பிளே ஆப் சுற்றில் பெங்களூரை வெளியேற்றிய குஜராத்!

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்தது.

இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில், அதிபட்சமாக 52 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விஜய் சங்கர் 53 ரன்களும், விரித்திமான் சாகா 12 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் முடிவில், 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

You might also like