எம்ஜிஆரின் வெள்ளைத் தொப்பியும் ஜானகி அம்மாவின் அன்பும்!

‘அன்னை ஜானகி-100’ சிறப்பு மலரிலிருந்து…

ஏற்கனவே ராமாயண காலத்தில் வாழ்ந்த சீதை எனும் ஜானகியும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகிய ராமன் பெயரிலேயே ஜானகி – ராமச்சந்திரன் என்னும் பெயர் இவர்களுக்கு இயற்கையிலேயே பொருத்தமான பெயராக அமைந்து விட்டது.

தமிழகத்தின் மிகப் பிரபல மனிதரின் மனைவி நான் என்ற எண்ணம் இல்லாமலும், தானும் ஒரு மிகப்பெரிய பிரபலம் என்ற எண்ணம் இல்லாமலும் அடக்கத்தோடும், ஆடம்பரம் இல்லாமலும் எளிமையாக வாழ்ந்தவர் திருமதி.வி.என். ஜானகியம்மாள்.

எம்.ஜி.ஆர் திரைத்துறையிலும், அரசியலிலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, ஜானகி அம்மாள் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தார்.

சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில், வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வரச்சொல்லி, அதையும் ஜானகி அம்மையார் கையால் பரிமாறச் சொல்லிச் சாப்பிடுவதையே விரும்பி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.

1968 ஆம் ஆண்டு. ஜெய்ப்பூரில் ‘அடிமைப் பெண்’ படத்திற்கான படப்பிடிப்பு. ஜானகி அம்மாவும் உடன் சென்றிருந்தார்.

அப்போது ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா எம்.ஜி.ஆர் தம்பதியினருக்கு விருந்து வைத்தார்.

அப்போது எம்.ஜி.ஆருக்குத் தங்கள் பாரம்பரியப்படி வெள்ளைத் தொப்பி ஒன்றை அணிவித்தார்கள். எம்.ஜி.ஆருக்கு அந்தத் தொப்பி அழகாகப் பொருந்தியிருந்தபோது, உடனிருந்த ஜானகி அம்மாள் சொன்னார். “இனிமேல் தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் அணிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனி அடையாளமாக இது இருக்கும்” அதன் படியே தன்னுடைய தோற்றத்தை அமைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

1985-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர், அனைத்துக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜானகி அம்மாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

திருமதி.வி.என். ஜானகி அம்மாள் ஒரு சிறந்த குடும்பத் தலைவி. தனிப்பட்ட முறையில் தன் குடும்பத்திற்காகவும், எம்.ஜி.ஆருக்காவும் தன்னை உருக்கிக் கொண்ட மெழுகுவர்த்தியைப் போன்றவர் அவர்.

எம்.ஜி.ஆர். வறுமையில் இருந்தவர்களுக்கு வாரி வழங்கினார் என்றால், ஜானகி அம்மாவோ பசியோடு வந்தவர்களுக்கு வயிறார உணவளித்தார். ராமாவரம் தோட்டத்துச் சமையலறை எப்போதும் அவருடைய மேற்பார்வையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருந்தது.

அவர் வாழும் காலம் வரை ராமாபுரம் இல்லத்தின் கதவுகள், பசித்த மக்களுக்காகத் திறந்தே இருந்தன. கும்பகோணத்தில் தொடங்கிய ஜானகி அம்மையாரின் பயணம், கோட்டை வரை சிறப்பாகச் சென்றடைந்ததே பெருமைக்குரிய ஒன்றுதான்.

“தாயில்லாமல் நானில்லை” என்ற பாடலைப் பாடிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நிஜ வாழ்விலும் தன் அன்னை சத்யபாமா அம்மையாருக்குத் தனது வீட்டில் கோவில் எழுப்பி வழிப்பட்டவர். “அப்படித் தனது தாய்க்குக் கோவில் கட்டி வழிபட்டவர் எனக்குத் தெரிந்து என்னவர் (எம்.ஜி.ஆர்) மட்டுமே” என்றிருக்கிறார் ஜானகி அம்மா.

எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, ஜானகி அம்மாவுக்கும் மிகவும் பிடித்த நம்பிக்கையூட்டும் திரைப்படப் பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” பாடல் தான். மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மாவுக்கும் நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றன அந்தப் பாடலின் சத்தான வரிகள்.

எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ என்ற வெற்றித் திரைப்படம் உருவாகப் பின்னணியில் இருந்த மிக முக்கியமானவர் திருமதி.வி.என்.ஜானகி அம்மா தான்.

எம்.ஜி.ஆர். போலவே ஜானகி அம்மையாரும் நிறைய இரக்க சிந்தனை கொண்டவர். திடீரென்று யாராவது வந்து கல்யாணம் வைத்திருக்கிறோம், பண உதவி செய்யுங்க என்று எம்.ஜி.ஆரைக் கேட்பார்கள்.

அவர் ஜானகி அம்மாளைப் பார்த்து, “5000 ரூபாய் கொடுத்தனுப்புங்கம்மா” என்பார். அதைவிடக் கூடுதலாகவே அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்புவார் ஜானகி அம்மாள்.

மக்கள் திலகம் போல் நல்லவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காகத் தான் வளர்த்த குழந்தைகளிடம் ஜானகி அம்மையார் காட்டிய அன்பும், அக்கறையும் அதிகம்.

எல்லாக் குழந்தைகளுக்கும் உயர் கல்வி வரை படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்களுக்குப் பரத நாட்டியமும் கற்றுத் தரப்பட்டது.

ஜானகி அம்மாள் தோட்டத்தில், வீட்டில் வேலை செய்கின்ற பணியாளர்களை அன்பாகவும், அக்கறையாகவும் கவனித்துக் கொண்டார்.

பொங்கலை எப்போதும் மற்றவர்களுடன் சமத்துவமாக ஒரே மாதிரி உடை உடுத்திக் கொண்டாடும் பண்புள்ளவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாவும் அதே பண்போடு பொங்கல் தினத்தைக் கொண்டாடுவார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் தோட்டத்தில் தன் தாயார் ராஜாமணி அம்மையாருக்கு சிலை வைத்தபோது அதைத் திறந்துவைக்க தகுதியானவர்கள் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் தான் என்று அவர்களைக் கொண்டே திறக்க வைத்தார்.

எம்.ஜி.ஆருடைய சிறு அசைவையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்றபடி தேவையானவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜானகியம்மாள்.

அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையான அக்கறையை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் பத்திரிகையாளர்கள்.

என்றைக்கு எம்.ஜி.ஆரை மணந்துகொண்டாரோ அன்றைக்கே இல்லறமாம் நல்லறத்தில் தன் நாட்டம் முழுமையும் செலுத்தினார். வீட்டில் சமையற்காரர்கள் இருந்தாலும், தன் அன்புக் கணவருக்குத் தாமே விரும்பிச் சமைக்கவும் செய்தார் ஜானகி அம்மாள்.

(தொடரும்…)

முதல் பகுதியின் இணைப்பு – https://thaaii.com/2022/12/30/articles-about-janaki-mgr/

முதல் பகுதியின் இணைப்பு –https://thaaii.com/2023/04/25/annai-janaki-mgr-century-malar/

அன்னை ஜானகி – 100

நூற்றாண்டுச் சிறப்பு மலர்

வெளியீடு: மெரினா புக்ஸ்

தரணி காம்ப்ளெக்ஸ்,
1A, திருநாத முதலி நகர்,
திருப்பத்தூர். – 635 601

  • அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலரைப் பெற கீழே உள்ள இணைப்பைத் தொடுக…

https://marinabooks.com/detailed?id=1499-0326-2509-9479

You might also like