தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர்.
மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது தந்தை. இசைத் தொழிலில் பெரிய வெற்றியைக் காணாதவர்.
ஆனால், ஒரு இசை ஆசிரியராகப் பல மாணவர்களை உருவாக்கியவர். மொஸார்டின் மூத்த சகோதரி அன்னாவும் இசையில் மிக ஆர்வம் உள்ளவர். அவருக்கு ஏழு வயது ஆனபோது பியானோ வகுப்புகளை எடுத்தார் தந்தை.
அப்போது நான்கு வயதான குழந்தை மொஸார்ட் பியானோ மீது காட்டிய ஆர்வத்தையும் திறமையையும் ஆச்சர்யத்துடன் கவனித்தார் லியபோல்ட்.
ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் போல் புதிய இசை வடிவங்களை மொஸார்ட் இசைத்தது அவருக்கு பிரமிப்பைத் தந்தது. அவன் மேல் பிரத்யேக கவனத்தைச் செலுத்தினார்.
ஐந்து வயதில் மொஸார்ட் கம்போஸ் செய்த இசை வடிவங்கள் அவருடைய அப்பாவினால் இசை நோட்டுகளாக எழுதப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. மொஸார்டின் புகழும் வேகமாகப் பரவியது.
தன் இரண்டு குழந்தைகளுகளையும் பள்ளிக்கே அனுப்பவில்லை லியபோல்ட். அவர்தான் டீச்சராக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். இசைதான் அதில் முதன்மையானது.
அந்தச் சிறு வயதிலேயே மொஸார்டின் இசைப் பயணங்கள் ஆரம்பித்து விட்டன. குழந்தை இசை மேதைகளான அவரையும், சகோதரியையும் ஐரோப்பா முழுக்க அழைத்துச்சென்று இசைக் கச்சேரிகளை நடத்தினார் தந்தை லியபோல்ட்.
பாரிஸ், லண்டன், மியூனிச், தி ஹேக், வியன்னா, ப்ராக் என்று ஐரோப்பாவின் பிரபல நகரங்களில் சிறுவன் மொஸார்டின் இசை வாசிப்புகளைக் கேட்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தே போனார்கள்.
ஆனாலும் அந்தப் பயணங்கள் பொருளாதார ரீதியில் இனிமையாக இருக்கவில்லை. பிரயாண வசதிகள் மிகக்குறைவான அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்வது என்பது கடுமையானது.
அது மூவரையும் நோயாக வாட்டி படுத்த படுக்கையில் தள்ளியது. வருமானமும் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை.
பிரபுக்களும் மன்னர்களும் வாயாரப் புகழ்ந்த அளவுக்கு பணத்தை அள்ளித் தரவில்லை.
பல நேரங்களில் பிரயாணச் செலவை வாங்குவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. லியபோல்டுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் குழந்தைகளுடன் ஊர் திரும்பி விட்டார்.
ஆனாலும், மகனின் அபாரத் திறமையைக் கண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.
மொஸார்டின் பத்தாவது வயதில் அவரை மட்டும் அழைத்துக் கொண்டு இத்தாலிக்கு இசைப் பயணம் கிளம்பினார் தந்தை. அங்கேதான் மேற்கத்திய செவ்வியல் இசையுலகில் புகழ்பெற்ற ஃபிலமோனிகா அகாடமி இருந்தது.
அங்கே தன் இசைப் புலமையை வெளிப்படுத்தினான் சிறுவன் மொஸார்ட். எல்லோரும் அசந்து போனார்கள்.
உலக இசை வரலாற்றிலேயே முதல் முறையாக அந்தப் பெருமைமிகு அகாடமியின் உறுப்பினராக கவுரவிக்கப்பட்டான் மொஸார்ட். தந்தைக்கு ஆனந்தக் கண்ணீர்.
கிரகாரியோ அலஜின் என்சிற ஒரு பெரும் இசைக்கலைஞர் அப்போது அங்கே இருந்தார். அரசவையில் கம்பீரமாக வீற்றிருந்த அவருடைய “மிஸரேரே” என்கிற இசைக்கோவை அன்று ஐரோப்பா முழுக்க பிரபலம். ஆனால், அதை இசை நோட்டுகளாக எழுத யாருக்கும் உரிமை கிடையாது.
வாட்டிகனுக்குச் சொந்தமான அந்த இசையைக் கேட்ட சிறுவன் மொஸார்ட் தன் ஞாபகத்தில் இருந்ததை வைத்தே முழு இசைக் கோவையையும் நோட்டுகளாக எழுதிக் காட்டினான்.
அதுவும் ஒருசில திருத்தங்களோடு, சட்ட விரோதமாக அந்த இசை நோட்டுகள் அப்போது வெளிவந்தன. மொஸார்டின் மேதைத்தன்மைவை எல்லோரும் புகழ்ந்தார்களே தவிர, அவர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதற்கு அடுத்து இத்தாலியின் மிலான் நகரத்துக்கு அடிக்கடி விசிட் அடித்த மொஸார்ட் அங்கேதான் தன்னுடைய புகழ்பெற்ற இசைக்கோவைகளை எழுதினார். அப்போது அவருக்கு வயது 14.
மிட்ரிடேட் ஆபரா, ரீ டீ போண்டோ, அஸானியோ இன் ஆல்பா, லூசியோ சில்லா போன்ற இசைக்காவியங்களை அப்போது எழுதினார் மொஸார்ட்.
இன்றைக்கும் உலக இசை மேடைகளில் வாசிக்கப்படும் அவருடைய சாகா வரம் பெற்ற இசை வடிவங்களான கண்டாடா எக்ஸல்டேட், ஜூப்லியேட், கே 165 போன்றவை மிலான் நகரத்தில்தான் இயற்றப்பட்டன.
1773ம் வருடம் தன் சொந்த நாடான சாலிஸ்பரிக்குத் திரும்பினார் மொஸார்ட். அங்கே அரசவையில் இசைக்கலைஞர் பதவியை வழங்கினார் இளவரசர் கொலராடோ.
மொஸார்ட் என்னதான் இசை மேதை என்றாலும் வயதைப் பொறுத்தவரை 17 வயதான சிறுவன் தான். அந்தக் குழந்தைப் பருவத்தின் குதூகலங்கள் இசை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மொஸார்ட் இரண்டுக்கும் நடுவில் தடுமாறினார்.
அவர் யாருக்கும் பயப்பட்டதில்லை. பெரும் இசைக் கலைஞர்களைக் கிண்டலடிப்பார். அவர்களின் இசைக் கோவைகளைத் திருத்துவார். அரசரையும் விட்டு வைக்கமாட்டார். சிறுபிள்ளைத்தனமாக இயல்பாக நடந்து கொள்வார்.
போலியான அரச மரியாதைகளைத் தருவது அவருக்குத் தெரியாது என்பதால் விரைவில் நிறைய விரோதிகளைச் சம்பாதித்தார்.
ஆனாலும் அவருடைய பிரவாகமான இசைத் திறமையின் காரணமாக அவர் தப்பித்தபடி இருந்தார்.
வயலின், பியானோ இசைக்கருவிகளை அடிப்படையாகக் கொண்ட அவருடைய புகழ்பெற்ற இசை வடிவங்களான கே 216, கே 218, கே 271 போன்றவை இந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டன.
சக இசைக்கலைஞர்கள் அதைக் கேட்டு மிரண்டே போனார்கள். ஆனாலும் மொஸார்டுக்கு செல்வத்தின் கடைக்கண் பார்வை கிடைக்கவே இல்லை. சாலிஸ்பரி அரசவையில் அரசியல் சூழ்ந்திருந்தது.
அதனால் மொஸார்டுக்கு அடிப்படை சம்பளம் கூடக் கிடைக்காத படி பலர் சதி செய்தார்கள். அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் மறுபடி பல ஐரோப்பிய இசைப் பயணங்களுக்குக் கிளம்பினார்கள் தந்தையும் மகனும்.
ஆனாலும், இசைக்கு அங்கீகாரம் கிடைத்த அளவுக்கு பணத்தால் பை நிரம்பவில்லை. வெளியூர் பயணங்களுக்கு அனுமதி இல்லை என்று தடை போட்டார் சாலிஸ்பரி இளவரசர்.
‘அப்படி என்றால் நீ தந்த பதவியே தேவை இல்லை’ என்று சொல்லி ராஜினாமா செய்தார் மொஸார்ட். இசைப் பயணங்கள் என்று சொல்வதை விட வேலை தேடிச் சென்ற பயணங்கள் அவை என்பதுதான் பொருந்தும்.
மேதைகளை வாழ்க்கையின் பொருளாதார நெருக்கடிகள் எப்படி எல்லாம் கூறு போட்டு வேதனை செய்யும் என்பதற்கு மொஸார்ட், பாரதி, மார்க்ஸ் போன்றவர்கள் எடுத்துக்காட்டுகள்.
ஐரோப்பிய நகரங்களில் இசை வேலை தேடி அலைந்தார் மொஸார்ட். வறுமையும் கடனும் அவரைச் சூழ்ந்தன. மருத்துவச் செலவுக்கு வழி இல்லாமல் இறந்து போனார் அவருடைய தாயார்.
இதற்கிடையில் அவருக்கு ஒரு காதல் தோல்வியும் ஏற்பட்டது. அலோய்சியா என்கிற பாடகியும் அவரும் காதல் வயப்பட்டார்கள். ஆனால் பணம் இல்லாத மொஸார்ட்டிடம் வாழ்க்கையை ஒப்படைக்க அலோய்சியா தயாராக இல்லாததல் அந்தக் காதல் முறிந்தது.
ஐரோப்பிய அலைச்சல்களில் எந்தப் பயனும் தெரியாத நிலையில் மீண்டும் தன் சொந்த ஊரான சாலிஸ்டரிக்கு சோகத்துடன் திரும்பினார் மொசார்ட் மீண்டும் அரசவையில் ஒரு இசைப்பதவி கிடைத்தது.
ஆனால் அதில் திருப்தி இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளானார் மொஸார்ட்.
ஆனால் பல்வேறு நெருக்கடிகள் நிகழ்ந்த இந்த காலகட்டத்தில்தான் ஏ மைனர் பியானோ சொனோட்டாவான கே 300/300 டி, பாரிஸ் சிம்பொனி போன்ற அற்புதமான இசைப்படைப்புகளைச் செய்தார் மொஸார்ட்.
1781ம் வருடம் மொஸார்டின் புகழ்பெற்ற இசைக் கோவையான “லாடொமினியோ” மியூனிச் நகரத்தில் அரங்கேற்றப்பட்டது. அது பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனாலும் காலிஸ்பரி அரசனுக்கு மொஸார்ட் வேறொரு நாட்டின் நகரத்துக்குச் சென்று அதை அரங்கேற்றியது பிடிக்கவில்லை.
சாதுரியமாக சாலிஸ்பரிக்கு மீண்டும் வரவழைக்கப்பட்ட மொஸார்ட், அரசவையில் ஒரு வேலைக்காரனைப்போல் அவமானப்படுத்தப்பட்டார். மொஸார்டுக்கு கோபம் தலைக்கேறியது.
“இனிமேல் இந்த அரசவையில் காலை வைக்க மாட்டேன், என்னை விடுவியுங்கள்” என்றார் கோபமாக. ஆனால் அவரைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க மறுத்தது அரசவை. அப்பா லியபோல்டும் அரசவையை அனுசரித்துப் போகும்படி மகனைக் கேட்டுக் கொண்டார்.
இது என் தன்மானத்துக்கு நேர்ந்த அவமானம் என்று மொஸார்ட் அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் ஒரு குறுங்காவியம்.
மொசார்டைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கும் முன்பு அவரைப் பலவிதங்களில் அவமானப்படுத்தியது அரசவை.
எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வியன்னா நகரத்துக்கு, ஒரு சுதந்திரமான இசைக்கலைஞனாகப் பயணமானார் மொஸார்ட். அப்போது அவருக்கு வயது 25.
வியன்னாவில் மொஸார்டின் இசை வாழ்க்கைக்குச் சற்று இளைப்பாறுதல் கிடைத்தது. அங்கேதான் தன் பழைய காதலியின் சகோதரி கான்ஸ்டேனைச் சந்தித்து காதல் கொண்டார்.
இருவரும் திருமணம் செய்தார்கள். ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆனால் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள்தான் உயிர் பிழைத்தன.
இந்த காலகட்டத்திலும் அருமையான இசைக் கோவைகளைப் பல படைத்தார் மொஸார்ட்.
ஜோசஃப் ஹேடின் என்கிற இசைக்கலைஞரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. இருவரும் இணைந்து ஏகப்பட்ட இசைக் கோவைகளை எழுதினார்கள். மொஸார்டின் குறுகிய வாழ்நாளில் உச்சகட்ட படைப்பூக்கத்தின் காலம் இது என்றே சொல்லலாம்.
இசைக் கச்சேரிகள் நடத்த தனக்கு மிகப்பெரிய இசை அரங்குகள் தேவை என்று என்றுமே நினைத்ததில்லை மொஸார்ட். பொது மக்கள் கண்டு களிக்கும் வகையில் சாதாரண ஹால்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் கச்சேரிகளை நடத்துவார்.
அதில் கைக்காசுதான் அதிகம் செலவாகும். ஆனால் மக்கள் கைதட்டி ரசிப்பார்கள். அந்தப் பாராட்டே அவருக்கான உற்சாக டானிக். அப்போது அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது என்னவோ உண்மைதான்.
ஆனாலும் இத்தனை நாள் வறுமையால் உழன்றதால் அந்தப் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்ய ஆரம்பித்தார். தன் குடும்பம் வசிக்க ஒரு பெரிய மாளிகையை வாடகைக்கு எடுத்தார்.
மகளை செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்த்தார். பணத்தை வாரி இறைத்தார்.
எல்லாமே கொஞ்ச காலத்தில் கரைந்து போனது மொஸார்ட் ஓரளவு பணக்காரராகி, பிறகு மறுபடியும் வறுமையின் பிடியில் சிக்கியதைக் கண்ட தந்தை லியபோல்ட் அப்போதுதான் காலமானார்.
“தன் மகனுக்குக் காசு, பணம் சேர்க்கத் தெரியாது. ஆனால் அவன் மிகப் பெரும் இசைக் கலைஞன்” என்று தன் கடைசி நேரத்தில் அவர் நினைத்திருக்கக் கூடும். வியன்னாவின் அரசர், மொஸார்ட் தன் அரசவையில் இருப்பது கவுரவம் என்று நினைத்தார்.
ஆனால், வழக்கம்போல் அதிக சம்பளம் கொடுக்க மட்டும் தயாராக இல்லை. அப்போது மொஸார்ட் தன் மனைவியிடம் சொன்னார்.
“நான் செய்யும் வேலைக்கு அரசு தரும் சம்பளம் அதிகம்தான். ஆனால் என்னால் செய்யக் கூடிய வேலைகளுக்கு இந்தச் சம்பளம் மிகவும் குறைவு.”
1787ம் வருடம் மாபெரும் இசை மேதையான பீதோவன் மொஸார்டை சந்தித்ததும் நடந்தது.
ஒரு மாணவராக அவரைச் சந்தித்தார் பீதோவன். ஆனால் அவருடன் சில நாட்களை செலவிட்ட மொஸார்ட், பீதோவனைப் புகழ்ந்து பேசினாலும் கடைசியில் “இந்தப் பையனுக்கு என்னுடைய மாணவனாய் இருக்கத் தகுதி இல்லை” என்று சொன்ன அதிசயமும் நடந்தது.
ஆனாலும் மொஸார்டின் இசை வடிவங்களை ஆதாரமாக வைத்துத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார் பீதோவன்.
இந்த காலகட்டத்தில்தான் மொஸார்டின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமானது. ஐரோப்பாவைப் போர் மேகங்கள் சூழ்ந்ததால் இசை நிகழ்ச்சிகளைக் கேட்க யாருக்கும் அவகாசம் இல்லை.
மொஸார்டின் வருமானம் சரசரவென்று கீழிறங்கியது. தன் கடன் கேட்டு அவர் கடிதங்கள் அனுப்ப ஆரம்பித்தார். வீட்டில் சாப்பிடக் கூட உணவு இல்லை. ஆனால் அப்போதும் விடாமல் நண்பர்களிடம் பல சிம்பொனிக்களையும், ஆபராக்களையும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.
தன் குடும்பத்தின் தேவைகளை கவனிக்கும் பொருட்டு ஜெர்மனியின் பல நகரங்களுக்குப் பயணமானார். ஆனால் போரின் உக்கிரத்தில் இருந்த அந்தப் பிரதேசங்களில் இசைக்கு இடமே இல்லாமல் இருந்தது.
வெறும் கையுடன் வீடு திரும்பினார் மொஸார்ட். தன் வீட்டை வியன்னாவின் ஒரு புறநகர் பகுதிக்கு மாற்றினார்.
ஆனாலும் அதன் அடிப்படைத் தேவைகளைக் கூட அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அணையப்போகும் மெழுகுவர்த்தி பிரகாசமாக எரியும் என்பார்களே, அதற்கு மொஸார்டின் வாழ்க்கை மிகச் சரியான உதாரணம்.
தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்தார்.
அவருடைய இசை வாழ்க்கையிலேயே மிக முக்கியமான ‘தி மாஜிக் ஃபுளூட்’ அப்போதுதான் இயற்றப்பட்டது.
கே 595, கே 618, கே 622 போன்றவை போர் நெருக்கடிகளையும் மீறி ஐரோப்பா முழுக்கப் பிரபலமாகின. கடைசி நேர கருணை மனு பதில் போல ஓரளவுக்குப் பணமும் அவரைத் தேடி வர ஆரம்பித்தது.
தன் கடன்களைத் திருப்பித் தர ஆரம்பித்தார் மொஸார்ட். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உடல் நிலை திடீரென்று மோசமானது. ருமாட்டிக் காய்ச்சல், வாந்தி போன்ற நோய்கள் அவரை வாட்ட ஆரம்பித்தன.
மொஸார்டின் கடைசி காலங்களைப் பற்றிய முரண்பட்ட தகவல்களே கிடைக்கின்றன.
பாரதி ’சீட்டுக் கவி’ எழுதியது போல் மொஸார்டும் ஒப்பாரி இசையான “ரெக்கீமை” எழுதிக் கொடுத்தார் என்கிறார்கள்.
ஆமடியஸ் மொஸார்ட் என்று ஒரு அருமையான திரைப்படம் இருக்கிறது. மொஸார்டின் இசைத்திறமையின் மேல் பொறாமையும், பிரமிப்பும் வைத்திருக்கும் சக இசைக்கலைஞரான டிஸ்ரேலி எப்படி மொஸார்டின் வாழ்க்கையைக் கெடுத்து அவரை மரணத்தின் பிடியில் தள்ளினார் என்று விவரிக்கும் படம் அது.
1791ம் வருடம் படுக்கையில் வீழ்ந்து தன் கடைசி மூச்சை மொஸார்ட் விட்டபோது அந்த இசை மேதைக்கு வயது 35 தான். 1791ம் வருடம் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி, நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த மாபெரும் இசைக் கலைஞனின் மூச்சு பிரிந்தது.
சாதாரண மக்கள் புதைக்கப்படும் இடுகாட்டில்தான் மொஸார்ட் புதைக்கப்பட்டார்.
அவரது சவ ஊர்வலத்துக்கு வந்தவர்கள் ஒரு சிலர்தான். இரண்டே இரண்டு இசைக் கலைஞர்கள்தான் மொஸார்டின் மேல் கடைசி மண் தூவப்பட்டபோது அருகில் இருந்தவர்கள்.
மொஸார்டின் அத்தனை இசைப் படைப்புகளும் இன்று இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. இரவின் மடியில் அதைக் கேட்கும் போது தோன்றுவது ஒன்றுதான் “மொஸார்ட் இறக்கவில்லை. அவர் காற்றில் உயிர் வாழ்கிறார்”
– நன்றி: கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய ‘இசையாலானது’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.