எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.
இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரின் தாயார். ராஜகுமாரியின் தாயாருக்கு தனலட்சுமி சகோதரி.
தமிழ் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி.ஆர் ராஜகுமாரி.
’மன்மதலீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்’ என்று ’ஹரிதாஸ்’ (1944) படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் இவரைப் பார்த்துத் தான்.
’சந்திரலேகா’ படத்தில் எம்.கே.ராதாவுடனும் ரஞ்சனுடனும், ’குலேபகாவலி’(1955)யில் எம்.ஜி.ஆரின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி.
இவருடைய தம்பி மனைவியான பி.எஸ்.சரோஜா தான் எம்.ஜி.ஆரின் கதாநாயகியாக நடித்த புதுமைப்பித்தனில் ராஜகுமாரி “மன மோகனா, மறந்து போவேனா” பாட்டு பாடி பாலையாவை ஆட்டுவிப்பார்.
இவரிடம் ஒரு விஷேச நளினம் இருந்தது. சல்லடை போட்டுத் தேடினாலும் அதை வேறு எந்த ஒரு நடிகையிடமும் காணவே முடியாது.
அவர் பார்க்கும் ’பார்வை’ மிடுக்குடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. அதற்கு அந்த அற்புதமான கண்கள் தான் மூலதனம். வாள் விழி வீச்சு!
வில்லியாக வரும்போது அந்தக்கண்களில் கொப்பளிக்கும் ’குயுக்தி’, கதாநாயகியாக வரும்போது அதே கண்களில் தெறிக்கும் ’குறும்பு’.
’குலேபகாவலி’, ’புதுமைப்பித்தன்’ இயக்குனரான தன் தம்பி ராமண்ணாவின் ’பெரிய இடத்துப் பெண்’ணில் (1963) எம்.ஜி.ஆருக்கு அக்காவாக நடித்தவர்.
தன்னை கற்பழித்த எம்.ஆர்.ராதாவை நள்ளிரவில் கொல்ல வருவார். அந்த காட்சிகள் திகிலாக இருக்கும்.
நடிகை ராஜகுமாரி தன் பெயரிலேயே கட்டிய தியேட்டர் தி. நகர் பாண்டி பஜாரில் அந்தக்காலத்தில் ஒரு லேண்ட் மார்க். ராஜகுமாரி பஸ் ஸ்டாப்.
சினிமா இயக்குனர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் பதற்றமாக படபடப்பாக, கோபமும், ஆவேசமுமாக பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் ராமண்ணா செட்டில் இருப்பதே தெரியாது. அவ்வளவு அமெரிக்கையானவர்.
சாந்த சொரூபி. இடி போன்ற பிரச்னைக்கும் கலங்கவே மாட்டார். அப்படிப்பட்டவரின் தமக்கை என்பதும் ராஜகுமாரிக்கு பெருமை சேர்க்கிற விஷயம் தான்.
தன் தம்பி ராமண்ணாவின் மூன்று மனைவிகளையும் அரவணைத்து, குடும்பத்தில் சிக்கல் இல்லாத நிம்மதி நிலவ, நேர்த்தியான திறமையுடன் செயல்பட்டவர்.
சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு புண்ணியவதி.
தன் குடும்பத்திற்காக, தம்பிக்காக அவர் தன்னை தியாகம் செய்த மெழுகுவர்த்தி. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். கடைசிக் காலத்தில் முழுக்க ஆன்மீக ஈடுபாட்டில் இருந்தவர்.
– நன்றி: ஆர்.பி. ராஜநாயகம்