த்ரில்லர் வகைமை திரைப்படங்களிலேயே பல வகை உண்டு. அவற்றில் புதிரான, மர்மமான, மிகப்பழமையான, மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிப் பேசும் படங்கள் சிறிதும் பிசகின்றி இருந்தால் மட்டுமே ரசிகர்களால் ஆராதிக்கப்படும்.
புதுமுக இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், பிரம்மாஜி, சுனில், ராஜிவ் கனகலா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விருபாக்ஷா’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது, நல்லதொரு ‘மிஸ்டிக் த்ரில்லர்’ அனுபவம் கிடைக்குமென்ற நம்பிக்கை பிறந்தது.
படம் பார்த்து முடிந்தபிறகு, அது பலப்பட்டதா?
ருத்ரவனத்தின் கதை!
ஆந்திராவில் இருக்கும் ருத்ரவனம் எனும் கிராமம். 1979ஆம் ஆண்டு, அந்த ஊருக்கு வெங்கடாசலபதி எனும் மனிதர் குடும்பத்துடன் வருகிறார். அப்போது, அந்த கிராமத்தில் குழந்தைகள் பலர் பலியாகின்றனர். அந்த மர்மநோய் எப்படி வந்தது என்று எவருக்கும் தெரியவில்லை.
அப்போதுதான், வெங்கடாசலபதி மந்திரங்கள் ஓதி ஏவல் சூனியம் செய்கிறார் என்ற தகவல் ஊர் முழுக்கப் பரவுகிறது. வீட்டில் ஒரு சிறுமியின் பிணத்தின் முன் அமர்ந்து அவர் மந்திரங்கள் ஓதும்போது, ஊர் மக்கள் அத்துமீறி நுழைகின்றனர்.
அவரையும் அவரது மனைவியையும் ஒரு மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரிக்கின்றனர்.
அப்போது, ‘இன்னும் 12 ஆண்டுகள் கழித்து இந்த ஊரே சுடுகாடாக மாறும்’ என்று அலறுகிறார் வெங்கடாசலபதியின் மனைவி.
பெற்றோர் பலியாவதை நேரில் காணும் மகன், எந்நேரமும் மந்திரங்களை ஓதிக்கொண்டே இருக்கிறான்.
அதைக் கண்டு பயப்படும் ஊர் மக்கள், ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அவனைச் சேர்க்கின்றனர். அதோடு, அவனை மறந்துவிடுகின்றனர்.
1991ஆம் ஆண்டு. இரவு நேரம். வயற்காட்டில் காவல் மேற்கொள்ளச் செல்லும் ஒரு முதியவரை காக்கையொன்று தாக்குகிறது. அதன்பிறகு, பித்து பிடித்தவர் போல அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார்.
அடுத்த நாள் காலையில், ருத்ரவனத்திற்குத் தன் தாய் மற்றும் நண்பனுடன் வருகிறார் சூர்யா (சாய் தரம் தேஜ்). அவர்களது கார் மீதும், முன்பே சொன்னது போல ஒரு காக்கை வந்து தாக்குகிறது.
தனது பூர்விக வீட்டை ஏழ்மையில் இருக்கும் உறவினர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கிறார் சூர்யாவின் தாய். அப்போது, விரைவிலேயே சூர்யாவுக்குப் பெண் பார்க்க வேண்டுமென்றும் சொல்கிறார்.
அன்றிரவு, ஒரு பெண் கோழி திருடுவதைக் காண்கிறார் சூர்யா. அவரைக் கையும் களவுமாகப் பிடித்தாலும், ஊராரிடம் காட்டிக் கொடுப்பதில்லை. அந்த பெண்ணின் பெயர் நந்தினி (சம்யுக்தா மேனன்). ஊர் தலைவரின் மகள்.
பார்த்தவுடன் நந்தினி மீது சூர்யா காதல் வயப்பட, அவர் அதனை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில், ருத்ரவனத்தில் இருக்கும் அம்மன் கோயிலில் திருவிழா நடக்கிறது.
காக்கை தாக்கி காணாமல் போன முதியவர், ஒரு நடைபிணம் போல ஊர் திரும்புகிறார். நேராக அம்மன் கோயில் கருவறைக்குச் சென்று ரத்த வாந்தி எடுத்து உயிரை விடுகிறார்.
அதைக் கண்டு ஊரே அதிர்ச்சியடைய, எட்டு நாட்களுக்கு ஊர் மக்கள் எவரும் வெளியே செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதனை மீறினால், உயிர்ப்பலி ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார் பூசாரி.
வெளியூரைச் சேர்ந்தவர் என்ற முறையில், சூர்யாவும் அவரது தாயும் வெளியேற்றப்படுகின்றனர்.
ஆனால், நந்தினியின் உயிர் காக்கும் மருந்தொன்றைத் தருவதற்காக மீண்டும் ஊருக்குள் வருகிறார் சூர்யா.
அப்போது, மிகச்சரியாக ஊரைச் சுற்றி எல்லைக்கோடு வரையப்பட்டு, வேலி இடப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு ஊரே அமைதியாக இருந்தாலும், அதன்பின்னர் இரண்டு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சூர்யாவின் உறவினரும் அதில் ஒருவர்.
ஈமச்சடங்கின்போது, தனது உறவினரின் மரணத்தில் மர்மம் இருப்பதைக் கண்டறிகிறார் சூர்யா.
ஊர் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்ற யாரோலோ இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக உணர்கிறார்.
கட்டுப்பாட்டை மீறியது யார்? எதனால் கிராமத்தினர் அடுத்தடுத்து பலியாகின்றனர் என்பதை சூர்யா கண்டறிவதே ‘விருபாக்ஷா’ படத்தின் கதை. அவர்தான் நாயகன் எனும்போது, நிச்சயம் தீர்வைக் கண்டிருப்பார் என்பதைச் சிறு குழந்தையும் கூட சொல்லிவிடும்.
இது முழுக்க முழுக்க ருத்ரவனம் எனும் கற்பனைக் கிராமத்தில் நடக்கும் கதை. ஆனால், அப்படியொரு ஊர் இருந்ததாக நம்ப வைப்பதுதான் இயக்குனர் கார்த்திக் தண்டுவின் வெற்றி. அதுவே, கிண்டல் கேலி கூச்சல் ஏதும் இல்லாமல் தியேட்டரை நிசப்தத்தில் ஆழ்த்துகிறது.
அபாரமான காட்சியனுபவம்!
ஒரு சூப்பர்ஹீரோ பாத்திரத்திற்காக ஒரு இளம் நாயகன் என்னவெல்லாம் செய்ய முனைவாரோ, சாய் தரம் தேஜ் அதையெல்லாம் செய்திருக்கிறார்.
ஆனால், இந்த படத்தில் அவரது பாத்திரம் அசகாய சூரன் இல்லை. அதனை உணர்ந்து, எங்குமே ஹீரோயிசம் காட்ட முற்படாதது நல்ல விஷயம்.
வாத்தியில் பொம்மை போல உலா வந்த சம்யுக்தா, இதில் நாயகி. கவர்ச்சி ஒரு படி தூக்கல் என்றாலும், அவரது பாத்திரத்திற்கு இதில் முக்கியத்துவம் அதிகம்.
இந்த படத்திற்குப் பிறகு, தொடர்ச்சியாக அவர் தெலுங்கில் நடிப்பார் என்று நம்பலாம்.
டாக்டராக வரும் பிரம்மாஜி, ஊர் தலைவராக வரும் ராஜிவ் கனகலா, அகோரியாக வரும் அஜய், பணக்கார மனிதராக வரும் சுனில் உள்ளிட்டோருக்கு விருபாக்ஷாவில் வித்தியாசமான பாத்திரங்கள் கிடைத்துள்ளன.
பூசாரியாக வரும் சாய் சந்த், அவர்களில் ஒருவராகி நம்மை ஈர்க்கிறார். சோனியா சிங், ஜான்சி என்று இதில் வரும் பெண் பாத்திரங்கள் மிகக்குறைவு.
நூற்றுக்கணக்கானவர்கள் திரையில் இடம்பெற்றபோதும், முக்கியப் பாத்திரங்கள் மட்டுமே நம் மனதில் பதிய திரைக்கதை அமைப்பும் ஒரு முக்கியக் காரணம்.
அந்த வகையில், ‘உப்பெண்ணா’வில் தனது உதவியாளர் புச்சிபாபு சனாவுக்கு வழிகாட்டிய இயக்குனர் சுகுமார் இதில் கார்த்திக் தண்டுவின் கதைக்கு திரைக்கதை அமைத்துத் தந்து நல்ல அடித்தளம் அமைத்திருக்கிறார்.
குறிப்பாக, கிளைமேக்ஸ் திருப்பத்திற்கான குறிப்புகளைத் தொடக்கத்திலேயே தந்திருப்பது அவரது மேதைமையைக் காட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீன் பங்களிப்பு, அனைத்து பிரேம்களையும் செறிவுமிக்கதாக ஆக்க உதவியுள்ளது.
அதில் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் பங்கும் உண்டு. சொல்லப் போனால், மொத்தக் கிராமத்தையுமே செட் அமைத்திருப்பது சிறப்பு.
படத்தொகுப்பாளர் நவீன் நூலி, ஒவ்வொரு காட்சியையும் அளவாகச் செதுக்கியிருக்கிறார். யூடியூப்பில் இருக்கும் ‘கலாலோ’ பாடல் படத்தில் இல்லை. அது வேகத்தடை என்று நவீன் கருதியிருக்கலாம்.
’நசாவுலே’ பாடல் எங்கேயே கேட்டது போன்று தோன்றினாலும் எளிதாக மனதில் நுழைகிறது. அதேநேரத்தில், ‘காந்தாரா’ போலவே இதிலும் பின்னணி இசையால் ‘த்ரில்’ ஊட்டியிருக்கிறார் அஜனீஷ் லோக்நாத்.
முழுக்க முழுக்கக் கற்பனையான ஒரு களம், கதாபாத்திரங்கள், யதார்த்தத்திற்குப் புறம்பான கதை என்றபோதும், அதனைக் கொண்டு ஒரு உலகத்தையே உருவாக்க முனைவதுதான் ஒரு இயக்குனரின் வெற்றி. அப்படிப் பார்த்தால், இயக்குனர் கார்த்திக் நல்லதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
மெல்லப் பரவும் பயம்!
குழந்தைகள் பார்க்க வேண்டாம் எனும் நோக்கில், ‘விருபாக்ஷா’வுக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
காட்சிகள் அகோரமாக இல்லை என்றபோதும், மிகச்சில இடங்களில் கொடூரமான முறையில் மரணிப்பதாகக் காட்டியிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.
காட்சியமைப்பில் வன்முறையோ, கோரமோ இல்லை; தேவையற்ற ஒலிகள் கொண்டு பயமுறுத்தவில்லை. ஆனாலும், திரைக்கதை நகர நகர மெல்ல நம் மனதில் பயம் பரவுகிறது. அதுவே ‘விருபாக்ஷா’வின் பலம்.
அது மட்டுமல்லாமல், அதர்வண வேதத்தில் சொல்லப்படும் மந்திர உச்சரிப்புகளைக் கொண்டு ஏவல் சூனியம் நிகழ்வதாகக் காட்டியிருப்பது பெரும்பாலான மக்களுக்குப் புதிதாகவே இருக்கும்.
‘என்னடா வேதம் கீதம்னு பூச்சாண்டி காட்டுறீங்க’ என்பவர்களுக்கு இக்கதை நிச்சயம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
பொழுதுபோக்கு திரைப்படம் என்ற வகையில், கிளைமேக்ஸில் புதிர் விடுபட்ட பின்னிருக்கும் பத்து நிமிடக் காட்சிகள் கொஞ்சம் போரடிக்கும்.
பின்பாதியில் நாயகனின் தாய், நண்பன் உள்ளிட்ட சில பாத்திரங்கள் தவிர்க்கப்பட்டிருப்பது கேள்விகளை ஏற்படுத்தலாம்; ஆனால், ருத்ரவனம் எனும் கிராமத்தை மட்டுமே திரைக்கதை மையப்படுத்துவதை அம்முடிவே நியாயப்படுத்துகிறது.
தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், இந்தியில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அது நிகழவில்லை.
ஓடிடியில் வெளியாகும்போது அது நிகழலாம் அல்லது விரைவில் தமிழில் தியேட்டர்களிலும் வெளியாகலாம்.
குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாது என்பதைத் தவிர, இப்படத்தை தியேட்டரில் பார்க்க வேறு எந்த தடையும் கிடையாது. அந்த வகையில், ஒரு திருப்திகரமான த்ரில்லராக அமைந்திருக்கிறது ‘விருபாக்ஷா’.
– உதய் பாடகலிங்கம்