அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நிதிஷ் குமாரும் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து, மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் இவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை நிதீஷ் குமார் டெல்லியில் சந்தித்தார். இந்தச் சந்திப்பை தொடா்ந்து பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.