ஒரேநாளில் தலைகீழான மாற்றங்களை எதிர்கொள்கிற, அதுவரையிலான பயணத்தைப் புரட்டிப் போடுகிற, மாயாஜாலம் மிகுந்த தருணங்கள் சாதாரணமானவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே அரிது.
அதற்குப் பதிலாக, சின்னச் சின்ன தருணங்கள் தரும் மகிழ்ச்சியே போதும் என்பதாகவே அவர்களது மனநிலை இருக்கும்.
அப்படி வாழும் மனிதர்கள் தங்களது வாழ்க்கைத் துணையை முற்றிலுமாகப் புரிந்து கொள்வதென்பது ஒருவகை வரம். அதனைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது ‘குட்நைட்’ திரைப்படம்.
இரு துருவங்களின் காதல்!
தாய், தங்கை, அக்கா, மச்சான், தங்கை ஆகியோரைச் சுற்றியே மோகனின் உலகம் இருக்கிறது.
சகோதரியைத் திருமணம் செய்துகொண்டபிறகு, மச்சானும் அந்தக் குடும்பத்தோடு சேர்ந்தே வாழ்கிறார்.
தங்கையோ கல்லூரி விடுதியில் இருக்கிறார். அவர் வீடு திரும்பும் புள்ளியில் இருந்து, ‘குட்நைட்’ திரைக்கதை தொடங்குகிறது.
மோகன் (மணிகண்டன்) ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு சிலர் மட்டுமே அவருக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர்.
காரணம், தூக்கத்தில் மோகன் விடும் குறட்டைச் சத்தம். அதன் பேரொலியை ஒருமுறை கேட்டவர்கள், அடுத்த முறை பார்க்கையில் உறவை முறித்துக் கொள்வார்கள். அதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
அது, மோகன் தீவிரமாகக் காதலிக்கும் பெண்ணுக்கும் பொருந்திப் போகிறது. ஒரே ஒருநாள் மட்டும் இருவரும் அலுவலக வாகனத்தில் இணைந்து பயணிக்கின்றனர்.
மோகனின் குறட்டைச் சத்தம் அந்த பெண்ணின் மனதில் மோகன் மீதிருந்த கொஞ்ச நஞ்ச ஈர்ப்பையும் சுத்தமாகக் காலி பண்ணுகிறது. அதன்பிறகு, ஒரு தேவதாஸ் போல நடந்து கொள்கிறார் மோகன்.
அந்த நிலையில், தற்செயலாகத் தனது மச்சானுடன் (ரமேஷ் திலக்) சேர்ந்து ஒரு வயதான தம்பதியின் வீட்டுக்குச் செல்கிறார் மோகன். அவர்களது வீட்டு மாடியில் குடியிருக்கும் அனு (மீத்தா ரகுநாத்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார்.
இரண்டாம் முறையாக அனுவைப் பார்க்கும்போது, மோகன் மனதில் ஈர்ப்பு அதிகமாகிறது. மெல்ல மெல்ல இருவருக்குள்ளும் நட்பு முளைக்கிறது.
அது காதலாக மாறுகையில், ‘நம் நட்பைத் துண்டித்துக் கொள்ளலாம்’ என்கிறார் அனு. இதுவரை தனக்குப் பிடித்தமான மனிதர்கள் எல்லோருமே மரணத்தைத் தழுவியிருக்கின்றனர் என்பதே அவர் சொல்லும் காரணம்.
அந்த சென்டிமெண்ட் தனக்குக் கிடையாது என்று அனுவுக்கு ஆறுதல் கூறுவதோடு, தனது காதலை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்கிறார் மோகன்.
சில நாட்களில் திருமணம் முடிந்து, இருவரும் தனிக்குடித்தனம் செல்கின்றனர்.
தான் சார்ந்த எல்லா விஷயங்களையும் அனுவோடு பகிர்ந்த மோகன், குறட்டை விடும் விஷயத்தை மட்டும் அந்த நிமிடம் சொல்லவே இல்லை.
முதலிரவுக்குப் பிறகும் அந்த ரகசியத்தை மறைக்க முடியாது என்பதை உணர்கிறார் மோகன். அனுவிடம் தனது குறட்டை பற்றி அவர் சொல்கிறாரா? அவருக்கு அதுவொரு பெரிய பிரச்சனையாகத் தெரிகிறதா? இறுதியாக, அந்த குறட்டை பிரச்சனைக்கு மோகன் ஒரு தீர்வு கண்டாரா என்று சொல்கிறது ‘குட்நைட்’.
இரு வேறு துருவங்களாகத் திகழும் ஆண், பெண்ணுக்கிடையே முளைக்கும் காதலே இக்கதையின் அடிப்படை. ஆனால், எத்தனை காதலித்தாலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதென்பது இன்னொரு தளத்தில் நிகழும் விஷயம் என்று காட்டியிருப்பதே ‘குட்நைட்’டின் சிறப்பு.
நல்லதொரு பீல்குட் திரைப்படம்!
சில்லுக்கருப்பட்டி, ஏலேய், சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெய்பீம் படத்துக்குப் பிறகு, இதில் மணிகண்டனுக்குப் பெயர் சொல்லும் பாத்திரம்.
எந்த இடத்திலும் ஹீரோயிசம் தென்படாதவாறு, ஒரு சராசரி இளைஞனைக் கண் முன்னே நிறுத்த மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். மிகச்சில இடங்களில் மட்டும், அவரது நடிப்பு கொஞ்சம் ‘ஓவர் டோஸ்’ ஆக தெரிகிறது.
‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்த மீத்தா ரகுநாத், இதில் நாயகி பாத்திரம் ஏற்றிருக்கிறார். கோடை மழை வித்யா, பூவிழி வாசலிலே கார்த்திகா வரிசையில் யதார்த்தமான அழகியாகத் தெரிகிறார்.
அவரது இயல்பை மீறி, மெல்லிய குரலில் படம் முழுக்கப் பேசியிருக்கிறார். கிளைமேக்ஸுக்கு முன்னதாக நாத்தனாருக்கு ஆதரவாகப் பேசும் காட்சியொன்றில், உச்சஸ்தாயியில் ஒலிக்கும் குரல் அந்த உண்மையைச் சொல்கிறது.
ரமேஷ் திலக் – ரெய்ச்சல் ரெபேக்காவின் ‘கெமிஸ்ட்ரி’க்கு இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
‘டேய் ரமேஷா’ என்று ரெய்ச்சல் அழைக்கும் தொனி, இன்றைய இளசுகளின் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. போலவே, ‘பில்டர் போட வந்து எங்க பேமிலியோட ஒட்டிக்கிட்ட’ என்று மணிகண்டன் அவரைக் கலாய்க்கும் இடங்களில் தியேட்டரே அதிர்கிறது.
பாலாஜி சக்திவேல், அவரது மனைவியாக நடித்தவர், மணிகண்டனின் அலுவலக நண்பர்களாக, தோழியாக நடித்தவர்கள், அலுவலக மேலாளராக வரும் பக்ஸ், உறவினர்களாக வரும் துணை நடிகர் நடிகைகள் அனைவருமே தங்களது சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
அவர்களனைவரையும் மீறி நம்மைக் கவர்கிறார் மணிகண்டனின் தாயாக வருபவர். எண்பதுகளில் கொடிகட்டிப் பிறந்த மோகனின் ரசிகையாக அவரது பாத்திரத்தை வடிவமைத்திருப்பது அழகோ அழகு.
‘குட்நைட்’ படத்தின் மாபெரும் பலம் ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு. செயற்கைப்பூச்சுகள் ஏதுமில்லாமல், இயற்கையாக நம் கண்ணில் பார்க்கும் உலகையே அழகுறக் காட்டியிருப்பது அற்புதமான விஷயம்.
அவரது பிரயத்தனத்தையும் மீறி, ஒரு விளம்பரப் படம் பார்த்த உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவு.
இந்தக் கதையில் வெவ்வேறு பொருளாதாரப் பின்புலமுள்ளவர்களின் வீடுகள் வெவ்வேறாகத் தெரிகின்றன.
ஐடி மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் அலுவலகங்களும் கூட இயல்பான ஒரு சூழலை முன்னிறுத்துகின்றன. ஸ்ரீகாந்த் கோபாலின் கலை இயக்கம் அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
ரொம்பவே தெளிவாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது பரத் விக்ரமனின் படத்தொகுப்பு.
கிளைமேக்ஸில் தொடர்ச்சியாக ‘யூடர்ன்’ இடம்பெறும் காட்சியில், ரசிகர்களை மனதாரச் சிரிக்க வைத்திருக்கிறார்.
அப்படியே, இடைவேளைக்குப் பிறகு ‘என் குறட்டையால உன் தூக்கம் டிஸ்டர்ப் ஆகக்கூடாது’ என்று மணிகண்டன் புலம்பிக் கொண்டே திரியுமிடங்களில் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.
காட்சிகள் மிகச்சிறியதாக இருந்தாலும், தான் தந்த பின்னணி இசையைப் பாதியிலே ‘கட்’ செய்யத் தயாராக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அதேநேரத்தில், ரசிகர்கள் மெய்மறந்து சிரிப்பதிலும் அழுவதிலும் அவரது பின்னணி இசை பெரும் பங்கை எடுத்துக் கொள்கிறது.
பாடல்கள் கொஞ்சம் புதிதாகவும் புத்துணர்வூட்டுவதாகவும் இருக்கின்றன. ஆனால், காட்சிகளின் நீளம் கருதி பாடல்களின் அளவு சுருக்கப்பட்டிருக்கின்றன.
நாயகனாக நடித்த மணிகண்டனின் ஒத்துழைப்போடு, இந்த கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விநாயக் சந்திரசேகரன்.
‘நல்லதொரு பீல்குட் திரைப்படம்’ என்று ரசிகர்கள் சொல்வதையே இலக்காகக் கொண்டு, இந்த படத்தை இழைத்து இழைத்து ஆக்கியிருக்கிறார். அதற்குத் தக்க பலன் தியேட்டரில் கிடைத்து வருகிறது.
மறந்துவிட்ட மக்கள்!
வழக்கமாக, கொஞ்சமாக போரடித்தாலே தியேட்டரில் ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்டு கலாட்டா செய்துவிடுவார்கள்.
உண்மையைச் சொன்னால், ‘குட்நைட்’ படத்தின் பின்பாதியில் சில காட்சிகள் ரொம்பவே நம் பொறுமையைச் சோதிக்கின்றன.
நாயகி எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்க, நாயகன் மட்டும் ‘இல்ல, நீ உண்மை சொல்ல மாட்டேங்குற’ என்கிற ரேஞ்சில் பேசிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் திரிகிறார். ஆனால், அந்தக் காட்சிகளின் போது எவருமே கூச்சலிடவில்லை.
அதற்கு ஒரே காரணம் தான். விநாயக் சந்திரசேகரன் உருவாக்கிய உலகினில் அவர்களும் ஒரு நபராக நுழைந்துவிட்டனர். படம் முடிந்தபிறகே அதில் இருந்து வெளியேறுவது என்று உறுதியாக இருக்கின்றனர். அதனாலேயே, அந்தக் குறையை அவர்கள் மறந்துவிட்டது போல நடிக்கின்றனர்.
தியேட்டரில் இருக்கும்போதே, என் மனம் உணர்ந்த பதில் இது. இன்றிருக்கும் பல இயக்குனர்களுக்குக் கிடைக்காத அங்கீகாரம் இது.
மிகச்சாதாரணமான, ரொம்பவே இயல்பான, நாம் சந்திக்கிற மனிதர்களைத் திரையில் காட்டியதன் விளைவு இது.
எந்த இடத்திலும் சினிமாத்தனம் தென்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெட்டதற்கான மரியாதை இது.
மிக முக்கியமாக, குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் ஒரு குறும்படம் போலவோ, சீரியல் போலவோ நாம் உணராத அளவுக்கு உள்ளடக்கத்தில் செழுமையைப் படரவிட்டதற்கான கைகுலுக்கல் இது.
சிறப்பான முயற்சிக்கான வரவேற்பு இது.
அடுத்து வரும் படைப்புகளிலும் இதே போன்ற நுணுக்கமான பாத்திரச் செதுக்கலும் யதார்த்தமான காட்சியாக்கமும் தொடர வேண்டும். விநாயக் சந்திரசேகரன் & குழுவினருக்கு வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்