குடும்பத்தின் சிறப்பை உணர்ந்து வாழ்வோம்!

கொடுத்து மகிழ்வதே குடும்பமாகும். அன்பை, பண்பை, பாசத்தை, துணிவை, மகிழ்வை, மனநிறைவைக் கொடுத்து இன்பமாய் வாழும் இடமேக் குடும்பமாகும். அன்பு பிறக்கும் இடம் குடும்பம்.

சிந்தனையில் வேறுபட்ட மனிதர்கள் ஒரே உள்ளத்தினராய் ஒன்றுபட்டு வாழும் இடம் குடும்பம்.

தான் தனக்கு என்ற வார்த்தைகள் மறைந்து நாம் நமக்கு என்ற வார்த்தைகள் பிறக்கும் இடம் குடும்பம்.

மகிழ்ச்சி என்பது தனக்கு மட்டும் சொந்தமானதல்ல, தன்னைச் சுற்றி வாழ்கின்ற உறவுகளினால் வருவது என்பதை உணர்த்தும் இடம் குடும்பம்.

வெற்றி பெறுவது மட்டும் அல்ல விட்டுக் கொடுப்பதும் இன்பம் என்பதைக் கற்றுத்தரும் இடம் குடும்பம்.

இத்தகைய குடும்பம் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15ஆம் நாள் பன்னாட்டு குடும்ப நாள் கொண்டாடப்படுகின்றது. 

பல்வேறு தியாகங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்ட அக்காலக் குடும்பங்கள் இன்று மறைந்து தற்போது அலைபேசியில் தான் குடும்பமாக அளவளாவிக் கொண்டிருக்கின்றன.

உறவோர் ஊட்டி, உற்றார் கட்டிக்காத்து வளர்ந்த குடும்பங்கள் இன்று தனித்தனி தீவுகளாக, அருகில் இருந்தாலும், அயல்நாட்டில் இருப்பது போல இணையத்தில் இணைந்து தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கின்றன.

தொலையில் இருப்போரை இணைக்கக் காரணமானவைகள் இப்போது அருகில் இருப்பவர்களை தொலைவிற்கு அனுப்பிவிட்டன.

இத்தகைய நிலை மறைந்து உறவுகள் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து வாழ முற்படுவோம்.

உறவுகளின் இருப்பிடமாக, அன்பின் கூடாக, நகைச்சுவையின் மைதானமாக, அறிவின் பள்ளியாக, இன்பத்தின் பூங்காவாக, கருணையின் கோவிலாகத் திகழும் குடும்பத்தின் சிறப்பை உணர்ந்துவாழ முற்படுவோம்.

குடும்பம் என்னும் குருவிக்கூட்டை பிரிப்பது எளிது. ஆனால் அதனை உருவாக்குவது கடினம் என்பதை உணர்ந்து, ஒன்றிணைந்து செயல்படுவோம். குடும்பமாய் வாழ்ந்து குதூகலத்துடன் சிறப்போம்.

  • நன்றி : முகநூல் பதிவு
You might also like