“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’
– லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில இசைத் தொகுப்புகள் என்று இசையில் உயரம் தொட்டிருக்கிற இளையராஜாவுக்குப் பின்னால் இருப்பது ஆச்சர்யப்படுத்தும்படியான உழைப்பு.
வெளிக்கவர்ச்சியில் தன்னை விரயமாக்கிக் கொள்ளாத கவனம்.
எளிமையான, ஒரு கிராமீயமான அமைதி.
மேஸ்ட்ரோ அறிவிப்பு வந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரத்திற்குச் சென்றிருந்தேன்.
அப்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் எளிமை மாறாத நிலையில் இருந்தது அவர்களுடைய பூர்வீக வீடு.
ராசய்யாவான ராஜாவைப் பற்றிப் பேசும்போது கிராமத்தில் பலருக்கும் பூரிப்பு. அவருடைய நினைவுகளில் பசுமையான கொடியைப் போலப் படர்ந்திருந்தார் ராஜா.
சிறுவயதில் சிறு பவுடர் டப்பாவில் கம்பியைக் கட்டி அதில் வருகிற இசையை ரசித்ததைப் பற்றி…
கிராமத்துக்கு டேப் ரிக்கார்டர் என்கிற புதிய தொழில்நுட்பம் ஒரு வீட்டுக்குள் வந்த போது ராசா வியப்புடன் வேடிக்கை பார்த்ததைப் பற்றி…
கிராமத்துக்குள் வந்து ராசா சகோதரர்களுக்கு நல்வாழ்க்கு சொல்லிவிட்டுப் போன குறி சொன்ன வினோதம் பற்றி…
பாரதிராசா ஊருக்கு வந்துபோனதைப் பற்றி…
பாவலர் வரதராசனைப் பற்றி…
– இப்படி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன அந்த பாசாங்கற்ற மனிதர்களிடம்.
ராஜாவின் பிறந்த சகோதரியான கமலம்மாளிடம் பேசினபோது தம்பியைப் பற்றிப் பாசம் விரிந்தது அவருடைய பேச்சில்.
“எங்க அப்பா இருக்கிறப்போ .. ராசாவுக்குப் பத்து வயசிருக்கும். நாங்க எல்லோரும் சேர்ந்து தான் இருந்தோம்.
சின்ன வயசிலே ராசாவுக்கு ஜாதகம் பார்த்தப்பவே என் பொண்ணைத் தான் (அக்கா மகள்) கட்டிக்கணும்னு சொல்லிட்டாங்க.
அது மாதிரி சென்னைக்குப் போய் மியூசிக் உதவியாளராகச் சேர்ந்ததும் என் பொண்ணு ஜீவாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தம்பி.
ராசய்யா சின்ன வயசிலிருந்து இப்படித் தான். ரொம்ப அமைதியான சுபாவம். யார் கூடவும் எந்தப் பிரச்சினைக்கும் போனதில்லை.
சின்ன வயசிலேயே பெண் குரலில் சுசீலா மாதிரியே பாடும். ட்யூன் போடும். ஏதாவது முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கும்.
கல்யாணம் பண்ணி-கார்த்திக் பிறந்த பிறகு தான் ‘அன்னக்கிளி’ படம் புக் ஆச்சு. பிறகு வளர்ந்துட்டாங்க.
இன்னைக்கும் அதே அமைதியான சுபாவம். குணம் எதுவும் மாறலை.
குடும்பத்தோடு ரொம்பப் பிரியமாக இருக்கும் தம்பி. ஆனா நேரடியாப் பார்த்தா தெரியாது.
யாருக்கும் எந்த இம்சையும் பண்ணாம-தானா தன்னை வளர்த்துக்கிட்டு-பொழுதுக்கும் ஓயாம உழைச்சு-இன்னைக்கு வெளிநாடெல்லாம் போற அளவுக்கு தம்பி இருக்குதுன்னா… என்ன சொல்றதுங்க.. தாங்க முடியலை.. (கண் கலங்குகிறார்)
ஏதோ எங்க குடும்பத்திலே வந்து பிறந்த தெய்வக் குழந்தையாத் தாங்க நினைச்சுக்கிறோம்..’’
மதுரை மண்ணுக்கே உரித்தான மொழியுடன் தம்பியை உச்சிமுகர்ந்தார் கமலம்மாள்.
மதுரை ( இப்போது தேனி ) மாவட்டத்தில் இருக்கிற பண்ணைப்புரத்தில் இருந்த கிராமத்து மனுஷரான ராசய்யாவை ‘இளையராஜா’வாக ஆக்கியது எது?
இன்றைக்கு அதையும் தாண்டி ஒரு முகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது எது?
அவரது கனவுகள் எப்படிச் செயல்வடிவம் பெற்றன?
சட்டென்று நிகழ்ந்த விஷயமா இது ?
அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பும், தன்னுடைய படைப்பு மீதான அதீத ஈடுபாடும் தான் இதற்கு அடித்தளம்.