தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ்.
பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான அவருடைய படைப்புதான், அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை, புது நெல்லு புது நாத்து உட்பட பல சூப்பர் ஹிட் படங்கள்.
மணிரத்னம் இயக்கிய இதயகோயில், அலைபாயுதே, ஆர்.வி.உதயகுமார் இயக்கிய சின்ன கவுண்டர் என ஆர்.செல்வராஜ் கதை எழுதிய படங்கள் நிறைய.
‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர், அகல்விளக்கு, பகவதிபுரம் ரயில்வே கேட், நீதானா அந்த குயில் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.
கதாசிரியராக வெற்றிபெற்ற ஆர்.செல்வராஜால் இயக்குனராக ஜெயிக்க முடியவில்லை.
பாரதிராஜா, இளையராஜா ஆகியோருக்கு முன்பே சினிமாவுக்காக வந்தவர் இந்த செல்வராஜ். இவர் அறையில் தங்கி இருந்துதான் இளையராஜாவும், பாரதிராஜாவும் சினிமா வாய்ப்பு தேடினார்கள்.
இளையராஜாவை பஞ்சு அருணாசலத்திடம் ‘அன்னக்கிளி’க்காக அறிமுகப்படுத்தியவரும் ஆர்.செல்வராஜ்தான்!
பஞ்சு அருணாசலமும் இவரும் ஒரே மேன்சனில் தங்கியிருந்து வாய்ப்புத் தேடியவர்கள்.
ஆர்.செல்வராஜ் கதை எழுதிய முதல் படம் ‘எங்கம்மா சபதம்’ என்றாலும் அடுத்தப் படமான ‘அன்னக்கிளி’ தான் அவர் பெயரோடு இணைந்து கொண்டது.
காரணம் ‘எங்கம்மா சபதத்’தை விட ‘அன்னக்கிளி’யின் கதையும் பாடல்களும் அடித்த ஆஹா ஹிட்!
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களிலும் கதாசிரியராகப் பணியாற்றிய ஆர்.செல்வராஜின் முதல் கதையை, கே.பாலசந்தர் படமாக்குவதாக இருந்தது. ஆனால், படமாகவில்லை.
சினிமா வாய்ப்புத் தேடி கொண்டே கதை விவாதங்களுக்கு சென்று வருவார்கள் பஞ்சு அருணாசலமும் ஆர்.செல்வராஜும். அப்போது கே.பாலசந்தர் அறிமுகம் கிடைத்தது.
அவர், “நல்ல கதை சொல்றியாமே, ஒரு கதை சொல்லு, படம் பண்ணலாம்” என்றார் ஆர்.செல்வராஜிடம். அப்போது பெண் நக்சலைட் பற்றிய கதை ஒன்றைச் சொன்னார் ஆர்.செல்வராஜ்.
கதை கே.பாலசந்தருக்கு பிடித்துப் போக, “இனி நீதான் என் ரைட்டர்” என்று சொல்லி, 2500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார் செல்வராஜுக்கு. பிறகு என்ன காரணத்தாலோ, அந்த கதை படமாகவில்லை.
அடுத்து எஸ்.பி.முத்துராமனுக்காக சொன்ன கதைதான் ‘எங்கம்மா சபதம்’. ஆர்.முத்துராமன், சிவகுமார், ஜெயசித்ரா உட்பட பலர் நடித்த இந்தப் படம் ஹிட்டாக, ஆர்.செல்வராஜின் சினிமா பயணம் இங்கிருந்து வேகமெடுக்கத் தொடங்கியது!
-அலாவுதின்