போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏனிந்த நிலை?

புதுடெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் நிறக்கப்பட்ட நிலையில் – ஊடகம் சார்ந்தவர்களை அதிர வைத்திருக்கிறது டெல்லியில் போரட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேல் டெல்லியில் உள்ள  ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

எதற்காக இந்தப் போராட்டம்?

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாரதிய ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது தொடர்ந்து பல பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்த மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க‍க் கோரித் தான் போராட்டத்தையே துவக்கினார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. எம்.பி. மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அவர் கைது செய்யப்படவில்லை.

அதனால் அவரைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

இதனால் டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கும் நாளன்று பேரணியாகச் செல்ல முற்பட்டனர் மல்யுத்த வீராங்கனைகள்.

அவர்களுக்கு ஆதரவாக‍க் களம் இறங்கிய விவசாயிகளும் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார்கள்.

உடனே காசிப்பூர் எல்லை மூடப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் வரவிடாமல் தடுக்கப்பட்டனர்.

மல்யுத்த வீராங்கனைகள் வம்படியாக இழுத்துச் செல்லப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் நாள் அன்று இந்தச் சம்பவங்கள் நடந்து அதற்குரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.

பல எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் நடந்த சம்பவத்தில் காவல்துறை நடந்து கொண்ட வித‍த்தைக் கண்டித்திருக்கின்றன.

“முடிசூட்டு விழா முடிந்தது. ஆணவம் பிடித்த அரசர், தெருவில் மக்களின் குரலை நசுக்கிறார்’’ – என்று கண்டனத்தைப் பகிர்ந்திருக்கிறார் ராகுல்காந்தி.

செங்கோல் வளைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருந்தபடி – நாட்டுக்குப் பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்களைகளை இப்படி நடத்தியிருக்க வேண்டாம்,

விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுகிற வீராங்கனைகளுக்கு நிகழக்கூடிய பாலியல் அத்துமீறல்களைப் பற்றி அண்மையில் கூடச் சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

அதில் சீண்டலில் ஈடுபடுகிற வில்லன்கள் எப்படியும் இறுதிக்காட்சியில் தண்டிக்கப்படுகிற மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். பார்த்திருக்கிறோம்.

ஆனால், திரைப்படத்தில் நடக்கிற மாதிரியான சம்பவங்கள் தலைநகரான டெல்லியில் நடக்கின்றன.

மல்யுத்த வீராங்கனைகளும் தொடர்ந்து போராடுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்.

அவர்களது குரலை மறக்கடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

போட்டியில் மட்டுமே அவர்கள் வென்றிருக்கிறார்கள்.

– லியோ

You might also like