பாக்யராஜிக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பரிசு!

மக்கள்திலகம் மீது அதீத அன்பும், தனி மரியாதையும் வைத்திருந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படத்திலும் எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்திருப்பார்.

வசனக் காட்சிகளின் பின்னணியில், எம்.ஜி.ஆர். போட்டோ இருக்கும். புரட்சித் தலைவரை அவர் தெய்வமாகவே பாவித்தார்.

இதனால் பாக்யராஜ் மீது எம்.ஜி.ஆருக்கும் நல்ல எண்ணமும், அபிமானமும் உண்டு.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் – பூர்ணிமா திருமணம் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.

காலை 8 மணிக்குத்தான் திருமணம். ஆனால் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம், ஜானகி அம்மாளுடன், எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து விட்டார்.

அன்று மாலை ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் எம்.ஜி.ஆர். பங்கேற்றார்.

அங்கிருந்து நேராக நுங்கம்பாக்கத்தில் உள்ள பாக்யராஜ் வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், இரண்டு ஆளுயர குத்துவிளக்குகளை வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பிறகுதான், பாக்யராஜுக்கு இது தெரிய வந்தது.

“ஒருவருக்கு பரிசு அளிப்பது நான்கு பேருக்கு தெரிய வேண்டாம்’’ எனும் எண்ணத்தில்தான், மேடையில் கொடுக்காமல், பாக்யராஜ் வீட்டில் கொண்டுபோய் விளக்கை கொடுத்துள்ளார் பொன்மனச்செம்மல்.

கலை உலக வாரிசு:

என் கலை உலக வாரிசு என பாக்யராஜை பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

அவரை, அரசியலில் நுழைத்து விடும் திட்டமும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
தாவணிக் கனவுகள் படத்தை பாக்யராஜ் ஆரம்பித்திருந்த நேரம் அது.
அதில் பாக்யராஜூடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

அப்போது தன்னை சந்தித்த பாக்யராஜை, எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

நேரடியாக மறுப்பு சொல்ல முடியாமல் தவித்த பாக்யராஜ்,

“தாவணிக் கனவுகள் பட ஷுட்டிங் உள்ளது. சிவாஜி சார் 15 நாள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருக்கார். ரொம்ப கஷ்டப்பட்டு தேதிகள் வாங்கி இருக்கேன். அவரிடம் நான் எப்படி கால்ஷீட் மாற்றிக் கேட்க முடியும்” என சமாளிக்க –
எம்.ஜி.ஆர். உடனடியாக சிவாஜிக்கு போன் போட்டு பேசினார்.

“பாக்யராஜை நான் கட்சிப் பிரச்சாரத்துக்கு அழைச்சுட்டு போகலாம்னு இருக்கேன். ஆனா நீங்க தாவணிக் கனவுகள் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தயங்குகிறார்’’

– என சொல்ல,

“நீங்க தாராளமாக அழைச்சுட்டு போகலாம். நான் எப்போ வேணும்னாலும் அவருக்கு கால்ஷீட் தர்ரேன்’’ என கூறியுள்ளார் சிவாஜி.

இதை பாக்யராஜிடம் சொல்லி “எப்போ பிரச்சாரத்துக்கு கிளம்பலாம்?” என கேட்டுள்ளார்.

இதற்கு மேலும் சமாளிக்க விரும்பாத பாக்யராஜ் “உங்கள் அன்பு போதும். எனக்கு அரசியல் வேண்டாம்’’ என மறுத்து விட்டார்.

அப்போது பாக்யராஜ், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் ஏதும் செய்யவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறாக இருந்தது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருந்தது. உடல் நலக்குறைவால் அப்போது மக்கள் திலகத்தால் பிரச்சாரத்துக்கு செல்ல முடியவில்லை.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். வேண்டுகோளை ஏற்று, தமிழக எல்லையான ஓசூரில் தொடங்கி மாநிலம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.முக. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் பாக்யராஜ்.

அரசியலே வேண்டாம் என ஆரம்பத்தில் ஒதுங்கியவர், புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பித்ததும், அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிட்டதும் தனிக்கதை.

பி.எம்.எம்.

You might also like