ராமன் எத்தனை ராமனடி தொடங்கி காவலன் வரை இன்று நாம் பார்க்கும் பல திரைப்படங்களுக்கு ஆரம்பகாலத்தில் வைத்த பெயர்கள் வேறு. எதனால்,
எப்படி அவற்றின் பெயர்கள் மாறின? பார்க்கலாம்.
சாப்பாட்டு போட்டியில் கலந்து கொண்டு கோப்பையை தட்டிச்செல்லும் சாப்பாட்டு ராமனாக சிவாஜி நடித்த படத்துக்கு தொடக்கத்தில் ‘’சாப்பாட்டு ராமன்’’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள்.
ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கு அந்தப்பெயர் பிடிக்கவில்லை. ‘பெயரை மாற்றவேண்டும்’ என போர்க்கொடி உயர்த்தினர். விளைவு?
‘ராமன் எத்தனை ராமனடி’ என பெயர் மாற்றம் செய்து படத்தை வெளியிட நேர்ந்தது. படமும் பெரிய ஹிட்.
தனது குடும்பத்தை சிதைத்தவர்களை ரஜினிகாந்த் துவம்சம் செய்யும் படம் ’நான் மகான் அல்ல’. ரஜினி ஜோடியாக ராதா நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் ’நான் மகாத்மா அல்ல’ என பெயர் வைக்கப்பட்டது.
மகாத்மா எனும் பட்டம் காந்திக்கு மட்டுமே உரியது என எதிர்ப்பு கிளம்பியதால், நான் மகான் அல்ல என கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டது.
கமலஹாசன் நடித்து, தயாரித்த தேவர்மகன் படத்தின் பெயருக்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் தேவர்மகன் என்ற பெயரிலேயே படம் ரிலீஸ் ஆனது.
சில ஆண்டுகள் கழித்து கமலஹாசன் தயாரித்து, நடித்த படத்துக்கு சண்டியர் என டைட்டில் சூட்டினார். இந்த பெயருக்கும் அதே அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த முறை எதிர்ப்பு பலமாக இருந்தது. பிரச்சினை வேண்டாம் என கருதிய கமலஹாசன், விருமாண்டி என பெயரை மாற்றி சண்டியரை வெளியிட்டார்.
கமலஹாசன் – அம்பிகா ஜோடியாக நடிக்க ‘ஹீரோ-82’ எனும் பெயரில், 80 களில் ஸ்ரீதர் ஒரு படத்தை ஆரம்பித்தார். படம் இழுத்துக்கொண்டே போனது. 82 ஆம் ஆண்டு வெளியாகியிருக்க வேண்டிய படம் சில ஆண்டுகள் கழித்து ‘நானும் ஒரு தொழிலாளி‘ எனும் பெயரில் ஆனது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சகோதரர் விஸ்வாஸ் சுந்தர், நீண்ட போராட்டத்துப்பிறகு விஜய்யிடம் கால்ஷீட் வாங்கி உருவாக்கிய படம் ’கீதை’.
இந்து அமைப்புகள் ‘கீதை’ படத்தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ‘புதிய கீதை’ என பெயரை மாற்றி வெளியிட்டார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.
வாலி, குஷி, நியூ என தொடர்ச்சியாக மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, நான்காவதாக இயக்கிய படத்துக்கு ஆரம்பத்தில் வைத்த தலைப்பு பி.எஃப். அதாவது ‘பெஸ்ட் பிரண்ட்ஸ்’. ஆனால் அந்த டைட்டில் ஆபாசமாக இருப்பதாக பலரும் முகம் சுழித்தனர்.
இதனால் ‘அ ஆ’ என பெயரை மாற்றி வெளியிட்டார். படம் ஓடவில்லை. இதன் பிறகே இயக்கத்துக்கு தற்காலிக விடை கொடுத்து முழு நேர நடிகராக, தன்னை மடை மாற்றம் செய்து கொண்டார், சூர்யா.
அஜித்தின் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான படம் ‘வரலாறு’. அந்த படத்துக்கு முதலில் ‘காட் ஃபாதர்’ என பெயர் வைக்கப்பட்டது.
தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைத்தால் சில சலுகைகளை இழக்க நேரிடும் சூழல் அப்போது இருந்ததால், வரலாறு என பெயரை மாற்றினார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். மூன்று வேடங்களில் அஜித் நடித்திருந்த வரலாறு, அஜித்தின் சினிமா வாழ்க்கையில் புதிய வரலாற்றை எழுதியது.
இதேபோன்று விஜய் ஹீரோவாக நடித்து வெளியான காவலன் படத்துக்கு முதலில் காவல்காரன் என பெயர் வைத்திருந்தனர். புரட்சித்தலைவர் நடித்த காவல்காரன் படத்தின் தலைப்பு, அதன் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்தது, இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் தலைப்பை வேறு ஒருவருக்கு கொடுக்க ஆர்.எம்.வீ. விரும்பவில்லை. எனவே காவலன் என புதிய பெயரை சூட்டி, விஜய் படத்தை ரிலீஸ் செய்தனர்.
– பி.எம்.எம்.