தமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜன்!

1918-ல் வெளியான தமிழ்த் திரையுலகின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், எழுத்தாளர் இந்தியா ஃபிலிம் கம்பெனி ஸ்டூடியோ அதிபர் மற்றும் பெரும்தொழிலதிபர் ஆர்.நடராஜ முதலியார் நினைவு தினம் இன்று (03 மே, 1971).

1885-ல் வேலூரில் பிறந்த இவர், சென்னையில் தனது உறவினரான எஸ்.எம்.தர்மலிங்கம் என்பவருடன் இணைந்து ‘Watson & Company’ என்ற பெயரில் ஒரு இறக்குமதி நிறுவனத்தை துவக்கினார்.

அதன்மூலம், வெளிநாடுகளில் இருந்து சைக்கிள்களை இறக்குமதி செய்து ரூ.15 முதல் ரூ.25 வரையுள்ள சைக்கிள்களை விற்பனை செய்து வந்தார்.

பின்னர் 1911-ல் Romar Dan & Company என்ற கம்பெனியை விலைக்கு வாங்கி அமெரிக்காவிலிருந்து கார்களை இறக்குமதி செய்து ரூ.800 முதல் ரூ.1000 வரையுள்ள கார்களை விற்பனை செய்து வந்தார்.

மஹாராஷ்ட்ராவில் தாதா சாகேப் பால்கே தயாரித்த இந்தியாவின் முதல் திரைப்படமான 1913 ல் வெளியான ராஜா அரிச்சந்திராவை சென்னை கெயிட்டி தியேட்டரில் 1914 ல் பார்த்தபின், இவருக்கு திரைப்படம் எடுக்கும் ஆசை வந்தது.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் கர்சன் பிரபுவைப்பற்றி ஆவணப்படம் எடுத்த ஸ்டிவர்ட் ஸ்மித்தின் நட்பு இவருக்கு கிடைத்தது.

அவரிடம் உதவியாளராக பணிபுரிந்து திரைப்பட நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். இதன் காரணமாக தனது கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்றுவிட்டு, திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார்.

1917-ல் சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் இந்தியா ஃபிலிம் கம்பெனி என்ற ஸ்டூடியோவை உருவாக்கி தென் இந்தியாவில் தனது முதல் திரைப்படமாக ‘கீசக வதம்’ என்ற தமிழ் திரைப்படத்தை எடுத்து எல்லிஸ் ரோடு – வாலாஜா ரோட்டுக்கு அருகில் இருந்த எல்பின்ஸ்டோன் தியேட்டரில் 1918-ல் வெளியிட்டார்.

ரூ.35,000 முதலீட்டில் உருவாக்கிய இத்திரைப்படம் ரூ.50,000 வசூலை ஈட்டியது. இதற்காக லண்டனில் இருந்து ஃபிலிமை இறக்குமதி செய்து, பெங்களூரில் இவரே ஃபிலிம் லேபாரட்டரி ஒன்றை உருவாக்கி படத்தை பிரிண்ட் எடுத்தார்.

இத்திரைப்படத்தில் இவரும், ராஜ முதலியார் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்தனர்.

இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்பட அனைத்தும் இவரே. கதை மட்டும் சி.ரங்கவடிவேலு என்பவருடையது.

இது மௌனப்படம் என்பதால் தற்போது ஆங்கிலப் படங்களுக்கு காட்டப்படும் சப்-டைட்டில் போல், அன்று தனி புரஜெக்டர் மூலமாக திரையில் தெரிவதற்கு வசதியாக தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் காட்டப்பட்டது.

இதை எழுதியவர்கள் சென்னையின் பிரபல மருத்துவர் குருசாமி முதலியார் மற்றும் பேராசிரியர் திருவேங்கட முதலியார்.

ஹிந்தி சப்-டைட்டில் எழுதியவர் மஹாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி (இவர் மூதறிஞர் ராஜாஜியின் மருமகனாவார்)

இதன் பின்னர் R.நடராஜ முதலியார், திரௌபதி வஸ்திராபரணம், மயில் ராவணா, லவ குசா, காலிங்க மர்தனம், ருக்மணி சத்யபாமா மற்றும் மார்க்கண்டேயா போன்ற திரைப்படங்களை எடுத்தார்.

1923-ல் இவரது ஸ்டூடியோ தீயில் அழிந்ததில் பெரும் நஷ்டமடைந்தார்.
பின்னர் தயாரிப்பாளர்களின் ஆதரவு கிடைக்காததால் திரைப்படத் துறையிலிருந்து வெளியேறினார்.

கடந்த 1970-ம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற அந்த விழாவில், இவரின் சாதனைகளைப் பாராட்டி இவருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

கடந்த 1971-ல் சிறுநீரக பாதிப்பு நோயினால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like