ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!

காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும்.

பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும் அளவுக்கு ‘கப்சா’க்களை நிறைத்திருக்கும். முக்கியமாக, லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்கும் விதத்தில் இருக்கும்.

புதுமுக இயக்குனர் ந.அருண் கார்த்திக் எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் ‘ரிப்பப்பரி’ படமும் அந்த வகையறா தான்.

அதையும் மீறி, இதில் சிலாகிக்கும் விதமான கதையமைப்பு உள்ளது. அது திரையில் மிகச்சரியாக வெளிப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம்.

‘ரிப்பப்பரி’யில் மாஸ்டர் மகேந்திரன், அராத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஸ்ரீநி, நோபிள் கே ஜேம்ஸ், மாரி, நக்கலைட்ஸ் தனம், சீரியல் நடிகர் செல்லா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்னொரு பேய்க்கதை!

கொடுமுடி எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றனர் சத்யராஜ் (மாஸ்டர் மகேந்திரன்), பாக்யராஜ் (மாரி), பாண்டிராஜ் (நோபிள் கே ஜேம்ஸ்) எனும் மூன்று நண்பர்கள்.

யூடியூப் சேனல் நடத்திவரும் சத்யராஜுக்கு ‘கோல்டு பிஷ்’ எனும் ஐடியில் இருந்து கமெண்ட் வந்து கொண்டேயிருக்கிறது.

அது ஒரு பெண் என்றும், அவரே தன் காதலி என்றும் சொல்கிறார் சத்யராஜ். அதனைக் கிண்டலடிப்பதையே வேலையாக வைத்திருக்கின்றனர் இருவரும்.

ஒருநாள் சத்யராஜை தேடி வருகிறார் அவரது நண்பரொருவர். ஒரு இளம்பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறார். தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உதவுமாறு கேட்கிறார்.

சத்யராஜ் மறுக்கவே, அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த இன்ஸ்பெக்டரை (செல்லா) தேடிச் செல்கிறார். செல்லும் வழியில், ஒரு பேய் அவரைக் கொடூரமாகக் கொல்கிறது.

அடுத்த நாள் காலையில், சத்யராஜ் உள்ளிட்ட மூவரையும் அழைத்து விசாரிக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது, அவ்வட்டாரத்திலுள்ள தலைக்கரை எனும் ஊரில் இது போல ஒரு கொலை நிகழ்ந்ததாக அவர்களிடம் கூறுகிறார்.

வேறு சாதியில் திருமணம் செய்பவர்களை ஆணவக் கொலை செய்யும் ஒரு பேயே அதற்குக் காரணம் எனவும், யாருடைய ஆன்மா அது என்று கண்டறிய தனக்கு உதவி செய்ய வேண்டுமெனவும் கேட்கிறார்.

கூடவே, பேய் இருப்பதைக் கண்டறிய ரோசி எனும் பொம்மையையும் தருகிறார். அந்த பொம்மைக்குள் ஒரு போலீஸ் நாயின் ஆன்மா இருக்கிறது.

முதலில் இன்ஸ்பெக்டர் கேட்ட உதவியைச் செய்ய மறுக்கும் சத்யராஜ், அடுத்த நாள் அதற்குச் சம்மதிக்கிறார். காரணம், ‘கோல்டு பிஷ்’ எனும் பெயரில் அவருக்கு காதல் மெசேஜ் அனுப்பும் பெண் தலைக்கரையில் வாழ்கிறார் என்பதே.

தலைக்கரையில் ‘பொன் கயல்’ எனும் பெயரில் ஒரு ஆலை இயங்குகிறது. அதனை நடத்துவது தனது காதலியின் குடும்பம் தான் என்று உணரும் சத்யராஜ், அப்பெண்ணின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். காலிங் பெல் அடிக்கிறார்.

கதவைத் திறந்தால், சத்யராஜின் நண்பரைக் கொலை செய்த பேய் எதிரே நிற்கிறது. பொன்கயலின் இறந்துபோன அண்ணன் தான் பேயாகத் திரிவதும் தெரிகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் ‘ரிப்பப்பரி’யின் மீதிப்பாதி.

பொன்கயலின் சகோதரர் எவ்வாறு வாழ்ந்தார், மரணித்தார் என்பதைச் சொல்லும் பகுதி ரசிகர்களுக்குச் சுவாரஸ்யம் தரும்.

இறந்துபோன பின்பு, ஒரு ஆன்மா ஏன் சுற்றித் திரிகிறது என்று பேய்க்கதையில் காரணங்கள் தேடும் ரசிகர்களுக்குத் தீனி போடும் விதமாகவும் அது இருக்கும்.

மிக முக்கியமாக, திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் விஷயங்களுக்கு மாறானதாக அக்கதை இருக்கும். அதுவே ‘ரிப்பப்பரி’யின் சிறப்பு.

‘ரிப்பப்பரி’யின் பலம்

ஒரு கமர்ஷியல் படத்தில் ரசிகர்களை ஈர்க்கும்விதமாக நடிக்கும் திறமை மாஸ்டர் மகேந்திரனிடம் உள்ளது.

இதில் அவரோடு மாரி, நோபிள் கே ஜேம்ஸ் சேர்ந்து தோன்றும் காட்சிகள் நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகின்றன. மூவரும் சம வயதினராகத் தெரிவதும் கூட அதற்கு காரணம் எனலாம்.

மகேந்திரனின் ஜோடியாக வரும் அராத்தி பொடியின் இருப்பு, இரண்டொரு காட்சிகளில் மட்டுமே தென்படுகிறது.

இந்த கதையில் ஸ்ரீநி மற்றும் காவ்யா அறிவுமணி ஜோடிக்கு முக்கியத்துவம் உள்ளது. அதற்கேற்றாற் போல இருவரும் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீநியின் நண்பராக வருபவர் முதல் வில்லன்களாக வரும் இளைஞர்கள் வரை அனைவருமே நம் கவனத்தைக் கவர்கின்றனர்.

பேய் உடன் பேசும் காட்சிகளில் நக்கலைட்ஸ் தனம் நம்மைக் குலுங்கி குலுங்கிச் சிரிக்க வைக்கிறார்.

தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, ‘ரிப்பப்பரி’யின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம். மிகச்சாதாரண பிரேம்களும் கூட அழகாகத் தென்படுவதற்கு அவரது உழைப்பே காரணம்.

இசையமைப்பாளர் திவாகர தியாகராஜன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பேய்க்கதைக்கான மிரட்சியை ஊட்டுவதோடு, ஆங்காங்கே சிரிக்க வைக்கவும் பின்னணி இசை உதவியிருப்பது அருமை.

கலை இயக்குனர் சுரேஷ், படத்தொகுப்பாளர் முகன்வேல் இவர்களோடு ஸ்டன்னர் சாம் குழுவினரின் உழைப்பும் ஒன்று சேர்ந்து, இந்த பேய்க்கதையை நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் திரையில் தோன்றியிருக்கும் கலைஞர்கள் அனைவருமே இக்கதையின் மீது நம்பிக்கை கொண்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அதுவே ‘ரிப்பப்பரி’யின் பலம்.

ஆனால், இயக்குனர் ந.அருண் கார்த்திக் அதனை முழுமையாக உணரவில்லை. அதுவே, இப்படம் அடைய வேண்டிய உயரத்தைக் குலைத்திருக்கிறது.

இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!

ஆணவக் கொலைகளைச் செய்யும் பேய், அது தெரிந்தும் தேமேவென இருக்கும் ஒரு குடும்பம், அந்த பேயைக் கண்டறிய உதவும் பொம்மை, பேயைத் தேடிச் செல்வதை சுற்றுலா போலக் கருதும் மூன்று இளைஞர்கள், அவர்களுக்கு உதவும் ஒரு போலீஸ் அதிகாரி என்று இப்படத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் குறித்து கேள்வி எழுப்ப முடியும்.

ஆனால், லாஜிக் மீறல்களைக் கண்டுகொள்ளக்கூடாது என்பதுவே ஒரு பேய்ப்படத்தைப் பார்ப்பதற்கான முதல் தகுதி. அதனால், மேற்சொன்னதையெல்லாம் மனதில் ஏற்றாமல் இருந்தால் மட்டுமே இப்படத்தைப் பார்க்க முடியும்.

கோவை வட்டாரத்தையொட்டி கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது. அதில் வெவ்வேறு சாதியினர் வாழ்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கதையின் மையக்கூறு அதுவே. ஆனாலும், வசனங்களில் வட்டார வழக்கு தெளிவுறக் கையாளப்படவில்லை.

இந்த படத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரை தவிர வேறு எவருமில்லை. அவரோ, அந்த பேயை பிடிப்பதைத் தவிர தனக்கு வேறு வேலையில்லை என்பது போல இருக்கிறார்.

பகலில் பேய் வராது என்று நம்பும் மக்களின் எண்ணத்தைச் சிதைக்கும்விதமாக, தனக்கு வேண்டும் என்ற நேரத்தில் மட்டும் வந்து போகிறது அந்த பேய்.

சென்னையில் இருந்து தலைக்கரைக்கு வர எவ்வளவு நேரமாகும் என்ற காலக்கணக்கை அந்த பேயும் பின்பற்றுகிறது.

அதனால், தொடக்கத்தில் நம் மனதில் எழும் பேய் குறித்த மிரட்சியை அடுத்தடுத்த காட்சிகளில் சுத்தமாக வழித்தெடுத்து விடுகிறார் இயக்குனர்.

இது போன்ற குறைகள் பளிச்சென்று நம் மனதில் தோன்றுவதுதான் ‘ரிப்பப்பரி’யின் பெரிய பலவீனம்.

பேய்க்கதையில் அந்த பேயின் பின்னணியோ, பிளாஷ்பேக்கோ தேவையில்லை என்பதை ‘யாமிருக்க பயமே’ போன்ற படங்கள் நிரூபித்துவிட்டன.

ஆனாலும், பேயின் முன்கதையைத் தெரிந்துகொள்ளும் ரசிகர்களின் ஆர்வம் இன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. அதற்கேற்றாற்போல, இப்படத்தில் வலுவான பிளாஷ்பேக் உண்டு.

இயக்குனர் ந.அருண் கார்த்திக், அந்த பிளாஷ்பேக்கை மனதில் வைத்துக்கொண்டு மொத்த திரைக்கதையையும் திருத்தி எழுதியிருக்கலாம்.

அதேபோல, முன்கதையில் வில்லனாக வருபவர்களின் பங்கையும் இன்னும் விரிவுபடுத்தியிருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சமாக இயக்குனர் மெனக்கெட்டிருந்தால் இப்போதிருப்பதைவிட சிறப்பான காட்சியனுபவமாக ‘ரிப்பப்பரி’ மாறியிருக்கும். படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like