மகத்தான பெண் ஆளுமை செளந்திரம் அம்மா!

அந்த சிறுமியின் பெயர் செளந்திரம். தமிழகத்தில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகள். அவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கணவர் டாக்டர்.செளந்திரராஜன் நல்ல மனிதர். மனைவியின் படிப்பை தொடர ஊக்குவிக்கிறார். துருதிர்ஷ்டவசமாக கணவர் இறந்து இளம் வயதிலேயே விதவையாகி விடுகிறார்.

பெற்றோர்கள் படிப்பை தொடரச் செய்கிறார்கள். டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் படித்து 1936ல் தனது 32 ஆம் வயதில் மருத்துவராகிறார்.

தன் கல்லூரி காலத்தில் சுசீலா நாயருடன் நட்பு கொண்டு அவர் மூலம் மகாத்மாவை சந்தித்து விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

மகாத்மா மூலம் கேரளாவைச் சேர்ந்தவரும் தலித் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருந்தவருமான மகாத்மாவின் சீடர் ராமச்சந்திரன் என்பவருடன் அறிமுகம் ஏற்படுகிறது. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இக்காதலை செளந்தரம் அம்மையாரின் பெற்றோர்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

காந்திக்கும் கொஞ்சம் தடுமாற்றமாகி விடுகிறது. இரண்டு பேரையும் அழைத்து நீங்கள் இருவரும் ஓராண்டுக்கு ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது அதற்குப் பிறகு இதைப் பற்றி பேசலாம் என்று சொல்லிவிடுகிறார்.

ஓராண்டுக்கு பின்னரும் அவர்கள் முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசிர்வதிக்கிறார்.

இருவரும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

நாட்டின் விடுதலை உறுதி செய்யப்பட்ட நிலையில், செளந்திரம் அம்மையார் அரசியலை விடுத்து சமூகப் பணியில் ஈடுபட்டால் சிறப்பாக இருக்கும் எனக் கருதிய மகாத்மா,

கஸ்தூரிபா காந்தி தேசிய அறக்கட்டளைக்கு தென்னிந்திய பிரதிநிதியாக அம்மையாரை நியமித்து கிராமப்புற வளர்ச்சிக்காக பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறார்.

அதன்படி இருவரும் திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி என்னும் கிராமத்தில் மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை செய்ததோடு, கிராமப்புற மேம்பாட்டுக்கான படிப்புக்களையும், காந்திய கொள்கைகளையும் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனத்தையும் தொடங்கினர்.

அதுதான் இன்று காந்தி கிராமப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. அவர்கள் தொடங்கிய கஸ்தூரிபா மருத்துவமனை சுமார் 300 படுக்கை வசதிகளுடன் கிராமப்புற மக்களுக்கு இன்றும் சேவை செய்து கொண்டிருக்கிறது.

அம்மையாரின் பணி இத்துடன் முடிந்துவிடவில்லை. 1952, 1957 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டார்.

1962-ல் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய துணை கல்வியமைச்சராக பணியாற்றினார்.

நாடு முழுவதும் கட்டாய இலவசக் கல்வியை இவர் தான் கொண்டு வந்தார். மாணவ பருவத்தில் சமூகப்பணி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தை கொண்டு வந்ததும் இவரே.

இப்படிப்பட்டவர்க்கு 1967 திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் லட்சம் வாக்குகள் மேல் வித்தியாசத்தில் தோல்வியை மக்கள் பரிசாக அளித்தார்கள்.

அத்துடன் அரசியலில் இருந்து ஒதுங்கி 1984-ல் தனது மரணம் வரையிலும் மகத்தான முறையில் சமூகப்பணி ஆற்றினார்.

TVS நிறுவனங்களின் நிறுவனர், TV சுந்தரம் ஐயங்கார் தான் செளந்திரம் அம்மையாரின் தந்தை.

Dr. T. S. Soundram (August 18, 1904 – October 21, 1984)

நன்றி; கணேசன் முகநூல் பதிவு

You might also like