புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல்!

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்கள் கால நடைமுறையின்படி, தங்க செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

 இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதை இன்னும் சிறப்பிக்கும் விதமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட இருக்கிறது என்றும் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி செங்கோல் வைக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை ஆங்கிலேய அரசின் கடைசி கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கினார் எனவும் அந்த செங்கோல் தற்போது டெல்லி அரசு அருங்காட்சியகத்தில் இருப்பது பற்றி கேள்விப்பட்ட பிரதமர் மோடி, செங்கோலை சோழர் கால முறைப்படி நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கு உத்தரவிட்டார் எனவும் கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை தமிழகத்தைச் சேர்ந்த திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தமிழர்களின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது பேசுபொருளாகி உள்ளது.

You might also like