ராவண கோட்டம்: இன்னொரு மதயானைக் கூட்டமா?

ஒரு இயக்குனரின் முந்தைய படம் தந்த அனுபவத்தை நினைவில் இருத்திக் கொண்டால், அவரது அடுத்த முயற்சி ஏதோ ஒருவகையில் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.

அதற்கேற்ப படம் அமைந்திருக்கிறதா இல்லையா என்பது அந்த இயக்குனருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கும் கூடத் தெரியாது.

அப்படித்தான் ‘மதயானைக் கூட்டம்’ தந்த விக்ரம் சுகுமாரன் மீதான நம்பிக்கையே, அவரது ‘ராவண கோட்டம்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் பார்த்தபிறகு அந்த நம்பிக்கை மேலும் இறுகியிருக்கிறதா, தளர்ந்திருக்கிறதா?

இது ராவண கோட்டம்!

சாதிப் பூசல்களால் ஒரு ஊர் இரண்டாகப் பிரிந்து நிற்பதுதான் ‘ராவண கோட்டம்’ கதை.

‘ராவண கோட்டம்’ என்ற பெயரைக் கேட்டவுடன், ஊர் பெருமையைச் சொல்லும் படங்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் என்றே தோன்றும்.

ஆனால், ‘சாதிக் கலவரத்தில் இறந்தவர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்’ எனும் தொனியில் ஆரம்பத்திலேயே ஒரு ‘கார்டு’ வந்து விழுகிறது.

அதனால், அடுத்துவரும் காட்சிகளில் கொண்டாட்டம் நிரம்பியிருந்தாலும் மனம் கதையில் வரும் திருப்பத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏனாதியில் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் தம் கொடியை நாட்ட முடிவதில்லை. காரணம், அந்த ஊரின் தலைவர் போல செயல்பட்டுவரும் போஸ் (பிரபு) மற்றும் அவரது நண்பர் சித்ரவேல் (இளவரசு).

இருவரும் அண்ணன் தம்பியாகப் பழகி வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள்; போஸ் மேலத்தெருவில் வசிக்க, சித்ரவேல் கீழத்தெருவில் வசிக்கிறார்.

சித்ரவேலின் மகன் மதிவாணன் (சஞ்சய் சரவணன்), போஸின் உறவினர் செங்குட்டுவன் (ஷாந்தனு பாக்யராஜ்) இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரையொருவர் ‘பங்காளி’ என்று உறவு பாராட்டிக் கொள்பவர்கள்.

ஊர் அம்மன் கோயிலில் கொடை வர, அதையொட்டி வெளியூரில் வசிக்கும் ஏனாதி மக்கள் பலரும் ஊருக்கு வருகின்றனர். அவர்களில் செங்குட்டுவனின் அத்தை பெண் இந்திராவும் (ஆனந்தி) இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்திராவின் பூப்புனித நீராட்டு விழாவில் யார் சடங்கு செய்வது என்பதில் செங்குட்டுவனும் அவரது சகோதரியும் (தீபா சங்கர்) தகராறு செய்தனர். அந்த காரணத்தால், அவர்களுடன் இந்திராவின் தாய் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்.

அதை மீறி இந்திராவும் செங்குட்டுவனும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். இது, செங்குட்டுவனின் நண்பனான மதிக்கும் கூடத் தெரியாது.

இந்த நிலையில், கோயில் கொடையை ஒட்டி ஊருக்குள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, அமைச்சர் என யாரும் வர முடியாத நிலைமையை உருவாக்குகிறார் போஸ். அன்னதானத்தோடு வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் கட்சி முத்திரை இருந்ததே அதற்கு காரணம்.

அந்த எரிச்சலில், ஊருக்குள் பிரிவினையை ஏற்படுத்தியாவது கட்சியை வளர்க்க வேண்டும் அமைச்சரும் எம்.எல்.ஏவும் எண்ணுகின்றனர். அது தன்னால் முடியும் என்கிறார் மதியின் தாய்மாமன்.

அவர், வேறொரு ஊரில் நடந்த சாதிக் கலவரத்தில் தனது கையை இழந்தவர். அதனால் ஏற்பட்ட வெறுப்பை, ஏனாதியில் காட்ட விரும்புகிறார். கூடவே, ஆளும் கட்சியில் தனக்கொரு பதவியைப் பெறவும் நினைக்கிறார்.

அதற்காக, மதி – செங்குட்டுவன் இடையே மோதலை உருவாக்க முயல்கிறார். ‘இந்திரா உன்னைத்தான் காதலிக்கிறாள்’ என்று மதியின் மனதில் ஆசையை விதைக்கிறார்.

அந்த நேரத்தில், செங்குட்டுவன் சகோதரியை வெறுப்பேற்றுவதற்காக, இந்திராவும் மதியிடம் நெருங்கிப் பழகுவது போலக் காட்டிக் கொள்கிறார்.

உண்மை தெரியாமல் மதி தன் மனதில் காதலை வளர்த்துக் கொள்கிறார். ஒருகட்டத்தில் அந்த காதல் உண்மையல்ல என்று தெரியவரும்போது, அவர் மனதில் ஆவேசம் பெருகுகிறது.

மதியின் தாய்மாமன் விரும்பியது போலவே, இறுதியில் மேலத்தெருவுக்கும் கீழத்தெருவுக்கும் நடுவே மோதல் உருவாகிறது. அதன்பின் என்னவானது என்பதே ‘ராவணக் கோட்டம்’ கதை.

ஓரிடத்தில், ‘இது ராவணக் கோட்டம்’ என்று போஸாக நடித்துள்ள பிரபு கர்ஜிக்கிறார். அப்போது, அது அந்தப் பகுதியின் பழைய பெயராக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதைத் தவிர, இந்த கதைக்கும் டைட்டிலுக்கும் பெரிய சம்பந்தமில்லை.

சாந்தனுவின் நடிப்பு!

தனது உண்மையான ‘மெட்ரோ பாய்’ பிம்பம் சிறிதும் திரையில் தெரியாதவாறு செங்குட்டுவனாக நடித்த வகையில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறது சாந்தனுவின் நடிப்பு.

ஆனால், இது போன்ற சர்ச்சைக்குரிய கதைகளை விட ‘களவாணி’ போன்ற கமர்ஷியல் வெற்றி உத்தரவாதமுள்ள படங்களே புதிய ரசிகர் ரசிகைகளை உருவாக்கும் என்ற விஷயத்தில் அவர் கவனம் கொள்ள வேண்டும்.

‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ போலவே இதிலும் குறும்புப் பெண்ணாக ரசிக்க வைக்கிறார் ‘கயல்’ ஆனந்தி. நாயகி அல்லாத நாயகி எனும் பாத்திர வார்ப்புக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

மதியாக வரும் சஞ்சய் சரவணன், தனது நடிப்பிலும் தோற்றத்திலும் ஹரீஷ் உத்தமனை நினைவூட்டுகிறார். ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரபு, இளவரசுவின் பாத்திர வார்ப்புகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர்களது நடிப்பு வழக்கமானதாகவே அமைந்துள்ளது. தீபா சங்கர், சுஜாதா இருவரும் தோன்றும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி.

எம்.எல்.ஏ.வாக வரும் அருள்தாஸ், அமைச்சராக வரும் தேனப்பன், கலெக்டராக வரும் ஷாஜியைத் தாண்டி மதியின் தாய்மாமனாக வருபவரும் அவரது அல்லக்கையாக வரும் சத்யாவும் எளிதாக நம்மை ஈர்க்கின்றனர்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் ‘பவர்ஃபுல்’லாக அமைந்திருக்கின்றன.

கதை சொல்லப்பட்டவிதம் எளிதாகவும் நேர்த்தியாகவும் அமைய உதவியிருக்கிறது லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு.

நர்மதா வேணி, ராஜுவின் கலைவண்ணமும் ஒரு கிராமத்துப் படம் பார்க்கும் எண்ணத்தை வளர்த்தெடுக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் கைவண்ணத்தில் காட்சிகளின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது பின்னணி இசை.

அதோடு, கிராமியச் சாயலையும் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், பாடல்கள் சட்டென்ற கவன ஈர்ப்பை உருவாக்கவில்லை.

கத்தி மீது நிற்கலாமா?

படத்தில் நிறைந்திருக்கும் கதாபாத்திர வார்ப்புகள், கதை சொல்லப்பட்ட விதத்தை மீறி இரு வேறு சாதியினர் கலவரங்களுக்குப் பலியாகிவிடக் கூடாது என்ற இயக்குனரின் அக்கறை பாராட்டுக்குரியது.

ஆனால், அதற்காக அவர் முன்வைத்திருக்கும் கதைக்களம் ரொம்பவே செயற்கையாகத் தெரிகிறது.

சாதி வேறுபாடுகளைக் கடந்து பழகுபவர்கள் எக்காலத்திலும் உண்டு என்றபோதும், காதலும் திருமணமும் அவற்றுக்குத் தடை போடும் என்பதே கடந்தகாலம் சொல்லும் உண்மை.

ஆனால், இந்திராவுடன் மதி பழகுவதை ‘ஜஸ்ட் லைக் தட்’ காட்டியிருப்பது சரிதானா? ‘ராவண கோட்டம்’ கதையில் இருக்கும் குறைகளை மீறி, இந்த படத்தை மேற்கொண்டு பார்ப்பதா வேண்டாமா என்று ரசிகர்கள் தீர்மானிக்கும் இடமாகவும் அதுவே விளங்குகிறது.

அந்த காட்சிக் கோர்வைகளைப் பிசிறில்லாமல் செதுக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

டைட்டில் காட்சியில் முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் உட்படச் சில தலைவர்களின் முகங்களை பிரபுவோடு பொருத்தி பத்து தலைகளாக காட்டியதன் மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? அனைவரும் சமம் என்பதனை பிரபுவின் பாத்திரம் வலியுறுத்தினாலும், இளவரசுவின் பாத்திரமோ ‘விசுவாசமே முக்கியம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறது.

திரைக்கதையில் நாயகனின் தரப்பு நியாயத்துக்கு உரியது என்ற தோற்றமும் தென்படுகிறது. அது கேள்விகளை எழுப்பும் என்பதை இயக்குனர் சிறிதளவும் யோசிக்கவில்லையா? இக்கேள்விகளை எழுப்பக் காரணம் உண்டு.

வெறுமனே சில மனிதர்களின், குடும்பங்களின், குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களின் வாழ்வு முறையைச் சொன்ன ‘மதயானைக் கூட்டம்’ வெறுமனே ’சாதிப்படம்’ என்ற முத்திரைக்கு உள்ளானது.

மாறாக, அரசியல்வாதிகளின் சூழ்ச்சியாலேயே இன்னமும் கிராமங்களில் சாதிக் கலவரங்கள் உருவாக்கப்படுவதாகச் சொல்கிறது ‘ராவணகோட்டம்’.

மேலத்தெரு, கீழத்தெரு என்று விளிப்பதன் மூலமாக, இன்ன சாதிகள் இக்கதையில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று நேரடியாகச் சொல்வதைத் தவிர்த்திருக்கிறார்.

ஆனால் போஸ், சித்திரவேல் என்ற பெயர்கள் ஒலிக்கும் பாங்கே அந்த வட்டாரத்தில் இருக்கும் சாதியினரைச் சுட்டி விடுகின்றன.

வெவ்வேறு சாதியினராக இருந்தாலும், ஒருவர் வீட்டில் இன்னொருவர் உணவுண்ணுகிறார் என்று ஒரு கிராமத்தைக் காட்டியிருக்கிறது ‘ராவண கோட்டம்’. போஸ் எனும் பாத்திரத்தின் மனப்பான்மையே அதற்குக் காரணம் என்றும் சொல்கிறது.

ஆனால், இரண்டாயிரத்திற்குப் பிறகு தென்மாவட்டக் கிராமங்களில் ‘கயிறு’ கட்டித் திரியும் இன்றைய இளைய தலைமுறை வெளிப்படுத்தும் யதார்த்தம் அதற்குப் புறம்பாக இருக்கிறது. அதனை லேசாகவாவது இயக்குனர் தொட்டுச் சென்றிருக்கலாம்.

இரண்டு சாதிகள் சம்பந்தப்பட்ட கதை என்று சொல்லும்போதே, கத்தி மீது நிற்கும் உணர்வு எழும்.

ஆனால், இயக்குனரோ அதைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இயக்குனர் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், ‘அனைவரும் சமம்’ என்ற எண்ணம் இன்றும்கூட பெருவாரியாகப் பரவவில்லை என்பதே யதார்த்தம்.

அதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தால், குறைகளை மீறி ரசிக்க வைத்திருக்கும் ‘ராவண கோட்டம்’.

– உதய் பாடகலிங்கம்

You might also like