தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்!

பிரபல இயக்குநர்களிடம் உதவியாளர்களாக சேர்வது, பெரும் படையெடுப்புக்கு நிகரானது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளே மிஞ்சும். நீண்ட காத்திருப்புக்கு பிறகு உதவி இயக்குநர் வாய்ப்பு கிட்டும்.

தமிழில் ஒரு சில இயக்குநர்கள், தங்களுக்கு போதித்த “வாத்தியார்கள்’’ கடந்த தூரங்களை காட்டிலும் நெடும் தூரம் கடந்து, பிரமிக்க வைத்துள்ளார்கள்.

வணிக ரீதியில் தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் சிலரை பார்க்கலாம்.

கே.எஸ்.ரவிகுமார்

ஈ.ராமதாஸ் ஆரம்பித்து ராமராஜன் வரை உதவியாளராக வேலை பார்த்துவிட்டு விக்ரமன் இயக்கிய ’புதுவசந்தம்’ படத்தின் மூலம் இணை இயக்குநராக உயர்ந்தார் கே.எஸ்.ரவிகுமார்.

அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. 1990 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் வெற்றி ரவிகுமாரை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் வைத்திருந்தது.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோர் 2 ஆம் தட்டில் இருந்த சமயத்தில் தான் அவர்களை விக்ரமனால், இயக்க முடிந்தது. ஒரு படமும் அவர் சொந்தமாக எடுக்கவில்லை.

ஆனால் அவரது சிஷ்யர் ரவிகுமார், உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோரை இயக்கினார்.

சொந்தப் படமும் (தெனாலி) எடுத்து வெற்றி பெற்றார். குணச்சித்திர நடிகராகவும் பெயர் வாங்கி விட்டார்.

பெரிய நடிகர்களை வைத்து இயக்கியும், பிரமாண்ட படங்களைக் கொடுத்தும் – குருவை மிஞ்சிய சிஷ்யராக இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

ஷங்கர்

மசாலாப் படங்களைக் கொடுத்து ‘மினிமம் கியாரண்டி இயக்குநர்’ என பெயர் பெற்றவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம்தான் ஆரம்பத்தில் உதவியாளராக பணியாற்றினார் ஷங்கர். (அதற்கு முன்னர், மேடை நாடகங்களில் ஓமக்குச்சி நரசிம்மனுடன் சேர்ந்து நடித்துள்ளார்)

பின்னர் பவித்ரனிடம் இணை இயக்குநராக பணியாற்றினார்.

‘சூரியன்’ பட வெற்றிக்குபிறகு அவரிடம் இருந்து விலகி, ’ஜெண்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். வெள்ளிவிழா கொண்டாடியது.

அடுத்த படம் காதலனும் வெள்ளிவிழா. இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அவர் அடுத்தடுத்து  உருவாக்கிய அனைத்துமே பொன்னானது.

கோடம்பாக்கமே கொண்டாடியது ஷங்கரை.

ரஜினி, கமல், விஜய், விக்ரம் என முன்வரிசை நடிகர்கள், இவர் கை பட்ட பின் புதிய உயரம் தொட்டனர் என்பது உண்மை.

எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சிஷ்யர், 50 கோடி வாங்குவதாக தகவல்.

ஏ.ஆர்.முருகதாஸ்

எஸ்.ஜே.சூரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏ.ஆர்.முருகதாஸ். திறன் வாய்ந்த உதவியாளர்களை பெரிய இயக்குநர்கள், தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். ஆனால் சூர்யா, முருகதாசின் திறமையை அஜித்திடம் சொல்லி சிலாகித்தார்.

விளைவு?

அஜித் நடிக்க தினா படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் முருகதாஸ். மருத்துவத்துறையில் நடக்கும் கொடுமைகளை ரமணாவில் தோலுரித்துக் காட்டினார். அடுத்தடுத்து தொடர் வெற்றிகள்.

வாலி, குஷி, நியூ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, அதன்பின் கிடைத்த தோல்விகளால் முழு நேர நடிகராகி விட, முருகதாசோ, குறுகிய காலத்தில் ரஜினி, விஜய்காந்த், விஜய், அஜித், சூர்யா என உச்ச நட்சத்திரங்களை இயக்கி பெரிய உயரத்தில் நிற்கிறார்.

வெற்றிமாறன்

பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர் வெற்றிமாறன். இவரது திறமையில் அசாத்திய நம்பிக்கை வைத்திருந்தார் பாலுமகேந்திரா.

தனது உதவியாளர் பாலாவை விட, வெற்றிமாறன் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார் என அடிக்கடி சொல்வார்.

அதை நிரூபித்துக்காட்டினார் வெற்றிமாறன். முதல்படமான பொல்லாதவன் படத்திலேயே முத்திரை பதித்தார்.

ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்ததால், கோடம்பாக்கமே தோளில் வைத்துக்  கொண்டாடுகிறது வெற்றிமாறனை.

– பி.எம்.எம்.

You might also like