கஸ்டடி – தமிழ் பேசும் தெலுங்குப்படம்!

‘ஜாலிலோ ஜிம்கானா’ என்று தியேட்டருக்குள் குதூகலமும் கும்மாளமும் கொப்பளிக்க வைத்து ரசிகர்களைத் திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் திரைப்படங்கள் மிகவும் குறைவு.

அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து தந்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

அவரது படங்களைப் பார்க்கச் சென்றால் குறைந்தபட்சமாகப் புன்சிரிப்போடு திரும்பலாம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா ‘கஸ்டடி’?

கைதியுடன் ஒரு பயணம்!

துடிப்புமிக்க இளைஞரான சிவா (நாக சைதன்யா) கான்ஸ்டபிளாக வேலை செய்பவர். ரேவதி (கிரிதி ஷெட்டி) எனும் பெண்ணை அவர் காதலித்து வருகிறார்.

சாதி வேறுபாடு, பணக்கார அந்தஸ்தைக் காரணம் காட்டி சிவா குடும்பத்தை ஒதுக்குகின்றனர் ரேவதியின் பெற்றோர்.

பிரேம் (பிரேம்ஜி) என்பவருடன் ரேவதிக்குத் திருமணம் நிச்சயிக்கின்றனர்.

ஓரிரு நாட்களில் திருமணம் நடக்கலாம் எனும் நிலையில், தான் அணிந்திருக்கும் சுடிதார் உடன் சிவாவின் வீட்டுக்கு மருமகளாகச் செல்லத் தயாராகிறார் ரேவதி.

அதனை அறியும் அவரது குடும்பத்தினர், சப் இன்ஸ்பெக்டரை நாடி விவரத்தைச் சொல்கின்றனர்.

ஏற்கனவே சிவாவின் மீது வன்மம் கக்கும் எஸ்.ஐ, இதனால் அதிகப்படியான வேலைகளைத் தருகிறார். அதேநேரத்தில், ரேவதி வீட்டுச் சிறையில் வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், அடுத்த நாள் காலையில் திருமணம் என்ற உண்மை ரேவதிக்குத் தெரிய வருகிறது. அதேநேரத்தில், அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் சிவா ஓட்டி வரும் ஸ்கூட்டர் மீது ஒரு கார் மோதுகிறது.

காரில் வந்த இரு நபர்களைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார் சிவா.

அதிலொருவரின் பெயர் ராஜு என்றும், அவர் மீது பல கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரிய வருகிறது. இரண்டாவது நபரான ஜார்ஜ் ஒரு சிபிஐ அதிகாரி.

சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் நடந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

அது விபத்தல்ல என்பதையும், அதன் பின்னணியில் ராஜு கும்பலின் குற்றப் பின்னணி இருப்பதையும் ஜார்ஜ் சொல்கிறார். அதன்பிறகு, சிவாவின் செயல்பாட்டில் வித்தியாசம் தெரிகிறது.

ஜார்ஜ் சொல்வது போல, ராஜுவை பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தத் தயாராகிறார்.

அந்த நேரத்தில், ராஜுவையும் ஜார்ஜையும் கொல்ல ஒரு போலீஸ் படையே காவல் நிலையம் வருகிறது.

ஒரு சாதாரண கான்ஸ்டபிளான சிவா தனது உயரதிகாரிகளை எதிர்த்து நின்றாரா?

சிபிஐ நீதிமன்றத்தில் ராஜுவை ஆஜர்படுத்தினாரா? அவர் ஏன் ராஜுவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்? இக்கேள்விகளுக்கு விலாவாரியாகப் பதில் சொல்கிறது ‘கஸ்டடி’.

பல தடைகளை மீறித் தனது கஸ்டடியில் இருக்கும் கைதியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் பயணம் மேற்கொள்கிறார் என்பதே இப்படத்தின் ஒருவரிக் கதை.

ஆனால், அதற்குத் திரைக்கதை அமைத்த விதத்தில் ரசிகர்களுக்குப் பெரிய சோதனையைத் தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

‘பேசாம மாநாடு இன்னொரு தடவை பார்த்திருக்கலாமோ’ என்று எண்ண வைத்திருக்கிறார்.

தமிழ் பேசும் தெலுங்குப்படம்!

நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யா, தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றவர். முதன்முறையாக அவர் தமிழ் பேசியிருக்கும் படம் ‘கஸ்டடி’.

ஆக்ரோஷம், அழுகை, வேட்கை என்று ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு வேண்டிய உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தினாலும், அவரது முகத்தில் நம்பிக்கை குறைவாகத் தென்படுவது பெரிய மைனஸ்.

படம் முழுக்க வலம் வந்தாலும், இக்கதையில் கிரிதி ஷெட்டிக்கான முக்கியத்துவம் குறைவு. அவ்வளவு ஏன், அவரது ‘க்யூட்னெஸ்’ கூட திரையில் சரியாக வெளிப்படவில்லை.

நாயகன் நாயகி தாண்டி, இக்கதையில் நம் கவனத்தை உடனடியாகக் கொள்ளையடிப்பவர் சரத்குமார்.

முழுக்க முழுக்க வில்லனாக வந்தாலும், அவரது பாத்திரம் நாயகனுக்கு இணையாக அமைந்திருக்கிறது. இனி, இந்திப்படங்கள் வரை அவர் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

காமெடி கலந்து வில்லத்தனத்தை வெளிப்படுத்தினாலும், அரவிந்த்சாமியின் பாத்திரம் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை.

முதலமைச்சராகத் தோன்றியிருக்கும் பிரியாமணி திரையில் கம்பீரம் காட்டினாலும், அது மட்டுமே நம் திருப்தியைச் சம்பாதிக்கப் போதுமானதாக இல்லை.

இவர்கள் தவிர்த்து சம்பத்ராஜ், ஜெயபிரகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், கோபராஜு ரமணா, ராம்கி, ரவிபிரகாஷ் உட்படப் பலர் இதில் தோன்றியுள்ளனர். பிரேம்ஜி செய்யும் கொணஷ்டைகள் சிரிப்பூட்டவில்லை என்பதைச் சொல்லியே தீர வேண்டும்.

ஜீவா, ஆனந்தியின் கௌரவத் தோற்றமும் படத்தில் உண்டு. ஆனால், அந்த பிளாஷ்பேக்கும் அது சொல்லப்பட்ட பின்னணியும் கொஞ்சம் கூட மனதைத் தைப்பதாக இல்லை.

யதார்த்தமான ட்ரீட்மெண்ட் உடன் திரைக்கதையில் ஆக்‌ஷன் தெறிக்க முயற்சித்திருக்கிறது எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு.

இரவு – பகல், இண்டீரியர் – எக்ஸ்டீரியர் வித்தியாசம் இல்லாமல் எல்லா பிரேம்களையும் ‘ரிச்’ ஆக காட்டியிருக்கிறது.

ஒளிப்பதிவு தரமாக அமைவதற்குத் தேவையான விஷயங்களைத் திரையில் நிரப்பியிருக்கிறார் கலை இயக்குனர் டிஒய் சத்யநாராயணா.

தொண்ணூறுகளின் பின்பாதியைத் திரையில் பிரதிபலிக்க முயற்சித்திருக்கிறார்.

பரபரவென்று ஹரி படம் பார்த்த உணர்வைச் சில இடங்களில் உருவாக்குகிறது வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு. அணைக்கட்டில் நடக்கும் சண்டைக்காட்சியில் அவரது உழைப்பு அபாராம்.

ஆனால், நாக சைதன்யா உடன் ஜீப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஏறியபிறகும், கிரிதியின் தந்தையுடன் அவர் டெலிபோனில் பேசும் காட்சி இடம்பெற்றிருப்பது படத்தொகுப்பில் ஏற்பட்ட குறையைச் சட்டென்று உணர்த்துகிறது.

வழக்கமாக, வெங்கட்பிரபுவின் படங்களில் யுவன் தரும் பாடல்கள் ஹிட் ரகமாக இருக்கும். இதில் இளையராஜாவும் சேர்ந்திருக்கிறார். ஆனாலும், பாடல்கள் எதுவும் உடனடியாகக் கவரவில்லை.

பின்னணி இசையை ராஜாவும் யுவனும் தனித்தனியாகத் தந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவை காட்சிகளுக்குத் தகுந்தாற்போல இருப்பதுடன், வழக்கத்தில் இருந்து வேறுபட்டிருப்பது ஆறுதலான விஷயம்.

‘கஸ்டடி’யைப் பொறுத்தவரை, தமிழ் பேசும் ஒரு தெலுங்குப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் தெலுங்கு பட தாக்கம் இருப்பதில் தவறில்லை.

ஆனால் கதாபாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் தொட்டு அனைத்துமே தெலுங்கு பேசும் மண்ணில் நிகழ்வதாகவே காட்டப்பட்டிருப்பதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஏன் இந்தப் பயம்?

‘கஸ்டடி’யில் அரசியல்வாதிகள், ரவுடிகள், காவல் துறையினர் அனைவருமே கூட்டு சேர்ந்து மோசமான செயல்களில் ஈடுபடுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தெலுங்கு படத்தில் கதை ஆந்திராவில் நிகழ்வதாகக் காட்டப்படுவதும், தமிழ் படத்தில் தமிழ்நாட்டில் நிகழ்வதாகக் காட்டப்படுவதும் இயல்பு.

கலாசார வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, பேசும் மொழிக்கேற்ப இடங்களையும் பாத்திரங்களையும் மாற்றுவதி சில நேரங்களில் வேடிக்கையாகவும் மாறும்.

ஆனால், கஸ்டடி படத்தின் கதையைத் தெலுங்கு பிரதேசத்தில் நடப்பதாகவே காட்டியிருக்கிறார் வெங்கட்பிரபு.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழல் உடன் படத்தின் கதையை எந்த வகையிலும் ஒப்பிட்டுவிடக் கூடாது என்பது காரணமானால், ‘ஏன் இந்தப் பயம்’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

ஏனென்றால், ஒரு கமர்ஷியல் படத்தில் இது போன்ற விஷயங்களைச் சொல்வது ‘இதுதாண்டா போலீஸ்’, ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ காலத்திற்கு முன்னிருந்தே வழக்கமாக இருந்துள்ளது.

‘இந்தக் கதை நமக்குச் சம்பந்தமில்லாதது’ என்ற உணர்வை ரசிகர்களின் மனதில் அழுத்தமாக உருவாக்க இந்த உத்தி வழி வகுக்கும்.

தெரிந்தே அந்த தவறை அனுமதித்திருப்பதில் இருக்கும் நியாயம் என்னவோ? அது மட்டுமல்லாமல், திரைக்கதையில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது பெரும்பலவீனமாக அமைந்துள்ளது.

அனைத்தையும் மீறி, வெங்கட்பிரபுவின் படங்களைப் பார்க்கும்போது ஒரு புத்துணர்வு தோன்றும். ‘கஸ்டடி’யில் அது நிகழவே இல்லை.

நிச்சயமாக, படத்தின் கதை தொண்ணூறுகளில் நிகழ்வதாகக் காட்டியிருப்பது அதற்கான காரணமல்ல; கதை, திரைக்கதை ட்ரீட்மெண்ட் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும் வெங்கட்பிரபுவின் தனித்துவம் இதில் ’மிஸ்ஸிங்’. அதனால், ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

– உதய் பாடகலிங்கம்

You might also like