எம்.ஜி.ஆர். – மக்களின் மன்னா்!

– சு.திருநாவுக்கரசா்

சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாது.

பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

எம்.ஜி.ஆர் முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில். மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான்.

உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனை எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.

சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம் இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்தில் இருந்து உருவானவைதான்.

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆா். வந்த செய்தி அறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள்.

அத்தனை பேரும் காரைச் சூழ்ந்துகொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆா்.

“எல்லோரும் நல்லா இருக்கீங்களா?” என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு, “மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்” என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல… அவர்கள் அத்தனை போின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆா்.

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர் உருகிப்போய் சொன்னார். “நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்னு” சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!”

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும், அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது, ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை.

குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேரும் சகதியுமாக நீராடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக குழந்தைகளோடு நின்றிருந்தனர் மக்கள்.
அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., கொஞ்சம் கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…

பதறிப்போன மக்களோ, “ஐயா எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல! உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க” என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார்.

மக்களின் குறைகளைக் கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல. தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர். கட்சித் தலைவராக தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்றைச் சொல்லித் தீராது.

கட்சியில் சின்ன ஆள், பெரிய ஆள் என்றெல்லாம் பேதமே பார்க்க மாட்டார். புதுக்கோட்டைப் பகுதியில் இரண்டு தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்துவிட்டனர்.

உள்ளூர் பத்திரிகையில் இது சில வரிச் செய்தியாக வெளியானது. இந்தச் செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனதுமே, எனக்கு போன் செய்து விசாரித்தார்.

அப்போது நான் கோவையில் இருந்தேன். “அங்க ரெண்டு பேருமே அடையாளம் தெரியாத நபர்கள்” என்றேன். உடனே “எம்.ஜி.ஆா் அப்படி சொல்லாதீங்க. கட்சியிலோ்ந்து யாரையுமே நான் இழக்க விரும்பலை.

நீங்க ஊருக்குப் போனதுமே அவங்க ரெண்டு பேரையும் திரும்பவும் கட்சியில சேர்த்துடணும். அந்தச் செய்தி அதே உள்ளூர் பேப்பரில் வரணும். அதை முடிச்சிட்டு என்னை வந்து பாருங்கள்” என்றார், அழுத்தமாக.

அவர் சொன்னதை அப்படியே செய்து முடித்தேன். அந்தத் தொண்டா்களுக்கோ பூரிப்பு தாங்கவில்லை. அப்புறம்தான் அவரைப் பார்த்தேன்.

என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிச் சிரித்த அந்தச் சிரிப்பிருக்கிறதே, அவர்தான் எம்.ஜி.ஆர்.!

முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமராகும் வரை அந்த 11 ஆண்டுகளில் ஒரு சென்ட் நிலம் அல்லது வீடோ இந்தத் தமிழ்நாட்டிலோ அல்லது வேறெந்த மாநிலத்திலோ அவா் வாங்கியது கிடையாது.

அதே சமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவா்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.

ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்… எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், “தலைவர் வாழ்க! எம்.ஜி.ஆர் வாழ்க!” என்று கோஷம் இடுகிறார்கள்.

இதைப் பாா்த்த எம்.ஜி.ஆா் என்னிடம், எல்லாருமே எம்.ஜி.ஆர் வாழ்கன்னுதானே வாழ்த்தறாங்க… ஒருத்தா்கூட முதலமைச்சா் வாழ்கன்னு சொல்லலை.. ஏன் தொியுமா?” என்று கேட்டாா்.

“உங்க மூன்றெழுத்து பெயர்தான் அவர்களுக்கு மந்திரம் மாதிரி. அதனால்தான்” என்றேன்.

“அதுமட்டுமல்ல முதலமைச்சா் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர் வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து.

இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்” என்றார். இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னைக்கு வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள்.

சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்துச் சென்றேன். அப்போது சார்லஸ் என்னிடம், “எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?” என்று வியப்போடு விசாரிக்கிறார்.

நான் அவரது குடும்பப் பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சர்யம் விலகாமல் சார்லஸ் சொன்னாா். “ஒருவேளை போன பிறவியில் இவா் அரசராக இருந்திருக்கலாம்!”

அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன்.

தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து அரசர் என்று வியக்கிறாரே… அந்த அதிசயம் தான் எம்.ஜி.ஆர்.!

(அக்டோபர் 2011 புதிய தலைமுறை இதழுக்காக எம்.பி.உதயசூரியன் எடுத்த பேட்டியின் ஒரு பகுதி)

நன்றி – புதிய தலைமுறை

You might also like