நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் – தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்.
அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப்படிப்பு தடைபட்டு, தொடர முடியாமல் இருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இவரின் தந்தை 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் இராசமாணிக்கனார் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியில் பயின்றார்.
குறுகிய காலத்தில் தந்தை மரணம் அடைந்ததால் மாணிக்கனாரைக் கவனிக்கும் பொறுப்பு, அவரின் அண்ணன் இராமகிருட்டிணனுக்கு ஏற்பட்டது.
குடும்ப வறுமை காரணமாக நன்னிலத்தில் ஒரு தையல் கடையில், சிறுவனாக இருந்த தம்பி இராசமாணிக்கனாரை வேலைக்குச் சேர்த்து விட்டார் அண்ணன்.
ஒரு நாள் தஞ்சை புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து தான் படிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் இராசமாணிக்கனார்.
தலைமை ஆசிரியரின் உதவியால் அப்பள்ளியில் பயின்று இறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் இராசமாணிக்கனார்.
அப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கரந்தை கவிஞர் இரா.வெங்கடாச்சலம், இராசமாணிக்கனாரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து, அவரைக் கரந்தை உமாமகேசுவரனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் அனுப்பிப் பயிலச்செய்தார்.
1928ஆம் ஆண்டு சென்னை வந்த இராசமாணிக்கனார், வண்ணாரப்பேட்டையில் இருந்த தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
1935ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தேறினார்.
1939ஆம் ஆண்டு பி.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1945ஆம் ஆண்டு ‘பெரியபுராண ஆராய்ச்சி’ என்ற ஆய்வுக்கட்டுரைக்காக எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
இவரின் இளமைக் காலத்தில் சித்தர்களின் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருஅருட்பா போன்றவைகளை ஆழ்ந்து படித்தார்.
அதன் விளைவாக இவரிடம் சுயமரியாதைச் சிந்தனைகள் மேலேங்கி நின்றன.
சாதி ஒழிப்பு – பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
அதற்காகவே ‘தமிழர் திருமணம்’ என்ற முற்போக்கு நூலை எழுதிச் சுயமரியாதைத் திருமணத்தை வரவேற்றார்.
1947 தொடங்கி 1953 வரை சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.
1953ஆம் ஆண்டில் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்று தமிழ்த் துறைத் தலைவராகவும் விளங்கினார்.
1959 தொடக்கம் 1967 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சைவ சித்தாந்தம் குறித்த அவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும் பெரும் வரவேற்ப்பைப் பெற்றன.
அதனால் – திருவாவடுதுறை ஆதினம் 1959ஆம் ஆண்டு இவருக்கு ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
மதுரை திருஞானசம்பந்த ஆதினத்திடமிருந்து 1955ஆம் ஆண்டு ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ என்ற பட்டம் பெற்றார்.
தருமபுரம் ஆதினம் 1963ஆம் ஆண்டு ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ என்று பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.
1930ஆம் ஆண்டு மா.இராசமாணிக்கனார் சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் பள்ளியில் ஆசிரியராக இருந்த கால கட்டங்களில் –
ஹர்சவர்தனன்
முடியுடை மூவேந்தர்கள்
பொற்கால வாசகம்
முசோலினி
– ஆகிய நூல்களை எழுதினார்.
தொடர்ந்து அவர் தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம் போன்ற பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.
பல்லவர் வரலாறு – பல்லவப் பேரரசர்- மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் – தமிழக வரலாறும் பண்பாடும் – தமிழ்மொழி இலக்கிய வரலாறு – சோழர் வரலாறு – தமிழ் இனம் – தமிழக ஆட்சி – தமிழ் அமுதம் – இலக்கிய அமுதம் – தமிழ்நாட்டு வடஎல்லை – தமிழகக் கலைகள் – புதிய தமிழகம் – சிலப்பதிகாரக் காட்சிகள் – சேக்கிழார் – சேக்கிழார் ஆராய்ச்சி – சைவ சமயம் – சைவ சமய வளர்ச்சி – பெரியபுராண ஆராய்ச்சி – நாற்பெரும் புலவர்கள் என்று பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’.
பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் 1967ஆம் ஆண்டு மே திங்கள் 26 ம் நாள் மரணம் அடைந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாரடைப்பினால் அவர் மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைவதற்கு முன், அவர் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ கையெழுத்துப் படிகளைப் பல்கலைக் கழகத்திடம் கொடுத்து, நூலாக வெளியிடுமாறு வேண்டியிருக்கிறார்.
ஆனால் பேராசிரியர் இராசமாணிக்கனார் மறைந்த உடன், அவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படிகளை ஓர் அறையின் மூலையில் போட்டு மூடிவிட்டார்கள் சென்னை பல்கலைக் கழகத்தார்.
பின்னர் அதே பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தற்செயலாக மூடிக்கிடந்த அறையைத் திறந்து பார்த்தபோது, அறையின் முலையில் பத்துப் பாட்டு ஆராய்ச்சி கையெழுத்துப் படிகள் கிடப்பதைப் பார்த்தார்.
உடனே அவர் அந்தப் படிகளை எடுத்து அதே பத்துப்பாட்டு என்ற தலைப்பில், பல்கலைக்கழக வெளியீடாக 1970ம் ஆண்டு வெளியிடச் செய்தார்.
நெ.து.சுந்தரவடிவேலு சொல்கிறார், ‘‘இவர் (இராசமாணிக்கனார்) எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியை வெளியிட வேண்டி, தான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்ததற்குப் பதில் அவரே வெளியிட்டு இருந்தால், பணமாவது கிடைத்திருக்கும். சென்னைப் பல்கலைக் கழகம் பத்துப்பாட்டு நூலை, யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்துவிட்டது வேதனை’’.
– நன்றி: கீற்று இதழ்