பாஜகவை பதற்றமடைய வைத்துள்ள கர்நாடக தேர்தல்!

நமது அண்டை  மாநிலமான கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் 224 தொகுதிகள்.

மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் நின்றாலும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே தான் நிஜமான போட்டி.

அடுத்த  ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள், தேசிய அளவில் கூட்டணியை தீர்மானிப்பதாக அமையும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாகும்.

இரண்டு தேசிய கட்சிகளுக்குமே இந்த தேர்தல் அமிலச் சோதனையாகும்.

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை கட்டமைக்கும்  முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியுள்ளார், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

கர்நாடகத் தேர்தலில், காங்கிரஸ் வென்றால், அந்தக் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புகள் உண்டு.

மாறாக பா.ஜ.க.வெற்றி பெறுமானால், நிதிஷ் முயற்சிகள் கானல் நீராகி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் பின்னடைவு ஏற்படலாம்.

பாஜக  பலம் பெறலாம்.

தென் மாநிலங்களில் பா.ஜ.க. வலுவாக உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம். தென்னகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த முதல் மாநிலமும் இதுவே.

அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள நிலையில், டிக்கெட் கிடைக்காத பா.ஜ.க. மூத்த தலைவர்கள், காங்கிரசுக்கு தாவிய வண்ணம் உள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவேதி ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்.

கர்நாடகத்தில் லிங்காயத் சமுதாய ஓட்டுகள் கணிசமாக உள்ளது. அந்த வகுப்பைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வின் முகமாக இருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக லிங்காயத் சமுதாயத்தின் பெரும் தலைவராக இருப்பவர், ஜெகதீஷ் ஜெட்டர். அவர், காங்கிரசில் ஐக்கியமாகி  இருப்பது பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

இதனால், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட எடியூரப்பாவிடம் பா.ஜ.க. மேலிடம் திடீர் பாசம் காட்டுகிறது.

’80 வயது ஆகி விட்டதால் ஆட்சியிலும் இடம் இல்லை.. கட்சியிலும் பதவி கிடையாது’’ என எடியூரப்பாவை டெல்லி மேலிடம் ஓரம் கட்டி மூலையில் வைத்திருந்தது.

லிங்காயத் சமூக ஓட்டுகளுக்காக எடியூரப்பவை மீண்டும் முன் நிறுத்தியுள்ளார்கள் மோடியும் அமித்ஷாவும்.

முன்னொரு காலத்தில் ஆட்சிகள் கவிழ்ந்து புதிய அரசுகள் பதவி ஏற்பதில் புதுச்சேரி மாநிலம் தான் ‘சாதனை’ படைத்திருந்தது. அதனை முறியடித்து விட்டது கர்நாடகம்.

23 ஆண்டுகளில் 19 முதலமைச்சர்களை பார்த்துள்ளனர் அந்த மாநில மக்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்  நான்கு முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

பெரும்பான்மை இல்லாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற எடியூரப்பா, 6 நாட்களில் பதவி விலகினார்.

அடுத்து, காங்கிரஸ் துணையுடன் அரியணை ஏறிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி 14 மாதங்கள் நீடித்தார். மீண்டும் பொறுப்பேற்ற  எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டுகளால், சில மாதங்களில் ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பசவராஜ் பொம்மை அங்கு இப்போது முதலமைச்சராக உள்ளார்.

நாட்டிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் குரோர்பதிகளாக இருப்பது கர்நாடக மாநிலத்தில் தான்.

பாஜக எம்.எல்.ஏ. ஒருவரது சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வும் சரி, காங்கிரசும் சரி, முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன் நிறுத்தவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

104 இடங்களில் பா.ஜ.க.வென்றது. ஆனால் 36  சதவீத ஓட்டுகளையே பெற முடிந்தது.

80 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவீத வாக்குகள் கிடைத்தன.

ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, பா.ஜ.க. தலைவர்கள் விலகல், ராகுல் நடைப்பயணம் போன்ற காரணங்களால், ஆட்சியை சுலபமாக கைப்பற்றி விடலாம் என முழு நம்பிக்கையில் உள்ளது காங்கிரஸ்.

நம்பிக்கை பலிக்குமா?

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13 ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருப்போம்.

-பி.எம்.எம்.

You might also like