எம்.ஜி.ஆர் என்னும் ஆச்சர்யம்!

 – எழுத்தாளர் ராண்டார் கை
*
அண்மையில் மறைந்த சினிமா ஆய்வாளரான ராண்டார் கை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறித்து எழுதிய கட்டுரை.

****

உலக சினிமா வரலாற்றில் எந்தவொரு தனி மனிதருக்கும் இத்தனை பிரமிப்பு, புகழ்ச்சி, வியப்பு, சிறப்பிடம் கிடையாது.

அசாதாரணமான வாழ்க்கையின் மூலமாக வழிபாட்டைவிட மிகப்பெரிய ஆராதனையைப் பெற்றவர். அவரைப் போற்றும் எண்ணற்ற மக்கள் எத்தனையோ பட்டங்களைத் தந்துள்ளனர்.

மக்கள் திலகம், புரட்சித் தலைவர், வாத்தியார் என்று அந்த வரிசை நீளும். நம்முடைய காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்புகழ் பெற்ற இந்தியர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர், தமிழர்களைப் பொறுத்தவரை இப்போதும் அவரது புகழ் உயிர்ப்புடன் இருக்கிறது.

அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது தீவிரமான பக்தர்கள் இப்போதும் அவர் எங்கோ உயிருடன் இருப்பதாக நம்பி வருகின்றனர்.

பல பத்தாண்டுகள் கடந்தாலும் இப்போதும் அவரது புகழ் மங்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் இந்திரா காந்திக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கு நன்கு தெரிந்த இந்தியப் பிரபலம் என்று எம்.ஜி.ஆரின் பேரைப் பதிவு செய்திருக்கிறார்.

உலகின் வேறெந்தப் பகுதியிலும், எம்.ஜி.ஆரைப் போன்று வேறொரு சினிமா நட்சத்திரம் இது போன்ற வரலாற்றை உருவாக்கவில்லை.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக, முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர்.

விமர்சகர்களும் அவரது அரசியல் விரோதிகளும், தனது பாக்ஸ் ஆபிஸ் ஒளிவட்டத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட நட்சத்திரமாகவே அவரைச் சித்தரித்தனர்.

ஆனால், எம்.ஜி.ஆர் என்பவர் எந்த உள்ளடக்கமும் இல்லாத தக்கை அல்ல. தான் திறன்மிக்க, புத்திசாலித்தனம் கொண்ட தலைவன் என்பதைத் தனது சினிமா புகழை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் உருவாக்கிக் காட்டினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அவரது படங்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதைக் கவனித்தால் அந்த ஆச்சரியம் பன்மடங்காகிறது.
அவரது காலகட்டத்தில் இருந்த மற்ற நடிகர்களைவிட, அவரது படங்களின் தோல்வி சதவிகிதம் மிகக் குறைவு.

இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அதற்கான மகிழ்ச்சியை அனுபவிக்கவிருந்த நேரத்தில் அவரது தந்தை மறைந்தார்.

திடீரென்று நிகழ்ந்த அந்த இழப்பால், எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா தமிழகம் திரும்பினார். கும்பகோணத்தில் இருந்த உறவினர் வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைக்க, அங்குள்ள பள்ளியில் ராமச்சந்திரனும் அவரது சகோதரர் சக்ரபாணியும் கல்வி கற்றனர்.

அப்போது அவர்களது தினசரி வாழ்வே கேள்விக்குறியாக இருந்தது. தினமும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளப் பணம் இல்லாமல் மூவரும் கஷ்டப்பட்டனர்.

ஒருநாள், தனது மகன்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று முடிவெடுத்தார் சத்யபாமா.

மகன்கள் இருவரும் தங்கள் சொந்தக் காலில் நின்று சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்தார்.

பல மேடைக் கலைஞர்களை உருவாக்கிய மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருவரையும் சேர்த்து விட்டார் சத்யபாமா.

அந்த நாடக கம்பெனியை குருகுல முறையில் நடத்திவந்த மெட்ராஸ் கந்தசாமி முதலியார், ஒருகாலத்தில் புகழ்பெற்ற நாடகக் கலைஞராக இருந்தவர்.

நகரம், கிராமம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் ஏறக்குறைய தினமும் நாடகம் நடத்தி தன்னிடம் இருந்த மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்து வந்தார்.

கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே.ராதா, 1930-40களில் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக விளங்கியவர்.

பின்னாட்களில் ராதாவை ராண்டார் கை பேட்டியெடுத்தபோது தனது தந்தை, எம்.ஜி.ஆரை ஒரு மகன் போலக் கருதி பாசம் காட்டியதை நினைவு கூர்ந்திருக்கிறார்.

நாடக கம்பெனியில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆகும் காலகட்டம் மிகக் கொடியது. நடிக்கும் வாய்ப்பு குறையும் அந்தக் காலகட்டத்தைக் கடந்து வருவது கடினம்.
ஆனாலும், தன் கடின உழைப்பால் தாயின் கவலையை மறக்கடித்தார் எம்.ஜி.ஆர்.

“எங்களுக்கு உணவிடுவதற்காகத் தாயார் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதைப் பார்த்து அறிந்திருக்கிறோம்.

அது போன்ற நிலைமையை அவர் ஒருபோதும் எதிர்கொள்ளக் கூடாது என்பதே எனது லட்சியமாக இருந்தது” என்று பின்னாளில் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கிறார்.

1931-ம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியபோது, பாய்ஸ் கம்பெனியில் இருந்த நடிகர்களும் தங்களுக்கான சினிமா வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தனர்.

நிறைய போராட்டங்கள், பெரிய சரிவுகளுக்குப் பிறகு, ஒருவழியாக எம்.ஜி.ஆரும் எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் ‘சதிலீலாவதி’ படத்தில் தலைகாட்டினார்.

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில், மிகச்சிறிய பாத்திரமே அவருக்குக் கிடைத்தது. சீருடை, கால்சட்டை, தலையில் ஒரு தொப்பி, சிறு பிரம்பு என்று பத்தோடு பதினொன்றாகவே அவரது அறிமுகம் அமைந்தது.

அதன்பிறகும், அவரது வாழ்க்கையில் கஷ்டங்கள் தொடர்ந்தன. திரை வாய்ப்புகள் மிகக் குறைவாகவும், அரிதாகவும் கிடைக்க, வாழ்க்கையில் பதற்றமும் துயரமும் நிறைந்திருந்தன.

ஆனாலும், அச்சம் சிறிதுமின்றித் தனக்குக் கிடைத்த சிறிய வேடங்களிலும் மிகச்சிரத்தையாக நடித்தார் எம்.ஜி.ஆர். அதன் விளைவாக, அவரது இருப்பு கவனத்திற்கு உள்ளானது.

வழக்கத்திற்கு மாறான அவரது அழகுத் தோற்றம், வலுவான உடலமைப்பு, வாள் சண்டைத் திறமை, இதைத் தாண்டி அவருக்கே உரித்தான காந்தத் தன்மையும் சேர்ந்து அவர் பெரிய உயரத்தை அடைவார் என்பதை உணர்த்தியது.

ஒருநாள், அதற்கான வாய்ப்புத் தேடி வந்தது. எம்.ஜி.ஆர் என்று பின்னாட்களில் எளிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு நடிகர், 1947-ம் ஆண்டு ‘ராஜகுமாரி’ மூலமாக நாயகனாகும் வாய்ப்பை அளித்தது ஜூபிடர் நிறுவனம்.

கல்லூரிப் பேராசிரியராக இருந்து இயக்குநரான ஏ.எஸ்.ஏ.சாமி அந்தத் திரைப்படத்தை உருவாக்கினார். வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் அந்தக் கதை, ரசிகர்கள் மத்தியில் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படமும் உருவாகாமல் போயிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமிருந்தன. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரின் காரணமாக, இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு பிலிம் ரோல் வாங்குவதற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால், ஒரு படத்தின் நீளம் 11 ஆயிரம் அடிக்கு மேல் போக முடியாத நிலை ஏற்பட்டது. கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் ராஜகுமாரி படப்பிடிப்பை நடத்தினார் அறிமுக இயக்குநரான சாமி.

அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் ஜூபிடர் பங்குதாரர் எஸ்.கே.மொஹைதீன் மற்றும் வேறு சிலருக்குப் பிடிக்கவில்லை.

இதனால், அந்தப் படத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், பங்குதாரர்களில் ஒருவரான எம்.சோமசுந்தரம், அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.

சோமசுந்தரத்திடம் கெஞ்சிய சாமி, அதனால் தன்னுடைய, மற்றும் எம்.ஜி.ஆருடைய திரை வாழ்வே கேள்விக்குறியாகிவிடும் என்று சொல்லிப் படத்தை முடிக்க வழி செய்யுமாறு வேண்டினார்.

“5 ஆயிரம் அடியில் எடுப்பதற்குப் பதிலாக, 11 ஆயிரம் அடி எடுத்த பிறகு அந்த முடிவை எடுக்கலாமே” என்றார்.

அந்த வாதத்தின் முடிவில், சாமியின் வேண்டுகோளை சோமசுந்தரம் ஏற்றுக்கொண்டு பச்சைக்கொடி காட்டினார்.

அதன்பின், முழுப்படமும் தயாராகி ரிலீஸ் ஆனது. பெரிய அளவில் ஹிட் ஆனது. வீரமும், புஜபலமும் கொண்ட ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டுமென்பதே எம்.ஜி.ஆரின் ஆசை.

நாடகம் நடித்தக் காலத்திலிருந்தே, இந்த விஷயத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘டக்ளஸ் ஃபேர்பேங்ஸை’ அவர் முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆரின் நாயக அவதாரம் வெற்றிகரமாகத் தொடங்கினாலும், அவருக்கான சூப்பர் ஸ்டார் அந்தஸ்து எளிதில் கைவரப் பெறவில்லை. அதற்காக, அவர் பல வகைகளில் போராட வேண்டியிருந்தது.

திரையில் எம்.ஜி.ஆரின் பிம்பம் கனகச்சிதமாக அவரால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது. இதனால், அவரது ரசிகர்களால் திரையில் தெரியும் எம்.ஜி.ஆருக்கும் யதார்த்த வாழ்வில் இருக்கும் எம்.ஜி.ஆருக்குமான வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பசியின் வேதனையையும், வறுமையின் கிள்ளலையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால், தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்காக, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அன்பு காட்டியதற்காகப் பலன்களை அனுபவித்தார்.

ஏதுமில்லாதவர்களுக்காக அவர் தன் வாழ்நாள் முழுக்க உதவி செய்தார். இது போன்ற விஷயங்கள் எல்லாமே, அவரது திரை பிம்பத்தோடும் வெற்றிகரமாகக் கலக்கப்பட்டது.

புத்திசாலியாக இருந்ததால், சினிமா எனும் ஊடகத்தின் சக்தி என்னவென்பதையும், அதன் மூலமாகத் தகவல்களை எவ்வாறெல்லாம் பரப்பி மக்களை ஒரே அச்சில் வார்க்கலாம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

இதே வழியில்தான், மிகப்பெரும் அரசியல் தத்துவ மேதையான ‘காரல் மார்க்ஸ்’ தனது பேனாவை பயன்படுத்தினார். தன்னுடைய அரசியல் சித்தாந்தங்களை வலுப்படுத்துவதற்காக, எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பயன்படுத்தினார்.

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப் பிள்ளை, ஒளி விளக்கு, அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் உட்பட சில படங்கள் அவருக்குப் பெருவெற்றியைப் பெற்றுத் தந்தன.

தெளிவான, ஊக்கமூட்டக்கூடிய, நல்ல கருத்தைச் சொல்லக்கூடிய வகையில் அவரது படங்களின் தலைப்புகளும் அமைந்தன.

நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, தர்மம் தலை காக்கும் போன்றவை அதற்கான சிறு உதாரணங்கள்.

அவரது படங்களின் கதைக் கருக்களும் கூட எளிமையாக, தெளிவாக, நீதியைப் போதிக்கக்கூடியதாக இருந்தன.

நல்லது செய்யக் கூடிய, பெரும்பாலும் ஏழையாக, போராட்டங்களைச் சந்தித்தத் தாயோடு எவ்வளவு முரண்கள் இருந்தாலும் மகன் என்ற முறையில் கடமைகளைத் தவறாது செய்பவராக,

பலவீனமானவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடுபவராக, சுயநலமான சமூக விரோதமிக்க செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிரானவராக,

அவர்களது முகமூடிகளைக் கிழிப்பவராக, முடிவில் தனது காதலியுடனும் தாயுடனும் மகிழ்ச்சியாக வாழ்பவராக, தாயைக் கடவுளுக்கு நிகராகக் கருதுபவராக, அவரது கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அம்மாதான் எல்லாமே.
அதேபோல, அவர் ஏற்று நடித்த பெரும்பாலான பாத்திரங்கள் தீங்கான பழக்கவழக்கங்கள் இல்லாததாக வடிவமைக்கப்பட்டன.

தனது வாழ்க்கையிலும், திரையிலும் அவர் ஒருபோதும் புகைத்ததுமில்லை; மது அருந்தியதுமில்லை.

நீதிநெறியுடன் விளங்குகிற, கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவுகிற, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களை எதிர்த்துப் போராடுகிற ஒரு மனிதராகவே அவரது பாத்திரங்கள் இருந்தன.

அவரது படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம், அனைத்துமே சிறந்த பொழுபோக்குச் சித்திரங்கள்.

வேகமாக நகரக் கூடிய, எங்கும் தடையில்லாத, சொல்ல வேண்டிய நீதியை இனிப்பில் தோய்க்கப்பட்ட மருந்துபோலச் சாமர்த்தியமாக கட்டமைக்கப்பட்ட திரைக்கதை போன்றவை அவரது படங்களின் சிறப்பம்சம்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட, எம்.ஜி.ஆர் படங்களில் அவரது ஆதிக்கம் அதிகமிருக்கும். தனது வணிகம், கலை மட்டுமல்ல, தனக்கான ரசிகன் யார் என்பதையும் நன்றாகத் தெரிந்த தொழில்நுட்பக் கலைஞர் அவர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் என்ற பெயரில் சொந்தமாகக் குழுவொன்றை நடத்திவந்தபோது, தன்னிடம் பணியாற்றியவர்களுக்காக அவர் சென்னைப் புறநகர்ப் பகுதியொன்றில் மிகப்பெரிய அளவில் நிலம் வாங்கத் திட்டமிட்டிருந்தார்.

சந்தை விலையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை, எம்.ஜி.ஆருக்குத் தரத் திட்டமிட்டிருந்தார் அப்போதிருந்த பெரிய தொழிலதிபர் ஒருவர்.
சுமார் 10 ஏக்கர் நிலத்தைத் தனக்கென வைத்துக்கொண்டு, மீதமுள்ள நிலத்தைத் தனது மன்றத்தில் இருப்பவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று அவர் நினைத்திருந்தார்.

அந்த இடத்துக்குச் செல்லும் வரை மட்டுமே அந்த எண்ணம் நிலைத்திருந்தது. தான் வாங்கவிருந்த நிலத்தின் அருகே குடிசைகளில் ஏழைகள் பலர் தங்கியிருந்ததை எம்.ஜி.ஆர் கண்டார்.

அந்த நிலத்தை வாங்கினால், வேறு எங்கும் போக முடியாமல் அவர்கள் தவிப்பார்கள் என்பதையும் உணர்ந்திருந்தார்.

“இல்லை சார், இந்த முயற்சியை நிறுத்தி விடுவோம். ஏழைகளின் கண்ணீரில் எதையும் கட்ட நான் விரும்பவில்லை” என்று அந்தத் தொழிலதிபரிடம் மறுப்பு தெரிவித்து விட்டார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு, அந்த தொழிலதிபர் ஆச்சர்யம் அடைந்தார். எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால், லாபகரமாக அவரிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கியிருக்க முடியும்.

ஆனால், பணத்தையும் லாபத்தையும்விட மனிதர்களின் உணர்வுகளுக்கே அவர் முக்கியத்துவம் தந்தார்.

தான் நடிக்கும் படங்களில் பணியாற்றுபவர்கள் மீது, அவர் காட்டிய அன்பும், நட்பும் அசாதாரணமானது, லைட் பாய், உதவியாளர்கள் என்றில்லை, மிகக்குறைவான ஊதியம் பெறும் எந்தப் பணியாளராக இருந்தாலும், உரிய வசதிகள் செய்து தராவிட்டால் படத்தயாரிப்பாளரிடம் முறையிடுவார்.

அவர்களுக்குச் சரியான உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று கவனிப்பார்.

பல சினிமா நட்சத்திரங்கள் கண்களில், அத்தகைய பணியாளர்கள் தென்படவே மாட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் அப்படியல்ல. அடிக்கடி அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது அவரது வழக்கம்.

தன்னுடைய படங்களுக்காகக் கடினமாக உழைப்பார் எம்.ஜி.ஆர். கதை எழுதப்படுவதில் இருந்தே அந்தப் பணி தொடங்கிவிடும்.

படத்தின் டைட்டிலை முடிவு செய்வதற்கு, பாடல் வரிகளை உள்வாங்கி அவற்றை இசையமைக்க அனுமதிப்பதற்கு அவர் நேரம் எடுத்துக் கொள்வார்.

இந்த அனுபவம் எழுத்தாளர் ராண்டார் கைக்கும் உண்டு. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும் ‘கேபரே’ பாடல் ஒன்றின் பாதி தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் இடம்பெறுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது.

ராண்டார் கை

பல மாதங்களுக்குப் பிறகே இவர் எழுதிய ஆங்கில வரிகளுக்கு ஒப்புதல் தந்தார் எம்.ஜி.ஆர்.

அந்த அளவுக்கு நேர்த்தியான படைப்பு படைக்க வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்துவாா்.

எதேச்சதிகாரம் கொண்டவராக, கர்வமிக்கவராக, பழி வாங்கும் எண்ணம் கொண்டவராகச் சில விமர்சகர்கள் அவரைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தாலும், அவரது புகழ் பிம்பம் எப்போதும் போல ஒளிமிக்கதாகவும், தீர்க்கமாகவும் விளங்கி வருகிறது.

எம்.ஜி.ஆர் எனும் ஆச்சர்யம், இந்த உலகை ஈர்த்தது பெரிய விஷயமில்லை.
இப்போது எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை.

ஆனால், அந்தப் புகழும், பிரபல்யமும் இன்றும் உயிர்ப்புடன் விளங்குவதன் மூலமாக நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் அவரது இருப்பு தொடர்கிறது..!

You might also like