இராவண கோட்டம் படத்தில் காலில் ரத்தம் வர நடித்தேன்!

நடிகர் ஷாந்தனு உருக்கம்

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகை கயல் ஆனந்தி, “மூன்று ஆண்டு கால உழைப்பு. யாரும் விட்டுக்கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர்.

அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது” என்று உற்சாகமாகப் பேசினார்.

நடிகர் ஷாந்தனு, “படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.

இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டியிருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன்.

நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன்.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை.

நான் மட்டும் இல்லை அனைவரும் இதுபோல கஷ்டப்பட்டுதான் நடித்தனர்.

இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும்” என்றார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் இளவரசு, “இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர்.

படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது, அதற்கான காரணங்களையும் பேசியுள்ளனர். இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும்.

ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன். அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன். அது அவரது வீடுதான்.

பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறும்” என்று வாழ்த்தினார்.

You might also like