இளையபெருமாள் ஆணையத்தைப் பற்றித் தெரியுமா?

– மணா

“மண்டல் கமிஷனைப் பற்றி அரசியல் உணர்வுள்ள பலருக்குத் தெரியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகள் தெரியும்.

ஆனால் தலித் மக்கள் நலனுக்காக இளையபெருமாள் கமிஷன் நியமிக்கப்பட்டதும், அந்தக் கமிஷன் முன்வைத்த கோரிக்கைகளும் எத்தனை பேருக்குத் தெரியும்?

தமிழக காங்கிரசில் முக்கியப் பதவி எல்லாம் வகித்த இளைய பெருமாளை 1993 ஆம் ஆண்டு ‘துக்ளக்’ பத்திரிகைக்காகச் சந்தித்தேன்.

அப்போது அவர் பகிர்ந்து கொண்டவை மறுபடியும் உங்கள் பார்வைக்கு:
*

“1964 ஆம் ஆண்டு மே மாதம் என் பெயரில் – ‘இளைய பெருமாள் கமிஷன்’ அமைக்கப்பட்டது. அதில் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை நேரடியாகப் பார்த்து, 1969 ஆம் ஆண்டு ஜனவரியில் முடித்து விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டது.
தீண்டாமையை ஒழிப்பது தான் இதில் முதல் பிரச்சினை.

தீண்டாமையை ஒழிக்க அந்தந்தப் பகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அடங்கிய ஒரு கமிட்டியை ஏற்படுத்தி, எந்தப் பிரச்சினை என்றாலும், அந்தக் கமிட்டி உடனே தலையிட்டாக வேண்டும்.

அதையும் மீறி அந்தப் பிரச்சினை நீடித்தால், அந்தக் கமிட்டியே வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இதனால் தீண்டாமைப் பிரச்சினை ஒழிய வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவது – பொருளாதாரப் பிரச்சினை.

தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த மக்களுக்காக சலுகைகள் முறையாக அவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. இது பரவலாக இருக்கிற விஷயம்.

அதனால் மாவட்ட ஆட்சித்தலைவரே தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும்.

சலுகைகள் வழங்குவதில் ஏதாவது பிரச்சினை என்றால், மாவட்ட ஆட்சித் தலைவரே சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சலுகைகள் போய்ச் சேரவில்லை என்றால், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களே முழுப் பொறுப்பு.

பிறகு கல்வி வசதி, மேற்படிப்பு வரை இலவசமாகக் கொடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி ஹாஸ்டல் என்று ஒதுக்கிவிடக் கூடாது.

இம்மாதிரிப் பல விஷயங்கள் அந்தக் கமிஷன் அறிக்கையில் இருந்தன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் அதன் நோக்கம்.

ஆனால் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி காலத்திலிருந்து இன்று வரை அந்தக் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்படவில்லை.

மண்டல் கமிஷனுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்த ஊக்கமும், எழுச்சியும் இளைய பெருமாள் கமிஷனைப் பொருத்தவரை, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இல்லாதது தான், அதன் பரிந்துரைகள் அமலாக்கப்படாததற்கு இன்று வரை தடையாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களை அப்படியே பழைய நிலையில் வைத்திருக்கத் தான் விரும்புகின்றன பல அரசியல் கட்சிகள். இதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் புதுவேகம் வந்திருக்கிறது.

படிப்பறிவு வந்ததால் யோசிக்கிறார்கள். தானும், தனது சமூகமும் அவமானப்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்துத் தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.

ஹிந்து மதவாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீது காட்டிய துவேஷம் தான் அவர்களை வேகம்பெறத் தூண்டியிருக்கிறது என்று சொல்வேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைந்தால், இளையபெருமாள் கமிஷன் அறிக்கையும் அமலாக்கப்பட்டுவிடும்”

– 1993 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வெளியான ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த – நான் (மணா) எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி

You might also like