரக்கத் திட்டிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறார். பேருந்து நிலைய வாசலுக்கருகே குறுக்கே நிறுத்தியிருந்த வண்டியின் ஓட்டுநரைத் திட்டுகிறார். அவருக்குப் பக்கத்தில் மூட்டைகளாக அடுக்கி வைத்திருந்த பயணியைத் திட்டுகிறார்.

பேருந்தில் அதுவரை ஏதோ புதிய படங்களின் பாடல்கள் இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தை மீறி எங்கள் ஓட்டுநர் கத்திக் கொண்டிருந்தார்.

பேருந்து நகர எல்லையைத் தாண்டும்போது ஒரு பாடல் முடிந்து மற்றொரு பாடல் ஆரம்பித்தது. ஏதோ மறுபடியும் திட்டுவதற்கு வாயெடுத்த ஓட்டுநர் சட்டென்று மெளனமானார்.

ஸ்வர்ணலதாவின் குரல் – அந்தப் பிரபலமான ஹம்மிங் – பேருந்தைத் தழுவத் தொடங்கியது. பிறகு பாடல் தொடங்கியது.

‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி…’
திடீரென்று பேருந்துக்குள் வெப்பம் குறைந்தது. உடம்பை நனைக்காமல் எல்லோருக்குள்ளும் மழை தூவத் தொடங்கியது.

நான் ஓட்டுநரையே கவனித்துக் கொண்டிருந்தேன். நெரித்திருந்த புருவங்கள் இப்போது தளர்ந்திருந்தன. சற்று நேரம் கழித்து அவருடைய விரல்கள் ஸ்டியரிங்கில் தாளமிடத் தொடங்கின.

பாடல் முடிந்தபோது வேறு மனிதராகியிருந்தார். கைக்குழந்தையோடு நின்றுகொண்டிருந்த பெண்ணிடம்.

“அந்த மூட்டையை நகர்த்திட்டு பானட் மேல உட்காரும்மா. குழந்தையை அந்தப் பெரியவர்கிட்ட கொடு” என்றார்.
எவ்வளவு கனிவு அந்தக் குரலில்!

இன்னும் நூறாண்டு நீங்கள் வாழ வேண்டும் ராஜா!
*
(‘மின்னம்பலம்’ இணைய இதழில் 2018ல் வெளிவந்த கட்டுரை. இக்கட்டுரை வெளிவந்தவுடன் எனக்கு நேர்ந்த அனுபவம் இது:

“வணக்கம் சார். உங்க இளையராஜா கட்டுரை படிச்சேன்.”

“அப்படிங்களா? நன்றி. சொல்லுங்க. உங்க பேரு?”

“முருகன். புதுக்கோட்டைங்க”.

“சொல்லுங்க”

“……”

“முருகன், சொல்லுங்க”

“…..” (விசும்பல் ஒலி)

“முருகன்…என்ன ஆச்சு? சொல்லுங்க”

“சார்… உங்க கட்டுரைல எழுதியிருந்தீங்களே.. ”

“ம்..”

“அது நாந்தாங்க”

“அப்படிங்களா? சொல்லுங்க”

அதன் பிறகு அவர் திணறித் திணறி சொன்னதன் தொகுப்பு:

“எனக்கு ரெண்டு வயசாகி இருந்தப்போ அப்பா போயிட்டாருங்க. நாலரை வயசில அம்மா வேலைக்கு போயிருந்தப்போ ஆக்ஸிடென்ட்ல போயிட்டாங்க…. அத்தை, பெரியப்பா, தாத்தா வீடுன்னு நாலஞ்சு வீட்ல வளர்ந்தேங்க.

எந்த வீட்லயும் அவங்களோட சேர்ந்து என்னை படுக்க வைக்க மாட்டாங்க. தனியாத்தான் படுப்பேன். ஸ்டோர் ரூம், திண்ணை, சமையல் ரூம், மொட்டை மாடி… அம்மாப்பா இல்லாத பசங்க தனியா படுத்து தூங்கறதைப் பத்தி யோசிச்சுப் பாருங்க…

ஆனா நான் தனியாவே இருந்ததில்லீங்க. டிரான்சிஸ்டர் ஒண்ணு வச்சிருப்பேன். ராஜா என்னைத் தனியா இருக்க விட்டதேயில்லீங்க. சிலோன் ரேடியோல ராஜா சார் எனக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் தூங்கவப்பாருங்க.

நான் அழுதா உடனே அவருக்கு எப்படியோ தெரிஞ்சிடும். உடனே எனக்கு பொருத்தமா ஆறுதலா ஏதோவொரு பாட்டைத் தருவாருங்க.

மடியில போட்டு கண்ணைத் தொடச்சி விடுவார்னு எழுதியிருந்தீங்களே… அது எனக்குத்தாங்க. அவருதான் என்னைக் கைவிடாம தூக்கி நிறுத்தியிருக்காருங்க”.
ராஜா சார்… இந்தக் கதைகள் எல்லாம் உங்கள் காதில் விழுகிறதா?)

நன்றி: குப்புசாமி கணேசன் முகநூல் பதிவு

You might also like