சங்ககால நூல்களில் இடமெற்ற சில வரிகள், வார்த்தைகள் தமிழ் திரைப்படங்களில் பாடல் வரிகளாவதும் தலைப்புகளாவதும் அவ்வப்போது நிகழும். ஏதோ ஒருவகையில் அப்படங்கள் ரசிகர்களின் ஈர்ப்புக்குரியதாகவும் மாறும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டிலை கேட்டவுடன், அதே போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. தேசாந்திரியாக திரியும் ஒரு மனிதனின் பயணங்களைப் பேசும் கதையாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டானது.
படத்தைப் பார்த்தபிறகு, அந்த எண்ணம் வலுப்படுகிறதா? நம் மனதில் படிந்த சித்திரங்களுக்கு உயிர் கிடைத்ததா அல்லது அதைவிடப் பெரியதொரு அனுபவத்தைப் படம் தருகிறதா?
ஒரு மனிதனின் வருகை!
நிலச்சரிவினால் மரணமடைந்த தந்தையின் நினைவுகளைச் சுமந்துகொண்டு கொடைக்கானல் மலைச்சரிவில் வாழ்ந்து வருகிறார் மெட்டில்டா (மேகா ஆகாஷ்). இசைதான் உலகம் என்றிருக்கிறார்.
ஜெஸ்ஸி (மதுரா) என்ற இங்கிலாந்து இசைக்கலைஞர் வருவதை அறிந்ததும், அவருக்குள் எரிச்சல் பிறக்கிறது. தனது தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் தன்னையே கொண்டாட வேண்டுமென்று நினைக்கிறார் மெட்டில்டா.
ஜெஸ்ஸியை வரவேற்கச் செல்லும் பங்குத்தந்தை சேவியர் (விவேக்), அங்கு அவருடன் இருக்கும் புனிதன் (விஜய் சேதுபதி) என்பவரைக் காண்கிறார்.
அப்போது, தனது இசைத்திறமையால் மெட்டில்டாவையும் சேவியரையும் அங்கிருப்பவர்களையும் திகைக்க வைக்கிறார் புனிதன்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலச்சரிவில் புதைந்துபோன பழைய தேவாலயம் இருக்குமிடத்தையும் அந்த ஊர் மக்களிடம் தெரிவிக்கிறார் புனிதன்.
அதன் காரணமாக, அந்த இடத்தில் புதைந்து கிடந்த மெட்டில்டாவின் தந்தை சடலம் வெளியே எடுக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, புனிதன் மீது மெட்டில்டாவுக்குக் காதல் பிறக்கிறது.
இலங்கையில் இருந்து வந்த தமிழர் என்பது புனிதனின் பேச்சிலேயே தெரிகிறது. அதேநேரத்தில், கிருபாநதி என்ற பெயரில் அகதிகள் மறுபதிவுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புனிதன் சமர்ப்பித்த விண்ணப்பமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதனை விசாரிக்கும் எஸ்பியும் க்யூ பிராஞ்ச் அதிகாரியும் கிருபாநதி என்ற பெயரைக் கேட்டதும் கொதிக்கின்றனர்; அந்த நபரைக் கொல்லத் துடிக்கின்றனர்.
அப்போது, ஜெஸ்ஸி உடன் புனிதன் வரவில்லை என்பதை அறிகிறார் சேவியர். அதன்பிறகு என்னவானது? புனிதன் எதற்காக அங்கு வந்திருக்கிறார்?
கிருபாநதி என்ற பெயரில் அவர் அகதி மறுபதிவுக்காக விண்ணப்பிப்பது ஏன்? அவரது முன்வாழ்க்கை எப்படிப்பட்டது?
மெட்டில்டாவை அவர் காதலிக்கிறாரா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைக்கதையின் மீதி.
ஒரு மனிதனின் வருகையால் கதையில் வரும் பாத்திரங்களின் வாழ்வு தலைகீழாகும்; புதிய திசையில் நம்பிக்கை ஒளி பிறக்கும்.
இந்த பார்முலாவை கையிலெடுத்துக்கொண்டு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகெங்கும் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. ஒரு கமர்ஷியல் திரைப்படமாகவும் உருவாக்கியிருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.
அசத்தும் காட்சியமைப்பு!
விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாகப் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாவதும், மெல்லத் தயாராகி முழுமையடைவதும், அதன்பின் சில காலம் கழித்து திடீரென்று வெளியாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதற்கு இன்னொரு இரையாகியிருக்கிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
இரண்டு வெவ்வேறு கெட்டப்பில் தோன்றினாலும், காட்சிகளுக்கேற்றவாறு நடித்து வழக்கம்போல ரசிகர்களை ஈர்க்கிறார் விஜய் சேதுபதி.
காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் மேகா ஆகாஷ். ஒருபக்கக் கதை, எனை நோக்கிப் பாயும் தோட்டாவுக்குப் பிறகு ஒரு நல்ல வேடம்.
ஜெஸ்ஸியாக வரும் மதுராவுக்கும் ஒரு முக்கியப் பாத்திரம் தரப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விவேக் இதில் பாதர் சேவியர் ஆக வருகிறார். ஒரு சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டினாலும், கதையில் அவருக்கு சீரியசான பாத்திரம் தான்.
இயக்குனர் மகிழ் திருமேனியும் ரகு ஆதித்யாவும் வில்லன்களாக வருகின்றனர். அவர்களது காட்சிகள் ஏனோதானோவென்று அமைக்கப்படவில்லை.
கனிகா, ரித்விகா, சின்னிஜெயந்த், வித்யா பிரதீப், இமான் அண்ணாச்சி, ராஜேஷ் என்று பெரும்பட்டாளமே நடித்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் அளந்தாற்போல மிகச்சில காட்சிகளே கிடைத்திருக்கின்றன.
இப்படத்தில் கரு.பழனியப்பனும் மோகன் ராஜாவும் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு, ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பு மற்றும் வீரசமரின் கலை வடிவமைப்பு ஆகியன ஒன்றுசேர்ந்து, இப்படத்தின் காட்சியாக்கத்தைக் கண்டு வியக்கும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
அதற்கேற்றவாறு இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தின் திரைக்கதையும் நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும் அமைந்துள்ளன.
வான் மேல், இமைத்திடாதே பாடல்கள் மெலடி மெட்டுகளில் காதலைக் காற்றில் கலக்கின்றன.
ஆத்மநேசர் மற்றும் முருகா பாடல்கள் இறைவனின் புகழைப் பாடுபவை.
தாளலயத்தோடு அமைந்துள்ள சொக்காரி பாடல் ஏனோ படத்தில் இணைக்கப்படவில்லை.
உண்மையைச் சொன்னால், இதுவொரு ஹிட் ஆல்பம். இந்த பாடல்களோடு பின்னணி இசையும் சேரும்போது, நிவாஸின் உழைப்பு பிரமாண்டமானதாகத் தெரிகிறது.
ஒரே ஒரு குறை!
இரு வேறு பெயர்கள், ஒரு நபர் எனும் அம்சங்களோடு ஒரு ஆள்மாறாட்டக் கதையைத் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். அதில் அகதிகளின் தினசரி வாழ்வு எத்தனை சிரமமானது என்று சொன்ன வகையில் கண் கலங்க வைக்கிறார்.
வழக்கமாக இலங்கைத் தமிழர்கள் போரில் படும் அவலங்களைச் சொல்லும் படங்களில் வசனங்கள் அதிகமாக இருக்கும்.
இதில் அந்தக் குறை இல்லை. கிளைமேக்ஸில் விஜய் சேதுபதி தொடர்ச்சியாக வசனம் பேசும் இடம் மட்டுமே அத்தகையதாக உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அதனைத் தவிர்க்க முடியாது என்பது புரியவரும்.
அகதிகள் முகாமில் இருப்பவர்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாது என்பது முதல் பல விஷயங்கள் காட்சிகளின் வழியே இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவை சாதாரண மக்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. கனிகா இடம்பெறும் பிளாஷ்பேக்கும் அதிலொன்று. அதுவே வில்லன் பாத்திரங்கள் நாயகனைக் கொல்லத் துடிப்பதற்கும் காரணமாக வைக்கப்பட்டுள்ளது.
லாஜிக் மீறல் என்ற வகையில், அந்த காட்சி மட்டுமே இப்படத்தின் பெருங்குறையாகத் தெரிகிறது. அதனைச் சரி செய்திருந்தால் படம் இன்னும் ‘பெர்பெக்ட்’ ஆக மாறியிருக்கும்.
மற்றபடி, தேனில் விழுந்த பலாச்சுளை போல ஒரு கமர்ஷியல் திரைக்கதை பார்முலாவுக்குள் மொத்தக் கதையும் அடக்கப்பட்டிருக்கிறது. இன்று உலகம் முழுக்க நிலவிவரும் அகதிகள் புனர்வாழ்வுப் பிரச்சனையை ஈழத் தமிழர்களின் பார்வையில் சொல்லியிருக்கிறது.
யா.ஊ.யா.கே. உருவாகி நீண்டகாலம் கழித்து வெளியானாலும், திரையில் இருந்து பார்வை விலக அது காரணமாக அமையவில்லை.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, இதுவொரு நேர்த்தியான திரைப்படம் என்ற எண்ணம் வலுப்பெறுவது இதன் மாபெரும் சிறப்பு.
ஏனோ எந்தவித முன்னறிவிப்புகளோ, ஜாம்பவான்களின் பாராட்டுகளோ இல்லாமல் ரசிகர்களின் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் மீது எதிர்விமர்சனங்கள் முன்வைப்பவர்களும் கூட, இதனை ஒருமுறையாவது முழுமையாகப் பார்க்க வேண்டுமென்றே விரும்புவார்கள். நிச்சயமாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஒரு தவிர்க்கக்கூடாத திரைப்படம்!
– உதய் பாடகலிங்கம்